சனி, 22 அக்டோபர், 2016

வாமன ஜெயந்தி வானரங்களுக்கு கேரளாவில் ஆப்ப .. சந்தடி சாக்கில் மலையாளத்தில் கைவைத்து வாங்கிய செருப்படி !

bjp-brahminical-mischiefrss-brahminical-mischief-captionடந்த மாதம் (செப்.2016) கேரள மக்களால் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவித்த பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா, “கேரள மக்களுக்கு இனிய வாமன ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்” என்று தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ மலையாள இதழான கேசரியும் தனது “ஓணம்” சிறப்பிதழில் இதே கருத்தைப் பதிவு செய்திருந்தது. மாவலி மன்னனின் மறுவருகையை வரவேற்கும் ஓணம் பண்டிகையை, வாமனன் அவதரித்த நாளாக மடை மாற்ற முயலும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இப்பார்ப்பனக் குசும்புத்தனத்தைப் பெரும்பான்மையான கேரள மக்களும் ஓட்டுக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் உடனடியாகக் கண்டித்துக் கருத்துக்களை வெளியிட்டன
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மாவலியின் நினைவாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி எனக் குறிப்பிட்டுத் தெரிவித்த வாழ்த்துச் செய்தி
ஓணம் பண்டிகை மற்ற இந்து மதப் பண்டிகைகளிலிருந்து மாறுபட்ட தொன்மத்தைக் கொண்டதாகும். “கேரளத்தை ஆண்டு வந்த மாவலி என்னும் அசுரகுல மன்னரின் ஆட்சியின்கீழ் மக்கள் பேதமின்றியும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். ஒரு அசுரகுல மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்டும், மாவலிக்கு மக்கள் மத்தியில் இருந்த அன்பையும் ஆதரவையும் கண்டும் கொதித்துப்போன தேவர்கள், மாவலியை வீழ்த்த விஷ்ணுவிடம் சென்று வேண்டினர். மாவலி தனது யாகத்திற்காகத் தானம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அங்கு வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு தமக்கு மூன்றடி நிலம் வேண்டும் என யாசகம் கேட்டார். மாவலியின் ராஜகுருவான சுக்கிராச்சாரியார், வந்திருப்பது விஷ்ணு என்றும் அவரது சதித் திட்டத்திற்கு பலியாக வேண்டாம் என்றும் மாவலியிடம் எச்சரித்தார். ஆனால், யாசகம் கேட்டு வந்தவற்கு இல்லை என்று தம்மால் சொல்ல முடியாது என்று கூறி, சுக்ராச்சாரியரின் எச்சரிக்கையை மறுதலித்த மாவலி மன்னன், மூன்றடி நிலத்தைக் கொடுக்கச் சம்மதித்தார். குள்ளமாக வாமன வடிவத்தில் வந்த விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். மூன்றாவது அடியைத் தனது தலை மேல் வைக்குமாறு மாவலி கூறினார். இதற்காகவே காத்திருந்த விஷ்ணு மாவலியின் தலையில் கால் வைத்து அழுத்தி, அவரைப் பாதாளத்திற்குள் தள்ளினார். அப்போது மாவலி விஷ்ணுவிடம், தாம் ஆண்டுக்கொருமுறை தமது குடிமக்களைக் காண பூமிக்கு வந்து செல்ல அனுமதித்து வரமளிக்க வேண்டினார். விஷ்ணுவும் அவ்வரத்தை மாவலிக்கு அளித்தார்” என்பதுதான் ஓணம் பண்டிகையின் பின்னுள்ள புராணக் கதை.
இப்புராணக்கதையின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில், திருவோண நட்சத்திர நாளன்று மாவலி மன்னன் தனது குடிமக்களைக் காண வருவது ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கேரள மக்கள் மாவலி மன்னனை வரவேற்க, தங்களின் வீட்டின் முன்பு அத்தப்பூக் கோலமிட்டு, பல்வேறு வகையான உணவு வகைகளைச் செய்து படையல் இடுகின்றனர்.
V0044941 Vamana avatar: Vaman before King Bali and consort. Gouache dவிஷ்ணுவின் அவதாரங்கள் அசுரர்களை வதம் செய்ய எடுக்கப்பட்டவை என்றாலும், அந்த அவதாரங்களிலேயே அயோக்கியத்தனமானது வாமன அவதாரம்தான். ஏனெனில், மற்ற அவதாரங்களில் எல்லாம் தேவர்களுக்கு ‘கொடுமை’ செய்த அசுரர்களைத்தான் விஷ்ணு வதம் செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பார்ப்பனப் புராணப்படியே மக்கள் நலம் பேணும் மன்னனாகச் சித்தரிக்கப்பட்ட அசுர குலத்தைச் சேர்ந்த மாவலியை விட்டு வைப்பது தமக்கு ஆபத்து எனக் கருதிய தேவர்கள், விஷ்ணுவோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தந்திரமாக அம்மன்னனை வீழ்த்திய அயோக்கியத்தனம்தான் வாமன அவதாரம்.
நரகாசுரன், மகிசாசுரன் போன்ற அசுரர்களைப் பார்ப்பனக் கடவுளர்கள் கொலை செய்ததைப் போற்றி தீபாவளி, துர்கா பூஜை உள்ளிட்ட இந்துமதப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வெற்றி பெற்ற பார்ப்பனக் கடவுளர்கள்தான் அந்தப் பண்டிகையின் நாயகர்கள். ஆனால் ஓணம் பண்டிகையோ, பார்ப்பனக் கடவுளின் சதியால் கொல்லப்பட்ட அசுர குலத்தைச் சேர்ந்த மாவலியை நினைவுகூர்ந்து வரவேற்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் நாயகனாக அசுரகுல மன்னன் இருப்பதை உறுத்தலாகக் கருதும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல், அதன் காரணமாகவே ஓணம் பண்டிகைக்கு வாமன ஜெயந்தி என வாழ்த்துத் தெரிவித்து, அப்பண்டிகையின் குறிபொருளையே மாற்றிவிடச் சூழ்ச்சி செய்கிறது.
இந்துமதப் புராணங்களால் கொடுங்கோலர்களாக சித்தரிக்கப்படும் அசுரர்களை, இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் குல தெய்வங்களாக வழிபடுகின்றனர். அவ்வகையில், இராமனால் கொல்லப்பட்ட இராவணனை ஜார்கண்டைச் சேர்ந்த பழங்குடி இன மக்களும், துர்க்கையால் நைச்சியமாகக் கொல்லப்பட்ட மகிசாசுரனை சந்தால் பழங்குடி இன மக்களும் குல தெய்வமாகப் போற்றி வருகின்றனர். கேரளத்திலோ பார்ப்பனர் உள்ளிட்ட எல்லாச் சாதியினரும் மாவலியை கொண்டாடுகிறார்களேயன்றி, வாமனனைக் கொண்டாடுவதில்லை.
தனது கருத்துக்குக் கேரள மக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சாக்கில், “கேரளாவில் உள்ள வாமன கோவிலில் மக்கள் அன்றாடம் வழிபடுவதால், வாமன ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறியதில் தவறு ஏதும் இல்லை” என்று பா.ஜ.க. கேரள மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் தந்திரமான அறிக்கை அளித்தார். மேலும், ”மாவலியை நினைவுகூரும்போது வாமன அவதாரத்தை நினைவுகூராமல் இருக்க முடியுமா?” என்று அடிமுட்டாள்தனமாகவும் சமாளிக்க முயன்றது ஆர்.எஸ்.எஸ்.
இரண்டாம் உலகப் போர் என்றால் ஹிட்லர் நினைவு வரத்தான் செய்யும். இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால், ஆங்கிலேயர்களைப் பற்றியும் சொல்லத்தான் நேரிடும். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வாதப்படிப் பார்த்தால், இந்த வில்லன்களைத்தான் கொண்டாட வேண்டும். அதனுடைய வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைக் கூட காணவியலாத அளவிற்கு ஆரிய – பார்ப்பன வெறி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கண்களை மறைக்கிறது.
இது மட்டுமின்றி, கேரளாவில் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், சாதி இந்துக்கள் எனப் பெரும்பாலான மக்களின் பொதுவான உணவாக மாட்டுக்கறி இருந்துவரும்வேளையில், மாட்டுக் கறிக்குத் தடை கோரி கேரளாவில் பரப்புரை செய்து வருகிறது, பா.ஜ.க. கேரள மக்களின் பாரம்பரியம், பண்பாடு இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தனது ஆரிய கருத்தியலையும், பண்பாண்டையும் திணிப்பதிலே ஆர்.எஸ்.எஸ். கும்பல் குறியாக இருப்பதைத்தான் இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
தன்னுடைய ஆரிய வெறியைப் புரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலே கேரள மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இருந்தபோதிலும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான யாரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், “அமித் ஷாவின் கருத்து கேரள மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக” மொன்னையாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். வாமனனின் சூழ்ச்சி தெரிந்தும் அவனுக்கு வரம் கொடுத்த மாவலியை நேர்மையாளன் என்றோ, ஏமாளி என்றோ சொல்லலாம். அமித் ஷாவுக்குச் சலுகை வழங்கும் இவர்களை என்னவென்று அழைப்பது?
– அழகு வினவு.காம் 

கருத்துகள் இல்லை: