வியாழன், 29 செப்டம்பர், 2016

காமத்திபுராவில் நான் வன்புணரப்படவில்லை... பள்ளியில்தான்...!" அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

vikatan.com :மும்பையின் காமத்திபுரா ஆசியாவின் மிகப் பெரிய ரெட்லைட் ஏரியா. இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் தான் இந்த சமூகத்தில் தான் சந்தித்த, சந்திக்கும் பிரச்னைகளை 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற  ஃபேஸ்புக்' பக்கத்தில் ஆதங்கமாக கொட்டியுள்ளார். அவரது பதிவு வைரல் ஆகியிருக்கிறது. இந்த பெண் சாதாரண ஆள் இல்லை. காமத்திபுராவில் பிறந்து சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 'கேர்ள் ஆன் தி ரன்' என்ற மாநாடு வரை சென்று பெண்கள் உரிமை குறித்து பேசியவர். பெயர் குறிப்பிடப்படாத அவரது பதிவு நம்மை அதிரவும் வைக்கிறது. அதே வேளையில் சிந்திக்கவும் சொல்கிறது.
 
'' கேரளாவில் இருந்து எனது தாயார் பாலியல் தொழிலுக்காக மும்பைக்கு அழைத்து வரப்பட்டவர்.  எனது தந்தை எனது தாயை சந்தித்த போது, தீவிர காதலில் விழுந்தார். அவரது காதல் கிறுக்குத்தனமாகவே எனது தாய்க்கும் தோன்றியுள்ளது. ஆனாலும் இருவரும் திருமணமும் புரிந்து கொண்டனர். விளைவு காமத்திபுராவிலேயே நான் பிறந்தேன். நான் பிறந்த பிறகும் எனது குடும்பம் காமத்திபுராவை விட்டு வெளியேறி விட முடியவில்லை. காமத்திபுராவுடனேயே அதன் பழக்க வழக்கங்களுடன்தான் நானும் வளர்ந்தேன்.  எனது தாயார் என்னை பள்ளியில் சேர்த்தார்.
வளர வளரத்தான்  இந்த சமூகத்தில் பல்வேறு பிரச்னைகளை நான் எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.  ஒவ்வோரு இடத்திலும்  தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்தேன். பள்ளிக்கு சென்றால் சக மாணவிகள் என்னிடம் பேச மாட்டார்கள். கறுப்பாக ரெட்லைட் ஏரியாவில் இருந்து ஒரு பெண் வந்தால் என்ன மரியாதை கிடைக்குமோ அதுதான் எனக்கு பள்ளியில் கிடைத்தது. விளையாடினால் என்னைச் சேர்க்க மாட்டார்கள். எனக்கு பின்னால் இருந்து 'காக்கா'  'எருமை மாடு' என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். பள்ளியின் நான் ஒரு தீண்டத் தகாதவளாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் எல்லாமே எனக்கு எதிராகவே போய்க் கொண்டிருந்தது.
யாரும் என்னைச் சீண்ட மாட்டார்கள். இதனால், எப்போதும் நான் தனியாகவே இருப்பேன். இந்த சமயத்தை பயன்படுத்தி எனது ஆசிரியர் ஒருவர் என்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி கொண்டார். அப்போது எனக்கு வயது பத்துதான் ஆகியிருந்தது., ஆனால் நான் வன்புணரப்பட்டது கூட அப்போது எனக்குத் தெரியவில்லை. 'எது குட் டச்..' 'எது பேட் டச்... 'என அப்போது எனக்கு யாரும் சொல்லித் தரவவில்லை. நமது கல்வி முறையும் அப்படி. நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விஷயத்தைக் கூட 16 வயது வரை வெளியே சொல்லவில்லை. எனக்கு விபரம் தெரிந்த பிறகு,  காமத்திபுராவில் 'குட் டச் எது பேட் டச் எது எனத் தெருவோர நாடகங்கள் நடத்தத் தொடங்கினேன்.  மாதவிடாய் குறித்து சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுத்தேன். செக்ஸ் என்றால் என்னவென  விளக்கினேன். ஒரு கட்டத்தில் போலீசே கூட என்னைத் துரத்தியிருக்கிறது. வழக்கமாக இங்கே சிறுமிகள் அனுபவரீதியாக செக்ஸ்  பெறும் இடம் என்பது போலீசின் கண்மூடித்தனமான கருத்து.
எனது பெற்றோர்  கடந்த 2013ம் ஆண்டு கேரளாவுக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஆனால், நான் மும்பையை விட்டு நகரவில்லை. காமத்திபுராதான் எனக்கு வீடு. எனது அழகான வீடு. அன்பு சூழ் உலகம். என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் அன்பு நிறைந்தவர்கள். வெள்ளந்தி மனுஷிகள். அவர்களை விட்டு பிரிய எனக்கு மனம் இல்லை அவர்கள் என்னை மகளைப் போலவே பார்த்துக் கொள்கின்றனர். சில மாதத்திற்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. சாலையை கடந்த போது, ஒரு கார் டிரைவர் எனது காலில் காரை ஏற்றி விட்டார்.  அந்த டாக்சி  டிரைவருக்கு காமத்திபுரா உயிர்களை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் . இங்கே உலவுபவர்கள் அழுக்கு ஆத்மாக்கள் என்ற  எண்ணத்தில் அலட்சியமாக சிரித்தார். ஆனால், அந்த காரை மறித்து நிறுத்திய எங்கள் பெண்கள் , அந்த கார் ஓட்டுநரை கீழே இறங்கச் சொன்னார்கள். 'நீ எப்படி எனது மகள் காலில் காரை ஏற்றலாம் மரியாதையாக மன்னிப்பு கேள்'' என்று கெரோ செய்தார்கள். மன்னிப்பு கேட்க  மறுத்த அந்த ஓட்டுநர், என்னை பலமுறை ஏற இறங்கப் பார்த்தார். கீழ்த்தரமான சைககளை காட்டினார். ஆனால் அன்புசூழ் உலகம்தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கிறதே. மன்னிப்பு கேட்டுவிட்டுதான் அந்த இடத்தில் இருந்து அந்த ஓட்டுநரால் நகர முடிந்தது.  
என்னை பொறுத்தவரை காமத்திபுராதான் பாதுகாப்பான இடம். இங்கே என்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை. ஆனால், பள்ளியில்தான் என்னை ஆசிரியர் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டார். இங்கே என்னை ஆண்கள் அணுகினாலும் பாதுகாப்புக்கு ஏராளமான தாயார்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நான் இங்கு வசிக்கிறேன். வசிக்கப் போகிறேன். வசிப்பேன். சான்பிரான்சிஸ்கோவில் 'கேர்ள் ஆன் தி ரன் ' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தேன். அங்கேயிருந்த மக்கள் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். எனது வர்ணத்தை ஏற்றுக கொண்டார்கள். எனது பின்புலத்தை ஆராயவில்லை. எனது கதையை ஆர்வத்துடன் காது கொடுத்துக் கேட்டார்கள்.
செக்ஸை பற்றி சுதந்திரமாக உரக்கப் பேசினேன். பாலியல் கல்வி பற்றி நிறையப் பேசினேன். செக்ஸ் பற்றி பேசியதற்காக என்னை  எந்த போலீசும்  அங்கே விரட்டவில்லை. அங்கே நான் நிறையக் கற்றுக் கொண்டேன். அங்கே கற்றதைவைத்து எனது அழகான இந்த வீட்டை வேதனைகள் இல்லாத சொர்க்கமாக மாற்றுவேன். சக மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் இடமாக மாற்றுவேன். நீங்கள் வெள்ளையாக இருக்கலாம். நான் கருப்பாக இருக்கலாம். ஆனால் யாரையும் விட நான் அழகாக கருதுகிறேன். அழகுக்கும் வர்ணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன?  மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல விஷயங்களை ஏன் பார்க்கக் கூடாது?. ஏன் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது? காமத்திபுரா வேண்டுமானால் பலருக்கு வேறு விஷயத்திற்கு சொர்க்கபூமியாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை தேவதைகள் வாழும் பூமி!
-எம்.குமரேசன்

கருத்துகள் இல்லை: