திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஈஷாவிடம் இருந்து சாப்ட்வெயர் எஞ்சினியர் மகள் அபர்ணாவை மீட்டு தாருங்கள்! பெற்றோர் கண்ணீர் .. மற்றுமொரு புகார்


கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்கு சென்ற இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மைய திருமண மையத்தின் மூலமாக திருமணம் செய்து கொண்டு ஆசிரமத்தில் தங்க சொல்லியதாகவும், திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்று கொள்ள கூடாது என ஈஷா திருமண மையத்தினர் கூறி இருப்பதாகவும் மேலும் ஒரு பெற்றோர் கண்ணீர் மல்க பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்
கோவை கே.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் தண்டபானி, வசந்தா தம்பதியினர். இவர்களது இளைய மகள் அபர்ணா (32) இளங்கலை பொறியியல் பட்டம் முடித்து விட்டு, ஐபிஎம் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் ஜெர்மன் நாட்டில் பயிற்சி பெற்று, அந்நிறுவனத்தின் பெங்களுர் கிளையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது மகள் அபர்ணாவை கோவை ஈஷா யோகா மையத்தினர் மூளைச்சலவை செய்து இருப்பதாகவும், அம்மையம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.


;இது தொடர்பாக வசந்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, பெங்களுரில் ஐபிஎம் நிறுவனத்தில் அபர்ணா பணியாற்றி வந்த போது ஈஷா யோகா மையத்துடன் தொடர்பு ஏற்பட்டது. தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததார். திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வந்த அபர்ணா, யோகா பயிற்சிக்கு சென்ற போது மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் உள்ள திருமண மையத்தின் மூலமாக திருமணம் செய்து கொண்டு ஆசிரமத்தில் தங்க சொல்ல கூறியதாகவும், திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்று கொள்ள கூடாது என ஈஷா திருமண மையத்தினர் கூறி இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

மேலும், தனது மகளை மீட்டு தருவதுடன் யோகா மையத்தில் உள்ள மற்ற பெண்களையும் மீட்டு தர வேண்டும். வயதான தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈஷா திருமண மையத்திற்கு புகார் மனு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியும், அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தனது மகளை மீட்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் நிலையில், தனது மகளை மீட்டு தருமாறு மேலும் ஒரு பெற்றோர் கண்ணீர் மல்க புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.>-அருள்குமார்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: