ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நத்தம் சொத்து ரூ.300 கோடி சொத்து பறிமுதல்; வருமான வரித்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில்,
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 300 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலின் போது, கரூரில் உள்ள பைனான்சியர் அன்புநாதன் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்; அதில், 4.70 கோடி ரூபாய் சிக்கியது.இதுதொடர்பாக, வருமான வரித்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த தொடர்பு வட்டம், சென்னை மேயர் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றி ஆகியோர் வரை நீண்டதையும், வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்; அதற்கான ஆதாரங்களை தீவிரமாக சேகரித்தனர்.அவை உறுதி செய்யப்பட்டதும், 12ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள விஸ்வநாதன் வீடு, சென்னையில் உள்ள அவரது வீடு, நண்பர்களின் வீடுகள் மற்றும் சைதை துரைசாமியின் ராஜகீழ்ப்பாக்கம் பண்ணை வீடு, சென்னை வீடு என, எட்டு இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


சிக்கியது என்ன:ஐந்து நாட்களாக நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

நத்தம் விஸ்வநாதன் மற்றும் வெற்றி துரைசாமியின் வீடுகளில், சோதனை இன்னும் தொடர்கிறது; எனினும், இதுவரை கிடைத்தவற்றை மதிப்பிட்டுள்ளோம். அவர்களது வீடுகளில், கணக்கில் வராத பணம் எதுவும் சிக்கவில்லை. ஆனால், சென்னையில் உள்ள நத்தம் விஸ்வநாதன் கூட்டாளி வீட்டில், 25 லட்சம் ரூபாய் சிக்கியது.

மேலும், நத்தம் விஸ்வநாதன் ஏராளமான இடங்களில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன; அது தொடர்பாக, 300 கோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்
பட்டுள்ளன. அவர் மீது கூறப்படும் ஊழல் புகார்களுக்கும், சிக்கியிருக்கும் ஆவணங்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது; ஆனாலும், இந்த ஆவணங்கள் மூலம் ஒவ்வொன்றாக கிளறுவோம்.

நத்தத்திற்கும், கீர்த்திலால் காளிதாஸ் வைர நகை குழுமத்திற்கும், முக்கிய பிரமுகர் என்ற முறையில் மட்டும், சில தொடர்புகள் உள்ளன. வெற்றி துரைசாமியின் வீடுகளில் இருந்து, பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றாலும், அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணத்திற்கும், அவருக்கும் உள்ள தொடர்பு உறுதியாகி உள்ளது; அதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நத்தம் கைதா:முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கைது செய்யப்பட்டதாக, நேற்று மாலை, திடீர் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக, அவரது வீடுகளில், வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால், அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

அதுபற்றி, அமலாக்கத் துறையினரிடம் கேட்ட போது, 'அது வெறும் வதந்தி. நாங்கள் அவரை விசாரிக்கவும் இல்லை; கைதும் இல்லை' என்றனர். இப்படி செய்தி பரவியதைத் தொடர்ந்து, 'நான் கைது செய்யப்படவில்லை' என, நத்தம் விஸ்வநாதன், விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மின் துறையில் சுருட்டல்!:

வருமான வரித்துறையினர் கூறியதாவது: நத்தம் விஸ்வநாதன், 'டாஸ்மாக்' தொடர்பான கலால் துறையில், பெரிய அளவில் சம்பாதித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அவர் மின்துறை அமைச்சராக இருந்த போது, ஏராளமான பணம் ஈட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.அவர் பணம் ஈட்டிய வழியையும் கண்டுபிடித்து விட்டோம்.

எங்கு முதலீடு செய்திருக்கிறார் என்பதும் தெரிந்துவிட்டது; அதை, தற்போது விளக்கமாக கூற முடியாது; அன்னிய தொடர்புகள் இருப்பதும் தெரிந்துள்ளது. வெளிநாடுகளில் தீவு வாங்கியதாக புகார் கூறப்படுகிறது; அது தொடர்பான ஆவணங்கள் கிடைக்குமா என தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

உஷாரான நத்தம்!:''கரூர் அன்புநாதன் சிக்கியதுமே நத்தம் விஸ்வநாதன் உஷாராகி இருக்கலாம். அதனால், பெருமளவிலான ரொக்கம், ஆவணங்களை அவர் பதுக்கி வைத்திருக்கலாம். எனினும், விசாரணை தொடரப் போவதால், அவையும் சிக்கும் என நம்புகிறோம். இப்போதைக்கு, வேறு எந்த
அமைச்சர்கள் மீதும் சந்தேகம் இல்லை''

வருமான வரித்துறை

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: