புதன், 26 அக்டோபர், 2016

வயிறு கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் கௌசர் பானுவும் காப்பாற்ற வேண்டியவர்தான் மோடி ஜீ..!

சம்சுதீன் ஹீராசம்சுதீன் ஹீர ஆமாம் மோடி ஜீ…!
முஸ்லிம் பெண்களின் வாழ்வைச் சூரையாடுவதை நாம் அனுமதிக்க முடியாதுதான். அதெப்படி அந்த உரிமையை முஸ்லிம் ஆண்களுக்கு கொடுக்க முடியும்..?
ஃபாசிசம் தலையெடுக்கும்போதெல்லாம் சாத்தான்கள் வேதம் ஓதக் கிளம்பிவிடுவதை நாம் வரலாறு முழுவதும் பார்த்தே வருகிறோம். இதோ இப்போது நீங்கள் திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள்.
குஜராத் இனப்படுகொலையில் எஞ்சிய முஸ்லிம்களின் அகதி முகாமை, குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று வர்ணித்த உங்கள் வார்த்தைகளில் கூடபெண்கள்மீது நீங்கள் கொண்ட அளப்பறிய மரியாதையை வெளிப்படுத்தினீர் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு இவர்களுக்குதான் இல்லை..
உங்களுக்கு நினைவிருக்கிறதா மோடி ஜீ..ஹுசைன் நகர் என்றொரு பகுதியை..? எப்படி மறப்பீர்கள்? உங்களை உச்சானிக்கொம்பில் ஏற்றி அழகுபார்க்க அந்த மக்கள் சிந்திய உதிரங்களை நீங்கள் எப்படி மறப்பீர்கள்..? நீங்களும் மறக்க மாட்டீர்கள், நாங்களும் மறக்க மாட்டோம்.
ஹுசைன் நகர் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் பகுதி. கூலி வேலை செய்யும் அடித்தட்டு முஸ்லிம்கள் வாழும் பகுதி. அங்கு பெண்கள் அதிகம். குறிப்பாக இளம் பெண்கள். பெருநாள் கொண்டாங்களில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஹுசைன் நகரையும், நூரனி மஸ்ஜித்தையும், புத்தம்புது உடைகள் அணிந்து குதூகலித்துத் திரியும் இளம்பெண்களின் அழகையும் எந்தக் கவிஞனும் முழுதாய் வர்ணித்திட முடியாது.

பக்கத்து தெருவில் இருப்பவர்களும் விழாக்காலங்களில் ஹுசைன் நகரின் கொண்டாட்டங்களில் ஆர்வத்தோடு கலந்துகொள்வார்கள். அங்கிருந்து எட்டிப்பிடிக்கும் தூரத்தில் உள்ள ஃபிரோஜ் நகரைச்சேர்ந்த ஒரு இளம்பெண் கௌசர் பானு ஹுசைன் நகரைச் சேர்ந்த ஆமினா ஆப்பாவுக்கு பழக்கமாகிறாள்.
கௌசர் பானுவுக்கு ஒரு சிறிய பிளவினால் மேலுதட்டில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருக்கும். அதை மறைப்பதற்காக அவள் எப்போதுமே ஹிஜாப் அணிந்திருப்பாள். அந்தச் சிறு குறையைத் தவிர்த்துப் பார்த்தால் அவள் நிச்சயமாய் ஒரு பேரழகி தான்.
அவள் வயதொத்த பெண்களெல்லாம் திருமணமாகிச் செல்வதை ஏக்கத்தோடு பார்த்தபடி கடந்து செல்வது அவளுக்கு வாடிக்கை. குழந்தைகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். திருமணமும் குழந்தையும் தமக்கு கனவாகவே போய்விடுமோ என்ற கவலை அவளை அரித்துக்கொண்டு இருந்தது. ஆனால் ஆமினா ஆப்பாவின் நட்பு அவளின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது.
ஆமினா ஆப்பாவின் முயற்சியால் சிறிய அறுவை சிகிச்சைமூலம் அவள் உதடுகள் சீரமைக்கப்பட்டு திருமணமும் நடந்துவிட்டது. அப்போது அவள் ஒன்பதுமாத சிசுவைச் சுமந்துகொண்டு இருந்தாள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா மோடி ஜீ..? பதவிவெறி பிடித்த உங்கள் நாடகத்தால் ஆயிரக்கணக்கான மதவெறி பிடித்த உங்கள் பரிவாரங்களால் வயிறுகிழித்து வெளியெடுக்கப்பட்ட அந்தப்பெண் கௌசர் பானுவை..? திரிசூலத்தின் முனையில் சொருகப்பட்டு நெருப்பில் எரிக்கப்பட்ட அந்த சிசுவை..?
ஆனால் மோடி ஜீ.. நீங்கள் இன்னொன்றையும் மறந்திருக்கக் கூடும் என்பதால் நினைவுபடுத்துகிறேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு ஹுசைன் நகரில் கோலாகலமாக பெருநாள் கொண்டாடப்படுவதில்லை. ஏனென்றால் அங்கே ஒரு பெண்கூட மிஞ்சவில்லை..
ஆமாம் மோடி ஜீ…! முஸ்லிம் பெண்களின் வாழ்வைச் சூரையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது…
#ஹுசைன்_நகர்,
#நரோடா_பாட்டியா,
#குஜராத்
சம்சுதீன் ஹீரா, கோவை கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நாவலின் ஆசிரியர்.  சமுகப்பட்டகம்

கருத்துகள் இல்லை: