செவ்வாய், 23 ஜூன், 2015

2,400 பக்க மனு ! ஜெ. விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. சுமார் 2,377 பக்கங்கள் கொண்ட அப்பீல் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது மொத்தம் 9 தொகுதிகளைக் கொண்டுள்ளது. 1991-96ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.  18 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் எஞ்சிய 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியும் முதல்வர் பதவியும் பறிபோனது. இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கடந்த மே 11-ந் தேதியன்று ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். ஆனால் இத்தீர்ப்பு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாக வேண்டும் என்று கர்நாடகா அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தி வந்தார். இதனை ஏற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசும் முடிவு செய்தது. இதனடிப்படையில் ஜெயலலிதா உட்பட 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. சுமார் 2,377 பக்கங்கள் கொண்ட அப்பீல் மனுவை கர்நாடகா அரசு இன்று தாக்கல் செய்திருக்கிறது. இதில், ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தது சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் ஒருதரப்பான கர்நாடகா அரசை ஜெயலலிதா உள்ளிட்டோர் தங்களது மேல்முறையீட்டு மனுவில் சேர்க்கவில்லை; அரசு வழக்கறிஞரான பவானிசிங்கை உச்சநீதிமன்றம் நீக்கிய நிலையில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் தமது வாதங்களை முன்வைக்க போதிய அவகாசம் தரப்படவில்லை என்ற அம்சங்களும் இம்மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாடில் தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இம்மனு ஜூலை முதல் வாரத்தில் விசாரணைக்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: