வெள்ளி, 23 செப்டம்பர், 2016

கீழடி அகழ்வாராய்ச்சி!- மெத்தனம் காட்டுகிறதா தமிழக அரசு?

விகடன்.காம் :மதுரை அருகே கீழடியில் புதையுண்ட ஒரு நகரத்தையே அகழ்வாராய்ச்சி மூலம் மத்திய தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், அவற்றை பெங்களூருவுக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் அண்மையில் செய்திகள் வெளியானது.இது குறித்து தலைமைத் தொல்லியல் அதிகாரி அமர்நாத் கூறுகையில், "கிமு 500-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே, நாங்கள் அகழ்வாராய்ச்சி செய்தவற்றை, எங்கள் மத்திய அலுவலகத்தில் வைத்துப் பாதுகாப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார்.
இதற்கிடையே கீழடி ஆராய்ச்சிகள் குறித்து கட்டுரைகள் எழுதி வரும் சாகித்திய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன், "கீழடியில் தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார், இது தொடர்பாக அவரிடம் பேசியதிலிருந்து...

"தொல்லியல் பொருட்களை பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று நீங்கள் கூறிவருவதற்காக காரணம் என்ன?"
"காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறது. அகழ்வு ஆய்வின் போது 5300 தொல்பொருட்கள் கிடைத்திருக்கிறது. மத்திய தொல்லியல் துறையின் அகழ்விட அருங்காட்சியகம் இதுவரை நாற்பது இடங்களில் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில், அதுவும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டால் இவையனைத்தும் அங்கே மைசூருவில் இருக்கும் குடோனில்தான் வைக்கப்படும். கீழடி ஆராய்ச்சிகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் எனில், அந்த இடத்திலேயே அருங்காட்சியகம் வைப்பதுதான் சிறந்தது."
"ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிக்கு இப்படியான முனைப்புகள் ஏன் எடுக்கப்படவில்லை?"
"இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் கூட தமிழகத்தில் இனக்குழு நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள்தான் இன்னும் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் முதன்முறையாக தமிழகத்தில் ஒரு சங்ககால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கூட புதையிடம்தான். ஆனால் கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் எல்லாம் இருந்த ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹராப்பா நாகரிகத்துக்கு இணையான தொல்லியல் களம் தென்னிந்தியாவில் இங்கு மட்டும்தான் இருக்கிறது."
"அரசியல் ரீதியாக இந்த ஆராய்ச்சி எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?"
"கருத்து அரசியல் ரீதியாகப் பார்த்தால் திராவிடப் பாரம்பரியம் எவ்வளவு செழிப்புடன் இருந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக இதைச் சொல்லலாம்."
"கீழடியில் இப்போது என்னென்ன தகவல்கள் கண்டறியப்பட்டிருக்கிறது?"
"கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கிறது. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டு முன்பான தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு வழிக்கோளாக அமையும். இப்போது, இருக்கும் மதுரையில் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய எவ்விதத் தடயங்களும் இல்லை. ஆனால், கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைக்கின்றன. சங்க இலக்கியத்தின் படி மதுரை என்பது திருபுவனத்துக்கு நேர் மேற்கேயும் திருப்பரங்குன்றத்துக்கு கிழக்கேயும்தான் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் மதுரை வடகிழக்கில் இருக்கிறது. இலக்கியம் சொன்ன இடத்தில் கீழடிதான் இருக்கிறது."
"தமிழக அரசிடம் என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கிறீர்கள்?"
"கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 சென்ட் வரைக்கும்தான் அகழ்வு செய்திருக்கிறார்கள். முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்து, இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசின் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த 110 ஏக்கரில் பல இடங்கள் தனியார் வசம் இருப்பதால் அரசு தலையிட்டு விரைவில் அந்த நிலங்களைக் கைப்பற்ற வண்டும். அப்போதுதான் தொல்லியல் பொருட்கள் பாதுகாக்கப்படும். தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு சார்ந்து இயங்கும் ஒரு அரசின் மாவட்ட ஆட்சியர் கூட கீழடி பகுதியை இன்னும் பார்வையிட முன்வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது."
-ஐஷ்வர்யா

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

கீழடி நகரம் கி.மு 500 கு முற்ப்பட்டது. ஆனால் தாங்களோ கி.பி 300 என்று பதிவிட்டுள்ளீர்கள்.தமிழக காலத்தை குறைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளீரா!?

Radha manohar சொன்னது…

தங்களின் கருத்து சரியானதுதான்.தவறுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், விகடன் ஏட்டில் வந்ததை அப்படியே மறுபதிவு இட்டதில் ஏற்ப்பட்ட தவறு. தற்போது திருத்தி உள்ளேன் , சுட்டி காட்டியமைக்கு நன்றி