வெள்ளி, 22 ஜூலை, 2016

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி

மகாராஷ்டிர மாநிலத்தின் தலை நகரான மும்பையில் அமைந்துள்ள அம்பேத்கர் பவன் தாக்கப்பட்டதைக் கண்டித்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கான பிரம்மாண்டமான பேரணி மும்பையில் நடைபெற்றது.
பேரணி இறுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சத்திரபதி சிவாஜி ரயில்வே நிலையத்திலிருந்து சீத்தாராம் யெச்சூரி உட்பட இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் மற்றும் தலித் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.
மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் இதயப் பகுதியாக விளங்கும் மத்திய மும்பை பகுதியில் உள்ள தாதர் என்னுமிடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பேத்கர் பவனும், புத்தபூஷன் அச்சகமும் அமைந்துள்ளது. இவை இரண்டும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் 1930களில் கட்டப்பட்டவையாகும்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள உழைக்கும் மக்களுக்கான இயக்கங்களின் மையமாக இது செயல்பட்டு வந்தது. இந்த அச்சகத்தில் அம்பேத்கரால் எழுதப்பட்ட எண்ணற்ற புத்தகங்கள் மற்றும் இதழ்கள் அச்சடிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இங்கே ஒரு நூலகமும் உண்டு.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இறந்த பின்பும் இந்த மையம் கடந்த பல ஆண்டுகளாக இயக்கத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வரு கிறது. ஒருசில மாதங்களுக்கு முன் ரோஹித் வெமுலாவின் தாயாரும் அவரது சகோதரரும் இங்கேதான் புத்த மதத்திற்கு மாறினார்கள்.
இந்நிலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் மிகவும் கயமைத்தனமாக புல்டோசர்களை வைத்து இவை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்த வளாகத்தில் செயல்பட்டு வந்த மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் தூண்டுதலின் பேரில் இது நடை பெற்றுள்ளது.
டாக்டர் அம்பேத்கரின் வாழ்வுடனும் பணியுடனும் பின்னிப்பிணைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கட்டிடத்தை இடிக்கும் பணி பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமையின்கீழ் இயங்கும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க முடியாது. இந்த சம்பவத்தின் பின்னணியில் மாநில அரசு வில்லன் போல் இருந்திருக்கிறது என்பதில் ஐயமேதும் இல்லை.
அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுதும் எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்று வந்தன. இடதுசாரிக் கட்சிகளும், அம்பேத்கர் அமைப்பு களும் இணைந்து இவற்றை நடத்தின. இவ்வியக்கங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்ட்டிர மாநிலக்குழுவும் பங்கேற்றது.
பின்னர் மும்பையில் ஜூலை 19 அன்று மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம் நடத்துவது என கூட்டாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அதே சமயத்தில், மகா ராஷ்டிராவிற்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஜூலை 16 அன்று இடிக்கப்பட்ட அம்பேத்கர் பவனைச் சென்று பார்த்தார். இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். 19ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பங்கேற்பதாக அறிவித்தார். இப்பிரச்சனையை மாநிலங்களவையில் எழுப்புவதாகவும் கூறினார். அவ்வாறு மாநிலங்களவையில் இப்பிரச்சனையை எழுப்பியபின் மீண்டும் பேரணியில் பங்கேற்பதற்காக மும்பைக்கு வந்தார். பேரணி-பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் ஆனந்தராஜ் அம்பேத்கர், ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் டாக்டர் பால்சந்திர காங்கோ, லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்) தலைவர் பீம்ராவ் பான்சோட், காங்கிரஸ் எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட், சிவசேனை எம்எல்சி நீலம் கோர்கே முதலானோர் உரையாற்றினார்கள்.
சீத்தாராம் யெச்சூரி
சீத்தாராம் யெச்சூரி உரை யாற்றுகையில், “மாநில அரசாங்கமும், நகராட்சியும்வ ரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை மட்டும் இடிக்கவில்லை, மாறாக விடுதலை இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தலித் இயக்கப் பாரம்பரியத்தை பிரதிநிதித்து வப்படுத்திய கட்டிடத்தை இடித்துள்ளனர். இது
டாக்டர் அம்பேத்கரால் தன் சொந்தப்பணத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகும். சமூகநீதிக்கான கட்டிடம் மட்டும்இ டிக்கப்படவில்லை, சமூக நீதிக்கான தொலைநோக்குப் பார்வையும் இடிக்கப்பட்டிருக்கிறது” என்று சாடினார்.
திட்டக் கமிஷன் போன்ற சமூகநீதிக்கான அனைத்து கட்டமைப்புகளும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. திட்டக்கமிஷன் ஒழிக்கப்பட்டதால், தலித்இ னத்தினருக்கான துணைத் திட்டங்களும் இனி கிடையாது.
இவ்வாறு பாஜகவின் தலித் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி அமைப்புகளும், தலித் அமைப்புகளும் செங்கொடி மற்றும் நீலக்கொடிகளின் கீழ் அணி திரளவேண்டியது அவசியம்.
நன்றி: தீக்கதிர்.

கருத்துகள் இல்லை: