சனி, 23 ஏப்ரல், 2016

எல்லா வேட்பாளர்களுக்கும் கடும் எதிர்ப்பு அவரவர் கட்சிகளில் கிளம்பி உள்ளது.... தேர்தல் முடிவுகளில் ருசிகரமான திருப்பங்கள்?


அ.தி.மு.க., - தி.மு.க.,வில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு முற்றுகிறது. பல தொகுதிகளிலும், கட்சித் தொண்டர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால், இரு கட்சிகளிலும் வேட்பாளர் மாற்றம் தொடர்கிறது.
அ.தி.மு.க.,வில், 227 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், 4ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து தி.மு.க.,வும், 174 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை, 14ம் தேதி வெளியிட்டது. அ.தி.மு.க.,வில்...: * ஈரோட்டில், அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர், சென்னை போயஸ் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் சங்கராபுரம் தொகுதி வேட்பாளருக்கு எதிராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த குடும்பத்தினர், போயஸ் தோட்டம் முன், தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றனர்   மக்களுக்குச் சேவை செய்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற ஆசைதான் காரணம் .... இதற்காக போராடும் இவர்களை வாழ்த்த வேண்டும் .... வையக் கூடாது ..
* சென்னையில், மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பெஞ்சமின், விருகம்பாக்கம் தொகுதி வி.என்.ரவி, திரு.வி.க., நகர் தொகுதி நீலகண்டன், தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம்
ராஜேந்திரன், வேளச்சேரி தொகுதி முனுசாமி, பெரம்பூர் தொகுதி வெற்றிவேல் உள்ளிட்டோரை மாற்ற வேண்டும் என, போயஸ் தோட்டத்துக்கு கட்சியினர் புகார் அனுப்பி வருகின்றனர். சிலருக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இப்படி தமிழகம் முழுவதும், பல வேட்பாளர்கள் மீதும், கட்சியில் அதிருப்தி இருப்பதால், இதுவரை, 26 தொகுதிகளின் வேட்பாளர்களை, முதல்வர் ஜெயலலிதா மாற்றிஉள்ளார்.

தி.மு.க.,விலும்...: * சீர்காழி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிள்ளை ரவிச்சந்திரன், பாளையங்கோட்டை தொகுதி மைதீன்கான் உள்ளிட்ட பலரையும் மாற்ற வேண்டும் என, மொட்டை அடிக்கும் போராட்டம் வரை நடந்து கொண்டிருக்கிறது

* ஆலங்குடியில் அறிவிக்கப்பட்ட டாக்டர் சுதீஷுக்கு எதிராக, தி.மு.க.,வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொபைல் போன் டவரில் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்றனர். அதன் விளைவாக, அவர் மாற்றப்பட்டார்

* குன்னுார் தொகுதி வேட்பாளர் முபாரக்கை மாற்ற வேண்டும் எனக் கூறி, அவருக்காக பிரசாரம் செய்யச் சென்ற, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் காரை மறித்து, அக்கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர்

* வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தனி தொகுதியில், தி.மு.க., சார்பில் அமுலு விஜயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும்,கலப்பு திருமணம் செய்துள்ளார். அதனால், அவரை மாற்றிவிட்டு, வேறு வேட்பாளரை அறிவிக்க வலியுறுத்தி, தி.மு.க.,வினர் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்

* இந்த மாவட்டத்தில் அணைக்கட்டு, ஜோலார்பேட்டை, அரக்கோணம் ஆகிய தொகுதிகளிலும், தி.மு.க., வேட்பாளர்களை மாற்றக் கோரி போராட்டம் வெடித்தது. இதில், அரக்கோணம் வேட்பாளர் பவானி வடிவேலு மாற்றப்பட்டு, என்.ராஜ்குமார் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மற்ற கட்சிகளிலும்..: தனித்து போட்டியிடும் பா.ம.க.,விலும், வேட்பாளர்களுக்கு எதிர்ப்புகள் இருப்பதால், பாலக்கோடு, தளி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அக்கட்சி மாற்றி அறிவித்துள்ளது.

அதேபோல, சோளிங்கர், நன்னிலம், தென்காசி உள்ளிட்ட பல தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா.,வில், கிள்ளியூர், மயிலாப்பூர், ராயபுரம் உள்ளிட்ட பல தொகுதிகளில், வேட்பாளர்களுக்கு எதிராக கட்சியினர் கொடி துாக்கி உள்ளனர்.

இப்படி தமிழகம் முழுவதும், ஒவ்வொரு கட்சியிலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் களுக்கு எதிராக, சொந்தக் கட்சியினரே தொடர் போராட்டங்களை நடத்தி வருவது, அந்தந்த கட்சித் தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: