சனி, 24 செப்டம்பர், 2016

பெங்களூரை மிஞ்சிய கோவை கலவரம் .. பாஜக ரவுடிகளை அடக்கமுடியாமல் திணறிய போலீஸ்

கோவை: பெங்களூரில் நடந்த கலவரத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒரு வெறியாட்டத்தை கோவையில் நேற்று நடத்தியுள்ளனர் இந்து முன்னணியினர். ஒட்டுமொத்த நகரத்தையும் வன்முறையால் சூறையாடியுள்ளனர். நகரமே ஸ்தம்பித்துப் போனது. மக்கள் இந்த வன்முறையால் பெரும் அதிருப்திக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகினர்.
கோவை சுப்பிரமணியபாளையத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார். இந்து முன்னணி மாவட்ட செய்தித் தொடர்பாளரான இவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்து சரமாரியாக வெட்டப்பட்டார். இதில் சசிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கோவையில் பெரும் பதட்டம் மூண்டது. கலவரம் வெடித்தது. பஸ்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மீதும் கல் வீசினர். இதில் 2 பஸ்களின் கண்ணாடியும் உடைந்தது. 14க்கும் மேற்பட்ட பஸ்கள் தாக்குதலுக்குள்ளாகின.

கோவை வன்முறை

நேற்று மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. கோவை மாவட்டம் முழுவதும் பல நகரங்கள் ஸ்தம்பித்தன. கடைகள் அடைக்கப்பட்டன. திருப்பூரிலும் கடைகள் அடைக்கப்பட்டன. கோவையில் பந்த் போன்ற நிலைமை காணப்பட்டது. அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஹோட்டல்கள், கடைகள் என எதுவும் திறக்கப்படவில்லை. டீக்கடை கூட திறக்கப்படவில்லை.

கடையடைப்பு

கவுண்டம் பாளையம், ஹவுசிங்யுனிட், கவுண்டர் மில் பகுதி, உருமாண்டம் பாளையம், சுப்பிரமணியம் பாளையம், காசிநஞ்சே கவுண்டன் புதூர், விசுவநாதபுரம், வெள்ளக்கிணறு, துடியலூர், வடமதுரை, நரசிம்மநாயக்கன் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பஸ் நிலைய காம்பளக்ஸ், பங்களா மேடு, ஊட்டி மெயின் ரோடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை. பொள்ளாச்சி பகுதியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பல்லடம்

பல்லடத்தில் எம்.ஜி.ஆர். ரோடு, உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தாராபுரம் பகுதியிலும் அனைத்து கடைளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதில் குறைந்த அளவிலேயே பயணிகள் சென்று வருகிறார்கள். நகரின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை. முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடித்து நொறுக்கி வன்முறை

கோவையில் இந்து முன்ணியினர் மிகப் பெரிய வன்முறையில் குதித்தனர். கண்ணில் கண்ட வாகனத்தையெல்லாம் தாக்கினர். போலீஸ் ஜீப் உள்பட பல வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மூடிய கடைகளையும் கூட விடாமல் அடித்துத் தாக்கினர். மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடியது.


பெண்கள் பெரும் சிரமம்

இந்து முன்னணியினரின் இந்த வன்முறைத் தாக்குதலால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர். பலர் வெளியே போய் விட்டு வீடு திரும்ப முடியாமல் தத்தளித்தனர். பெண்கள் பல்வேறு இடங்களில் சிக்கிக் கொண்டு வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். ஏன் இப்படி ஒரு வன்முறை என்று மக்கள் பெரும அதிருப்திக்குள்ளாகும் அளவுக்கு வெறியாட்டம் போட்டு விட்டனர் இந்து முன்னணியினர்.

திணறிய போலீஸ்

இந்த வன்முறையை தடுக்க முடியாமல் போலீஸார் திணறியது வியப்பளித்தது. பல இடங்களில் வன்முறையாளர்களுடன் சேர்ந்து போலீஸாரும் அங்குமிங்கும் ஓடிய காட்சியைப் பார்க்க முடிந்தது. அதாவது இரும்புக் கரம் கொண்டு வன்முறையை அடக்கத் தவறி விட்டது காவல்துறை. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக இதுவரை 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  tamiloneindia.காம்

கருத்துகள் இல்லை: