வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஓஷோ கொலைசெய்யப்பட்டார்... ஜானும் ஜெயேசும் உடலை அவரசம் அவசரமாக எரித்தார்கள்... 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் ?


நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது’’ என்பார் ஓஷோ. 26 ஆண்டுகள் ஆனப் பின்னும் அவர் மரணம் குறித்த சர்ச்சை உயிர்ப்புடன்தான் இருக்கிறது. ஆனால், விடையைத்தான் அறிய முடியவில்லை. ஓஷோ மரணத்தில் சர்ச்சை! யோகா, ஜென், தாவோயிசம், தந்த்ரா போன்ற கலைகளை இந்தியாவைத் தாண்டி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு சென்றவர் ஓஷோ. இவரது எளிமையான, தெளிவான தத்துவ உரைகளைக் கேட்க வெளிநாட்டுச் சீடர்கள் குவிந்தனர். ஐரோப்பிய நாடுகளில் வேற்று மதத்தைப் பரப்புகிறார் என ஓஷோ மீது சில ஐரோப்பியச் சங்கங்களுக்குக் கடுகடுப்பு ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்காவில் ஒரேகான் என்ற பகுதியில் ரஜ்னீஷ்புரம் என்ற ஆன்மிக நகரத்தை ஓஷோவின் சீடர்கள் உருவாக்கினார்கள். இனியும் அவரை விட்டுவைத்தால், சரிவராது என நினைத்த அமெரிக்கா, புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, அவரைக் கைதுசெய்தது. ஓஷோ சிறையில் இருந்தபோது, உணவில் அவருக்கு ‘ஸ்லோ பாய்ஷன்’ கொடுக்கப்பட்டாதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

உலகம் முழுக்க ஓஷோவுக்குச் சீடர்கள் இருந்தாலும், பல நாடுகள் அவருக்குத் தடைவிதித்தன. அமெரிக்கச் சிறையில் இருந்து விடுதலையான ஓஷோ எங்கு செல்வது எனத் தெரியாமல், கடைசியாக பூனே ஆஸ்ரமத்துக்குத் திரும்பினார். பூனே ஆஸ்ரமத்தில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த ஓஷோ, 1990-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி மரணமடைந்தார். அமெரிக்கா கொடுத்த ஸ்லோ பாய்ஷன்தான் ஓஷோவின் உயிரைப் பறித்தது எனப் பரவலாக பேசப்பட்டது.
 
இந்த நிலையில், ஓஷோவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தவர்கள் ஜான், ஜெயேஷ் என்ற இரு சீடர்கள். இவர்கள் ஓஷோவின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவரைக் கொன்றதாக யோகேஷ் தாக்கர் என்ற மற்றோரு சீடர் 26 வருடங்கள் கழித்து பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஓஷோவின் மர்ம மரணம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று யோகேஷ் தாக்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுடன் ஓஷோவின் மரணச் சான்றிதழை வழங்கிய டாக்டர் கோகனியின் அபிடவிட்டையும் இணைத்துத் தாக்கல் செய்திருக்கிறார்.
இயற்கை மரணம் அல்ல!
‘‘1990 ஜனவரி 19-ம் தேதி மதியம், பூனே ஓஷோ ஆஸ்ரமத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. ‘உடனே ஆஸ்ரமத்துக்கு வாருங்கள்’ என போனில் பேசியவர் என்னிடம் கூறினார். உடனே நான், ஆஸ்ரமத்துக்குச் சென்றபோது ஓஷோவின் சீடர்கள் ஜான் அன்டிவ் மற்றும் ஜெயேஷ் ஓஷோ அருகில் அமர்ந்திருந்தனர். ஜான் என்னைக் கட்டியனைத்துக்கொண்டு, ‘ஓஷோ உடலைவிட்டுச் சென்றுக்கொண்டிருக்கிறார்’ என்றார். நான் ஓஷோவின் உடலைத் தொட்டுப் பார்த்தபோது, உடல் வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால் ஜானோ, ‘ஓஷோ இறக்கப்போகிறார். சீக்கிரம் மரணச் சான்றிதழை எழுதுங்கள்’ எனக் கூறி என்னை அவரசப்படுத்தினார். ஓஷோ இறப்பதற்கு முன்பு வாந்தி எடுத்திருந்தார். ஓஷோ, உணவை வாந்தி எடுப்பது என்பது இயற்கையான நிகழ்வு அல்ல. எனவே, இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘ஓஷோ, இறப்பதற்கு முன்பு வாந்தி எடுத்தாரா’ என நான் கேட்டதற்கு ஜானும், ஜெயேஷும் பதிலளிக்கவில்லை. போஸ்ட்மார்டத்தைத் தவிர்க்க, ‘இதயம் தொடர்பான காரணத்தால் ஓஷோ இறந்தார்’ என என்னை ரிப்போர்ட் தரச் சொன்னார்கள். ஜானும், ஜெயேஷும் ஏன் ஓஷோ இறப்பதற்காகக் காத்திருந்தர்கள் எனத் தெரியவில்லை. ஓஷோ உயிர் மீது அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், ஆஸ்ரமத்தில் இருக்கும் மருத்துவர்களை அழைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் என்னை அழைத்தது ஓஷோவைக் காப்பாற்றும் நோக்கில் இல்லை. என்னிடம் மரணச் சான்றிதழை வாங்கவே அவர்கள் முற்பட்டனர்’’ என தனது சந்தேகங்களை டாக்டர் கோகனி அம்பலப்படுத்தியுள்ளார்.
      
உடலை அவசரமாகத் தகனம் செய்தது ஏன்?
‘‘ ‘ஓஷோ இறந்த ஒரு மணி நேரத்தில் அவரது உடலைத் தகனம் செய்ய வேண்டும்’ என ஜானும், ஜெயேஷும் அவசர அவசரமாக வேலையில் இறங்கியுள்ளனர். ஆஸ்ரமத்தில் இருந்தவர்களிடம் அறிவிப்பைச் சொல்லிவிட்டுத் தகனம் செய்யும் பணிகளைச் செய்துள்ளனர். சீடர்களை, ஓஷோவின் உடல் அருகில் செல்லவிடாமல் தொலைவில் இருந்தே அஞ்சலி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஓஷோவின் பூனே ஆஸ்ரமத்தின் மதிப்பு ரூ.1,000 கோடி இருக்கும். இந்த ஆஸ்ரமம் மூலம் ஜானுக்கும், ஜெயேஷுக்கும் வருடத்துக்கு ரூ.100 கோடி வருமானம் வருகிறது. வெளிநாடுகளில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஜானும், ஜெயேஷும் சேர்ந்து வெளிநாடுகளில் 20 நிறுவனங்களைத் தொடக்கி, ஓஷோவின் ரூ.800 கோடி சொத்துக்களை அபகரித்துள்ளனர். ஓஷோ தனது சொத்துக்களை யாருக்கு எழுதிவைத்தார், ஓஷோ எழுதிய உயிலில் என்ன இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியதால், என்னை ஆஸ்ரமத்துக்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டனர்’’ என்கிறார் வழக்குப் போட்டுள்ள யோகேஷ் தாக்கர்.
      
இந்தியா திரும்பும் ஓஷோ உயில்!
யோகேஷ் தாக்கர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், வெளிநாட்டில் ஒருக்கும் ஓஷோவின் உயிலை இந்தியாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கைப் பண மோசடிக் கோணத்தில் விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக மக்களுக்கு மன அமைதி கொடுத்த ஓஷோ, மரணத்துக்குப் பிறகும் அமைதியில்லாமல் இருக்கிறார்.
- ஆ.நந்தகுமார்  விகடன்.கம்

கருத்துகள் இல்லை: