செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஸ்டாலின் அழைத்தார்; கனிமொழி நிராகரித்தார்!' - வாசன் கட்சி தனித்துப் போட்டி!

விகடன்.காம் ; உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி' என அறிவித்துவிட்டார் ஜி.கே.வாசன். ' தி.மு.க குடும்ப சண்டையால் எங்களைப் பழிவாங்கிவிட்டார்கள். அவர்களுக்கு எங்களின் பலத்தை உணர்த்துவோம்' எனக் கொந்தளிக்கின்றனர் த.மா.கா நிர்வாகிகள். 
தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினை, கடந்த 19-ம் தேதி சந்தித்தார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். சந்திப்பின் முடிவில், ' இது அரசியல்ரீதியான சந்திப்புதான்' என அறிவித்தார். தி.மு.க, த.மா.கா கூட்டணி மலரப் போகும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள் த.மா.காவினர். ' தி.மு.க அணியில் த.மா.கா இடம்பெற்றால், காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும்' என பேட்டி அளித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர். ஆனாலும், ' ஓரிரு நாட்களில் கலைஞரை சந்திப்பேன்' என நம்பிக்கையோடு காத்திருந்தார் வாசன். அவரது நம்பிக்கையும் கைகூடவில்லை. அடுத்த சில நாட்களிலேயே, ' சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அணியில் இருந்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி' என அறிவித்தார் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன். இப்படியொரு அதிரடி அறிவிப்பை ஜி.கே.வாசன் எதிர்பார்க்கவில்லை. ' தி.மு.கவுடன் கூட்டணி ஏற்பட்டால், கணிசமான இடங்களை வெல்லலாம்' என நம்பிக்கையோடு காத்திருந்த தொண்டர்கள், அதிர்ந்து போனார்கள்.

இந்நிலையில், ' உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி' என அறிவித்துவிட்டார் வாசன். 
த.மா.கா மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " தி.மு.க கூட்டணி அமைய வேண்டும் என நாங்கள் விருப்பப்பட்டதைவிடவும், தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். 19-ம் தேதி காலையில் ஜி.கே.வாசனை அழைத்தவர், ' சென்னையில் இருக்கீங்களா? உங்களை சந்திக்க வேண்டும்' என்றார். அவரது அழைப்பின்பேரிலேயே நாங்கள் சென்றோம். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசிய ஸ்டாலின், ' மாவட்ட செயலாளர்களிடம் பேசி எவ்வளவு சீட் ஒதுக்கப்படும் என்பதை, அந்தந்த மாவட்டங்களில் முடிவு செய்து கொள்ளலாம்' என நம்பிக்கை அளித்தார். ஆனால், நாங்கள் கூட்டணிக்குள் வருவதை காங்கிரஸ் கட்சி விரும்பாதது ஒருபுறம் இருந்தாலும், கனிமொழிக்கு இதில் அறவே விருப்பம் இல்லை. தி.மு.கவுக்குள் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஸ்டாலின் மட்டுமே எங்கள் பக்கம் நின்றார்.  எங்கள் கட்சியில் இருந்து காங்கிரஸ் கூடாரத்திற்குச் சென்றவர்களும் தி.மு.க கூட்டணியில் த.மா.கா இடம்பெறுவதை விரும்பவில்லை. இதனால், எங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.
சட்டமன்றத் தேர்தலில், எங்கள் கட்சிக்கான ஓட்டுக்களே எங்களுக்குக் கிடைக்கவில்லை. காரணம், அப்போது அமைந்த மக்கள் நலக் கூட்டணி, மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மீண்டும் மக்கள் நலக் கூட்டணி என முடிவெடுக்கவும் விருப்பமில்லை. எனவே, ' தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தை நிரூபிப்போம். அதன் பின்னர் நமது முக்கியத்துவதை பிற கட்சிகள் உணர ஆரம்பிக்கும்' என்ற முடிவுக்கு வந்தார் வாசன். உள்ளாட்சியில் எங்கள் பலத்தை நிரூபிப்போம்" என்றார் உறுதியாக.  
தென்னந்தோப்புக்குள் சூரிய வெளிச்சத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஜி.கே.வாசன். மேகக் கூட்டங்களின் நெரிசலால் சூரியனின் பார்வை தோப்புக்குள் வராமலே கடந்து சென்றுவிட்டது.
-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: