புதன், 21 செப்டம்பர், 2016

திமுக கூட்டணியில் கொ.ம.தே.க?


minnambalam.com கடந்த சட்டமன்றத் தேர்தலில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி முதலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்தது. ஆனால், அதிமுக கூட்டணியில் சேர்க்கவில்லை. இதையடுத்து, திமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்தார் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். முதலில், அதிமுகவுடனான கூட்டணிக்கு முயற்சி செய்ததால், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்க்க விரும்பவில்லை திமுக பொருளாளர் ஸ்டாலின். இதையடுத்து, தனித்துப் போட்டியிட்டது கொங்குநாடு மக்கள் கட்சி.
சட்டமன்றத் தேர்தலில், கோவை, சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களை பொறுத்தவரை 90 சதவீதம் தொகுதிகளில் திமுக தோல்வியை தழுவியது.
கோவை மாவட்டத்தில், சிங்காநல்லூர் தொகுதியைத் தவிர மற்ற 9 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனதற்கு, கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. மேலும், சட்டமன்றத் தேர்தலில், கொங்கு நாடு மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால், ஒருசில தொகுதிகளை கைப்பற்றியிருக்கலாம் என்றும் கட்சியில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக, கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், திமுக பொருளாளர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவதே விருப்பம் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பேசியதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், திமுக தலைமையிடம் கலந்தாலோசித்துவிட்டு, பதில் சொல்வதாக ஸ்டாலின் கூறியிருப்பதாக ஈஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி தொடர்பாக, திமுக பொருளாளர் ஸ்டாலினை தமாகா தலைவர் வாசன் சந்திப்பும், திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: