வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா சிங்கப்பூரில்.. மறைந்த அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார் !

AIADMK MP Sasikala Pushpa says, i am in singaporeடெல்லி: அதிமுவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா வாட்ஸ் அப்பில் ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தான் சிங்கப்பூரில் இருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் அளித்த புகாரின்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்க கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா உட்பட 3 பேரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி ஆஜராகி, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த வக்காலத்தில் ஆக.17-ந் தேதி மதுரையில் வழக்கறிஞர் முன்னிலையில் சசிகலா புஷ்பா உட்பட 3 பேரும் ஆஜராகி கையெழுத் திட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் 3 பேரும் ஆக.16-ந் தேதியே சிங்கப்பூர் சென்றுவிட்டனர். அவர்கள் பெயரில் போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் மீதான புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் குற்றம் நடந்திருப்பதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது. வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், அந்த உறுதிமொழியை நிறைவேற்றாமல் அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.
இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளது. முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றார். ஆனால் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் வாதிடும்போது, சசிகலா புஷ்பா உட்பட 3 பேரின் அறிவுறுத்தலின்பேரில் தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை திரும்பப் பெறுகிறேன் என்றார். அப்போது அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களின் வக்காலத்தில் அவர்கள் கையெழுத்திட்டதில் சந்தேகம் இருப்பதால் அவர்கள் ஆக.29-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இதையடுத்து நேரில் ஆ‌‌ஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்‌கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு‌தாக்கல் செய்தார். இந்நிலையில் தாம் சிங்கப்பூரில் இருப்பதை உறுதிப்படுத்துவது போல் அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு எடுத்த போட்டோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார் சசிகலா புஷ்பா. அத்துடன், சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒரே தமிழக எம்.பி. நான் தான் என்றும் அந்த வாட்ஸ் அப் செய்தியில் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: