ஆடம் லான்சா
ஆடம் லான்சா
துப்பாக்கி-1டிசம்பர் 14 ஆம் தேதி 2012 அன்று, அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது.
ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் தான் இந்த கொலைகளை துப்பாக்கியின் துணையோடு நடத்தியுள்ளான்.
வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆடம், அவனுடைய அம்மாவுடன் நியூட்டன் நகரில் வசித்து வந்துள்ளான். ஆதாமின் தந்தை பீட்டர் லான்சா, ஜி.ஈ. கேபிடல் நிறுவனத்தின் துணைத்தலைவராக உயர் பொறுப்பில் பணிபுரிபவர். பெற்றோர் இருவரும் மூன்று ஆண்டுகளாக விவாகரத்து முடிந்து பிரிந்து வாழ்கின்றனர்.
சம்பவத்தன்று, தாயின் கைத்துப்பாக்கியால் அவரை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்று விட்டு, வீட்டில் இருந்த இன்னும் ஒரு நீளத் துப்பாக்கியையும் தானியங்கி துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு காரில் சாண்டி ஹூக் பள்ளிக்குச் சென்றிருக்கிறான் ஆடம். பள்ளியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கண்ணில் அகப்பட்டவர்களை குழந்தைகள் என்றும், ஆசிரியர்கள் என்றும் பார்க்காமல் சுட்டுத் தள்ளியுள்ளான். இறுதியில் தன் உயிரையும் மாய்த்து கொண்டான்.