வெள்ளி, 22 ஜூலை, 2016

வேலூர் அதிமுக மணல் கடத்தல் பிரமுகர் ஜி.ஜி.ரவியை உள்ளே போட்ட இன்ஸ்பெக்டர் பாண்டி..


(இன்ஸ்பெக்டர் பாண்டி)
அரசியல்வாதிகள், காவல்துறையினர், குற்றவாளிகள் இவர்களுக்கு இடையிலான கூட்டு தொடர்பாக, மத்திய அரசு அமைத்த ஓரா கமிட்டி பல உண்மைகளைப் போட்டு உடைத்தது. சட்டவிரோத தொழில் புரிகிறவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்குமிடையிலான கூட்டைத் துண்டிக்காமல் மக்களுக்கு விடிவில்லை என்பது, இன்றும் ஒரு விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த கருத்துக்கு வலுச்சேர்க்கும்வகையில் வேலூர் மாவட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அரசியல் பிரமுகரை உயரதிகாரிகளின் அழுத்தங்களையும், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி சிறையில் தள்ளி ஹீரோவாகியிருக்கிறார்.
என்னதான் நடந்தது வேலூரில்?

வேலூரில் அதிமுக பிரமுகர் ஜி.ஜி.ரவியை அறிந்திராதவர்கள் யாரும் இல்லை. ஆளும்கட்சியான அதிமுக-வின் அத்தனை பிளெக்ஸ் போர்டுகளிலும் சிரிக்கும் அரசியல் பிரமுகரான ரவிமீது ஏற்கனவே மரம் கடத்தல், மணல் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் என ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன, அவர் மீது பல வழக்குகளைப் பதிந்த கொத்தவச்சேரி காவல்நிலைய லிமிட்டில் ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி ஒன்றை நடத்தி, தன் கல்விச் சேவையை ஆற்றியும் வருகிறார்.
அந்தக் கல்லூரியை ஒட்டியிருக்கும் தோட்டம்வழியாக பாலாற்றுக்குப் போகலாம். அந்த வழியாகத்தான் தன் மணல் மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார். இதுபற்றி காவல்துறையும் மவுனம் சாதித்து வந்தது. இந்த மவுனம் தொடர்ந்துகொண்டே இருந்தது. மக்கள் மணல் கொள்ளையையும், காவல்துறையின் மவுனத்தையும் ஒருசேர வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில்தான், கொத்தவச்சேரி காவல் நிலையத்துக்கு புதிய இன்ஸ்பெக்டர் பாண்டி பொறுப்பு ஏற்றார். ரவியால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கேட்ட பாண்டியால் மவுனமாக இருக்க முடியவில்லை. மணல் கொள்ளையில் கொடிகட்டிப் பறக்கும் ரவியைத் தூக்கி உள்ளே போடுவது என முடிவெடுத்து அந்த நாளுக்காகக் காத்திருந்தார். பாதிக்கப்பட்ட மக்களிடமும், பாலாற்றின்மீது அக்கறை கொண்டவர்களிடமும் இதுபற்றிய தகவல்களை தனக்கே தருமாறு தன் செல்போன் எண்ணையும் மக்களுக்குக் கொடுத்திருந்தார் எளிமையான, நேர்மையான அந்த இன்ஸ்பெக்டர் பாண்டி.
ஜூலை 17ஆம் தேதி இரவு, தன் கல்லூரி வழியாக ரவி மணல் கடத்துகிற தகவல் வரவும் இன்ஸ்பெக்டரின் ஓட்டுநர் ரமேஷ் காரை எடுத்துவர, அந்தக் காரில் கிளம்பி மணல் கடத்தும் இடத்துக்குச் சென்றுள்ளார்.
போலீஸ் வாகனம் வருவதைப் பார்த்ததும் கடத்தல் மணல் லாரி பேக்கடித்து கல்லூரிக்குள் சென்றிருக்கிறது. அஞ்சாமல் அந்த லாரியைத் தொடர்ந்து கல்லூரிக்குள் சென்றார். ஆனால் ரவியின் அடியாட்கள் 30 பேர் சேர்ந்து இன்ஸ்பெக்டர் பாண்டியை கேரோ செய்தனர்.
”அப்படியே திரும்பிப் போய்டு” என்று சினிமா வில்லன் பாணியில் ரவுடி கும்பல் மிரட்ட,
“ஒழுங்கா லாரியோட ஸ்டேஷனுக்கு வந்துடுங்க” என்று, தன் நேர்மையான போலீஸ் கெத்தை காட்டினார் இன்ஸ்பெக்டர்.
ரவியின் ஆட்கள் தங்களின் ரவுடி சர்வீஸில் இப்படியான அதிகாரிகளைப் பார்த்திருக்க மாட்டார்கள். பணிய மறுத்த இன்ஸ்பெக்டர் பாண்டி, வாக்கிடாக்கியில் பேசி கல்லூரிக்குள் நடந்துகொண்டிருக்கும் சம்பவத்தைச் சொல்லி கூடுதல் போலீஸ் கேட்டார். போலீசும் வந்தது கல்லூரி வளாகம் ரணகளம் ஆனது. ரவியின் ஆட்களைப் பிடிப்பதைவிட ரவியையே பிடிப்பதுதான் இன்ஸ்பெக்டர் பாண்டியின் நோக்கம். நினைத்ததுபோல ரவியை மடக்கிப்பிடித்த இன்ஸ்பெக்டர் பாண்டி, ஒன்றரை மணி நேர போராட்டத்தின் பின்னர் மணல் கொள்ளையன் ரவியை மட்டும் இரவு 2.00 மணிக்கு கொத்தவச்சேரி காவல் நிலையத்துக்கு கொண்டுவந்துவிட்டார்.
அதுவரை ரவிக்கு வணக்கம் போட்டே பழகிய காவலர்களுக்கு வியர்த்துவிட்டது. காவல் நிலையத்தில் இருந்தாலும்கூட ரவிக்கு முன்னால் எட்டிப் பார்க்கமுடியாத அளவுக்கு பயமும் விசுவாசமும் கலந்திருந்தது அந்த சாதாரண காவலர்களின் செயல்பாடுகளுக்குப் பின்னால்.

வேலூர் எம்.பி. செங்குட்டுவனுடன் ரவி
ஒரு வேகத்தில் போய் ரவியை கொண்டுவந்துவிட்டார். ஆனால், இன்ஸ்பெக்டரே என்றாலும் எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ளிவிடும் அதிகாரம் இருந்தும் உயரதிகாரிகளின் சம்மதத்துக்காக காத்திருந்தார். வேலூர் மாவட்ட எஸ்.பி. பகலவன் மவுனமாக இருந்திருக்கிறார் பதிலேதும் சொல்லாமல். டி.எஸ்.பி. பன்னீர்செல்வமும் பதில் எதுவும் சொல்லவில்லை “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
ஆள் பலம், கட்சி பலம், பண பலம் உள்ள ஒரு பிரமுகரை ஸ்டேஷனுக்குள் வைத்திருப்பதன் ஆபத்தை உணர்ந்த இன்ஸ்பெக்டர் பாண்டி, என்ன வந்தாலும் பார்த்துவிடுவோம் என்பதில் உறுதியாக இருந்தார். இடையில் உயரதிகாரிகளாலும், அரசியல் பிரமுகர்களாலும் நடந்த எந்த சமரசத்தையும் ஏற்காத பாண்டி, இவர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் வேலையை ராஜிநாமா செய்துவிட்டுச் சென்றுவிடுவேன் என்று சொன்னதும்தான், அவரது நேர்மையைக் கண்டு கொஞ்சம் மிரண்டு போயிருக்கிறார் எஸ்.பி.பகலவன்.
வேலூர் எம்.பி. செங்குட்டுவன் காவல்துறை உயரதிகாரிகளுக்குப் பேசி, சரிக்கட்ட முயன்றபோதிலும் பாண்டி அசைந்து கொடுக்கவில்லை. “இப்போ விட்டால் மீண்டும் இவர்கள் மணல் கொள்ளையைத் தொடருவார்கள். இங்குள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்’’ என்றுசொல்ல, காவல்துறையின் மானம் காற்றில் போய்விடும் என்பதை லேட்டாகப் புரிந்துகொண்ட அதிகாரிகள் ஓ.கே. சொன்னபிறகு அன்று மாலை 4 மணிக்குத்தான் ரிமாண்டுக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறார்கள். அப்பாடா என்று ரவிமீது எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ளினார் பாண்டி.
வேலூர் அதிமுக பிரமுகர் கைதான மறுநாள், ஜுலை 18ஆம் தேதி அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ரவி நீக்கப்பட்டார். ஆனால், காமெடி என்னவென்றால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ரவி நீக்கப்படுவது இது மூன்றாவது முறை.
கடைசிவரை உறுதியாக இருந்து, உயரதிகாரிகளின் விருப்பத்தையும்மீறி ரவியை கம்பி எண்ணவைத்த இந்த இன்ஸ்பெக்டர் பாண்டி யார்?
பாண்டி காவல்துறையில் 1997இல் இணைந்தார். சென்னை மெரீனா ஸ்டேஷன், திருநெல்வேலி, மதுரை என ஒரு ரவுண்ட் சர்வீஸை முடித்துவிட்டு வேலூருக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.கொத்தவச்சேரி ஸ்டேசனுக்கு வந்து இரண்டே மாதங்கள்தான் ஆகிறது.இதில், இன்ஸ்பெக்டர் பாண்டி தமிழகம் முழுக்க அடித்துள்ள சர்வீஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது அவர் நேர்மையான அதிகாரி என்று.
காவல்துறை உயரதிகாரிகளின் செயலையும் மீறி ரவியை சிறைக்கு அனுப்பியதால் பாண்டி வேலூர் மக்களின் ஹீரோவாகியிருக்கிறார். காவல்துறையின் மானமும் காப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களுள் பாண்டியும் ஒருவர் என்றால் அதைவிட அவருக்கு சிறப்பு என்ன வேண்டும்!.
-எம்.பி.காசி   minnambalam.com

கருத்துகள் இல்லை: