புதன், 24 ஆகஸ்ட், 2016

பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை: 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி; ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரியை கொலை செய்த வழக்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 வாலிபர்களுக்கு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. பெண் மாயம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி (வயது 23). சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தன் தோழிகளுடன் மேடவாக்கத்தில் தங்கியிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் அவரது தந்தை பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். இந்தநிலையில், அதே ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் உமா மகேஸ்வரியின் சடலம் கண்டு எடுக்கப்பட்டது.



கற்பழித்து கொலை

கேளம்பாக்கம் போலீசார் இந்த வழக்கை சரிவர விசாரிக்காததால், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், உமா மகேஸ்வரியை, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராம் மண்டல் (23), உத்தம் மண்டல் (23), உஜ்ஜல்மண்டல் (23) ஆகியோர் கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.
உமா மகேஸ்வரி தன்னுடைய அலுவலகத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து இந்த 3 பேரும் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத, இருட்டான பகுதி வரும்போது, உமா மகேஸ்வரியை 3 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, கற்பழித்துள்ளனர். பின்னர், அவரது ஏ.டி.எம். கார்டு, செல்போன், நகைகள் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு, அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

குற்றச்சாட்டு மறுப்பு

இந்த வழக்கை செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு விசாரித்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், கொலை குற்றத்துக்கு மட்டும் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 3 வாலிபர்களும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், கடந்த 11-ந் தேதி, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 3 வாலிபர்களையும் சிறையில் இருந்து ஐகோர்ட்டுக்கு வரவழைத்து, நீதிபதிகள் நேரடியாக விசாரித்தனர். அப்போது 3 வாலிபர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர். இதன்பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

சந்தர்ப்ப சாட்சிகள்

இந்த வழக்கு முழுவதும் சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையாக கொண்டுள்ளது. உமா மகேஸ்வரியை கொலை செய்ததை நேரில் யாரும் பார்க்கவில்லை. சந்தர்ப்ப சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை கொண்டு, 3 வாலிபர்கள் மீதும் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால், இந்த சந்தர்ப்ப சாட்சிகள் அனைத்தையும், குற்றம் சுமத்தப்பட்ட 3 பேரது வக்கீல்கள் மறுக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரியின் வங்கி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, சிறுசேரியில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் உத்தம் மண்டல் பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது தன் முகத்தில் துணியை கட்டியுள்ளார். ஆனால் ரகசிய குறியீடு எண் சரியாக இல்லாததால், பணம் வரவில்லை. அப்போது அந்த மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் அவரது உருவம் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் பதிவான உருவத்தின் உடல் அளவையும், உத்தம் மண்டல் உடலின் அளவையும் ஆய்வு செய்து, பணம் எடுக்க முயற்சித்தது உத்தம் மண்டல்தான் என்பதை தடய அறிவியல் நிபுணர் திரிவேதி அறிக்கை கொடுத்துள்ளார். எனவே, உமா மகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டு உத்தம் மண்டல் கையில் இருந்துள்ளது என்பது உறுதியாகுகிறது.

செல்போன்

அதேபோல, உமா மகேஸ்வரி வைத்திருந்த செல்போனில், வேறு ஒரு சிம் கார்டை போட்டு உஜ்ஜல் மண்டல் பயன்படுத்தியுள்ளார். அவரிடம் இருந்து இந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உமா மகேஸ்வரியை கொலை செய்துவிட்டு, அவரது செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை தாங்கள் தங்கியிருந்த அறைக்கு 3 பேரும் எடுத்துச்சென்றுள்ளனர். அவர்களுடன் அதே அறையில் தங்கியிருக்கும் மேற்குவங்காளத்தை சேர்ந்த வாலிபர் பார்த்துள்ளார்.

அந்த பொருட்கள் குறித்து கேட்டபோது, ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்து, இவற்றை எல்லாம் எடுத்துவந்ததாக 3 பேரும் கூறியுள்ளனர். இதை, அந்த வாலிபர் போலீசில் தெளிவாக சாட்சியம் அளித்துள்ளார்.

தண்டனை உறுதி

ஆனால், இவரது சாட்சியத்தை நம்பக்கூடாது என்று குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வக்கீல்கள் வாதிட்டார்கள். ஆனால், அந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர், உஜ்ஜல் மண்டலின் நண்பர். இவரிடம் இந்த 3 பேரும் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை. எனவே, இந்த வாலிபரின் சாட்சியம் நம்பும்படியாகத்தான் உள்ளது.
எனவே, ராம் மண்டல் உள்பட 3 பேர் மீதான கொலை குற்றச்சாட்டு, சந்தர்ப்ப சாட்சிகள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு இவர்களுக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்.

ரூ.2 லட்சம் இழப்பீடு

மேலும், உமா மகேஸ்வரி 23 வயது இளம்பெண். அந்த இளம்பெண்ணின் பெற்றோர் கடுமையான துயரத்தில் உள்ளனர். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை எந்த வழியிலும் ஈடுசெய்ய முடியாது. இருந்தாலும், மகளை இழந்த பெற்றோருக்கு தமிழ்நாடு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடுகிறோம். இந்த தொகையை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 4 மாதத்துக்குள் வழங்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.dailythanthi.com/

கருத்துகள் இல்லை: