திங்கள், 20 ஜூலை, 2015

வைகோ : 20 தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவிக்கவில்லை ..வருத்தம் அளிக்கிறது!

ஆந்திராவில் 20 தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்னையை நேரில் சந்தித்து விளக்கிட தமிழக முதல்வர் அனுமதிக்கவேண்டும் என மதிமுகப் பொதுச்செயலர் வைகோ கோரியுள்ளார்.
 மதுரையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: கடந்த ஏப்ரலில் ஆந்திர மாநிலம் ஷேசவனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தியதாக கூறி 20 தமிழர்களை ஆந்திரப் போலீஸôர் சுட்டுக்கொன்றனர். இது மனித உரிமை மீறிய செயலாகும்.
 ஆந்திராவில் தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது. அது மகாமகம் ,கும்பகோணம் சம்பவங்கள் போல மறந்தாச்சா? 
மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களில் 6 பேர் சடலம் தமிழக போலீஸ் உதவியுடனே எரிக்கப்பட்டது. அவர்களது மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும்  கிடைக்கவில்லை. ஆந்திர போலீஸôரின் குற்றங்களை மறைக்க தமிழக போலீஸ் துணைபோவது சரியல்ல. இதை தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டோம்.
 தமிழர்கள் கொல்லப்பட்ட பிரச்னையில் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய, ஆந்திர அரசுகள் விரும்பவில்லை. ஆகவே அவ்வழக்கில் தமிழக அரசும் மனுச் செய்வது அவசியம்.
 தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்னையில் நேரடிச் சாட்சியாக உள்ள இளங்கோ உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் ஆந்திர சிறப்புப் புலனாய்வுக் குழு வாக்குமூலம் பெற முயற்சிக்கிறது. அதன்படி ஆந்திர காவல்துறைக்கு சாதகமாக சாட்சிகளிடம் மறுவாக்குமூலம் பெற திட்டமிடுகின்றனர். இதற்கு தமிழக காவல்துறை, அதிமுக துணைபோகக்கூடாது.
 இப்பிரச்னை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விளக்க மதிமுக உள்ளிட்ட தமிழர் ஆதரவு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அனுமதி கோரியுள்ளோம். ஆகவே முதல்வர் எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித்தரவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். அப்பிரச்னையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தருவோம் என்றார். 
 பேட்டியின் போது மதிமுக மாவட்டச் செயலர்கள் புதூர் மு.பூமிநாதன் (மதுரை மாநகர்), டாக்டர் சரவணன் (புறநகர்) மற்றும் அழகுசுந்தரம், மகபூப்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். dinamani.com 

கருத்துகள் இல்லை: