திங்கள், 29 ஆகஸ்ட், 2016

பச்சமுத்துவை காப்பாற்ற துடிக்கும் அதிகார வர்க்கம்

எதிர்பார்க்கப்பட்ட வழக்குதான் என்றாலும் எதிர்பாராத நேரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து கைது செய்யப் பட்டிருப்பதால் மாயமான மதன் விவகாரம் சூடுபிடித்துள்ளது. பாரிவேந்தருக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதன், கடந்த மே மாதம் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு காணாமல் போனார். அந்த கடிதத்தில், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக வாங்கப்பட்ட பணத்தை தங்களிடம் (பச்சமுத்துவிடம்) கொடுத்துவிட்டேன் என்கிற ரீதியில் பதிவு செய்திருந்தார் மதன். இந்த விவகாரம் அப்போது பரபரப்பானது.
இந்த நிலையில், தன் மகனை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்தார் மதனின் தாயார் தங்கம். இதுகுறித்து, அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம். மேலும், மதனுக்கு எதிராக  பல்வேறு மோசடி புகார்கள் குவிந்தன. குறிப்பாக, "மருத்துவ சீட் வாங்கித்தருவதாக கூறி எங்களிடமிருந்து பல லட்சங்களை மதன் வாங்கிக்கொண்டார்' என 112 பேர் தந்துள்ள புகார்கள் மூலம் 72 கோடி வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் ஐ.ஜே.கே. கட்சியை சேர்ந்த பார்கவம் பச்சமுத்து, பாபு, சண்முகம், விஜயபாண்டியன் ஆகிய  4 பேர் கைது செய்யப்பட்டனர்.
;இவர்களை விசாரிப்பதற்காகவும் மதனை கண்டுபிடிக்கவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்தது ஜெ.அரசு. மதன் மாயமாகி 3 மாதங்கள் கடந்தும் அவரை கண்டு பிடிக்க முடியாமல் திணறியது போலீஸ். இதுகுறித்து ஏற்கனவே நக்கீரனில் நாம் எழுதிய செய்தியில், ""மதன் இருக்கும் இடம் எங்களுடைய உயரதிகாரிகளுக்குத் தெரியும். அவருடன் தொடர்பில் தான் அதிகாரிகள் இருக்கிறார்கள். சில பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. அது சுமுகமாக முடிந்தால் மதன் வெளியே வருவார்'' என காவல்துறையினர் சொல்வதாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

ஆனால், பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போனதில் போலீஸார் டென்ஷனானார்கள்.

இந்த நிலையில்தான், மதனை கண்டுபிடிக்கும் வழக்கு விசாரணை சமீபத்தில் வந்தபோது, போலீஸ் தரப்பில் மீண்டும் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்காத நீதிமன்றம், ""தமிழக காவல்துறையினர் இந்த வழக்கை திறம்பட விசாரிக்க முடியவில்லை எனில் வேறு ஒரு புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டியது வரும்'' என்றும், மதன் மீதான மோசடிகள் பச்சமுத்து மீதும் சொல்லப்படும் நிலையில் அவரிடம் இதுவரை விசாரணை நடத்தாதது ஏன்?'' என்றும் கேள்விகள் எழுப்பியதோடு, போலீஸாரின் நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்தது.

அப்போது, ""பச்சமுத்துவிடம் விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார்''  என கோர்ட்டில் தெரிவித்தார் அரசு குற்றவியல் வழக்கறிஞர். >இதனைத் தொடர்ந்து, 25-ந்தேதி பாரிவேந்தருக்கு சம்மன் அனுப்பியது போலீஸ். அதன்பேரில் துணைக்கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீஸார் முன்பு ஆஜரானார் பாரிவேந்தர். அவரிடம் விடியவிடிய பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தினர். இதனை மிக ரகசியமாக வைத்திருக்க போலீஸார் நினைத்த நிலையில், அது மெல்ல மெல்ல கசிய, 26-ந்தேதி காலையில் கைது செய்யப்பட்டார்

பாரிவேந்தர் இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸாரிடம் நாம் விசாரித்த போது,

""மதனுக்கும் உங்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி? நீங்கள் நடத்தும் கட்சியில் அவருக்கு பொறுப்பு கொடுக்கப் பட்டதா? மருத்துவக் கல்லூரி இடங்களை ஃபில் அப் பண்ணும் டீலிங்கை மதனிடம் கொடுத்துள்ளீர்களா? 112 பேரிடம் வசூலிக்கப்பட்ட 72 கோடி ரூபாய் எங்கே? வேந்தர் மூவீசுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? சினிமா தொழிலில் நீங்கள்தான் அவரை இறக்கிவிட்டீர்களா? மதனும் நீங்களும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தானே அவர் காணா மல் போனார்? அவரை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? என்பது உள்பட நிறைய கேள்விகளை அவரிடம் கேட்டோம்.

பெரும் பாலான கேள்விகளுக்கு, "இல்லை', "தெரியாது', "உங்களின் கற்பனையான கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது' என்றே சொன்னார் பச்சமுத்து. கட்சியையும் மதனையும் மையப்படுத்தி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் சட் டென்று பதில் சொன்னார். மேலும், ""வேந்தர் மூவீசுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தனிப்பட்ட முறையில் அவர் உருவாக்கிய கம்பெனி அது. எங்கள் கல்லூரியில் மேனேஜ் மெண்ட் கோட்டாவில் சில இடங் களை அவர் ஃபில் அப் பண்ணி யிருக்கலாம்.

ஒருமுறை என்னிடம் அது குறித்து சொன்னதாக ஞாபகம். ஆனா, எங்க கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பலரிடமும் பணம் வசூலித்தாராங்கிறது எனக்குத் தெரியாது. அப்படி வசூலிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிற பணம் எதுவும் என்னிடத்தில் கொடுக்கவில்லை.

எங்க கல்லூரி பெயரை தவறாகப் பயன் படுத்துகிறார்னு கேள்விப்பட்டதுமே எங்க கட்சியிலிருந்து மதனை நீக்கிவிட்டோம். மத்தபடி அந்த ஆள் என்னிடம் பணம் கொடுத்ததாக சொல்லியிருப்பது பொய். அவர் எங்கே இருக்கார்னும் எனக்குத் தெரியாது. சீக்கிரம் கண்டுபிடிங்க. எல்லா சந்தேகங்களும் தீரும். அப்பழுக்கற்றவன் நான். யாரையும் நான் மோசடி செஞ்சது கிடையாது'' என கலங்காமல் பேசியிருக்கிறார் பாரிவேந்தர். 

;மேலும் நாம் விசாரித்தபோது, ""பாரிவேந்த ரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விபரங்களை மேலிடத்துக்கு தெரிவித்தனர் எங்க அதிகாரிகள். கூடுதலாக சில கேள்விகள் கேட்குமாறு சொல்லப் பட்ட உத்தரவின் பேரில் அந்த கேள்விகளும் கேட் கப்பட்டன. 26-ந்தேதி காலையில் மேலிடத்தி லிருந்து வந்த உத்தரவின்படி கைது செய்யப்பட் டார் பச்சமுத்து'' என்றார்கள் போலீஸார். &

கைது செய்யப்பட்ட பாரிவேந்தர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 406 (நம்பிக்கை மோசடி ), 420 (ஏமாற்றுதல்), 34 (கூட்டு சதி) ஆகிய 3 சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இந்த நிலையில், தனக்கு இருதய பிரச்சினை இருப்பதாக பச்சமுத்து தெரிவிக்க, உடனடியாக  ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றது போலீஸ். அங்கு, வீல் சேர் கொண்டு வரப்பட்டு அதில் உட்காரவைத்து உள்ளே கொண்டு செல்லப் பட்டார் பாரிவேந்தர். இருதய சிகிச்சை பிரிவில் சுமார் 2 மணி நேரம் உடல் பரிசோதனை செய்யப் பட்டது.

"சில பரிசோதனைகள் செய்யப்பட வேண் டும். அதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவர் கள் அறிவுறுத்தியதால் அவசர அவசரமாக அங்கு கொண்டுசெல்லப்பட்டார். பிறகு மீண்டும் ராயப் பேட்டை ஜி.ஹெச்.சுக்கு அழைத்து வரப்பட்டார் பாரிவேந்தர். சிறைக்குச் செல்லாமல் மருத்துவமனையி லேயே சேர்க்கப்பட்டுவிடுவாரா? அல்லது சிறைக்கு அனுப்பப்படுவாரா?' என்கிற சூழல் நிலவியது.

இந்த நிலையில் பாரிவேந்தர் கைது விவகாரம் குறித்து அவரது தரப்பினரிடம் நாம் விசாரித்த போது, ""தவறான நபரை அருகில் வைத்துக் கொண்டதன் விளைவை பச்சமுத்து அனுபவிக்க வேண்டியதிருக்கிறது. மதன் செய்துள்ளதாக கூறப்படும் மோசடிகள் எதிலும் பச்சமுத்துவுக்கு நேரடி சம்பந்தமே இல்லை.

எங்கள் கல்லூரியில் இடங்களை நிரப்புவதற்காக எந்த புரோக்கரையும் நாங்கள் நியமிக்கவில்லை; சீட் வாங்கித் தருவதாக சொல்லும் புரோக்கர்களை நம்பி யாரும் ஏமாந்து போகாதீர்கள் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பல முறை எச்சரிக்கை செய்யப்பட்டிருக் கிறது.

மதனை கண்டுபிடித்து கைது செய்யுங்கள். அதைச் செய்ய முடியாத போலீஸ், மதன் மீதுள்ள புகாரை வைத்துக்கொண்டு பச்சமுத்துவை கைது செய்திருப்பது என்ன நியாயம்?'' என்று ஆவேசப்படுகிறார்கள்.

இதற்கிடையே, இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து பா.ம.க. ராமதாஸ் எழுதிய கடிதத்தை ஜெயலலிதாவிடம் கொடுப்பதற்காக கார்டன் சென்ற பா.ம.க.வழக்கறிஞர் பாலு, பச்சமுத்துவுக்கு எதிராக ஒரு சி.டி.ஆதாரத்தை கொடுத்ததாகவும் அந்த சி.டி.யை வைத்துதான் பச்சமுத்துவை கைது செய்ததாகவும் ஒரு தகவல் காவல்துறை உயர் மட்டத்தில் உலவுகிறது.

அதேசமயம், மதனை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கவும், இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் போகா மல் தடுக்கவும்தான் தமிழகஅரசு கைது நடவடிக் கையை எடுத்துள்ளது என்கிறார்கள் பாரிவேந்தர் தரப்பினர்.

 மதனிடம் பேசிக் கொண்டிருந்த அதிகாரத்தினர் இப்போது பாரிவேந்தர் தரப்பிடம் பெரிய அளவில் பேச ஆரம்பித்துள்ளனர். பாரிவேந்தர் கைதாகியுள்ள நிலையில், மதன் எப்போது கைது செய்யப்படுவார் என்பது தீர்மானிக்கப்படு மாம். இருவரின் விவகாரத்தில் புகுந்து விளையாடு கிறது போலீஸ்.>பாரிவேந்தரை செப்.09வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.>-இரா.இளையசெல்வன்<படங்கள் : ஸ்டாலின், அசோக்  vikatan.com

கருத்துகள் இல்லை: