புதன், 19 அக்டோபர், 2016

உபியில் காங்கிரஸ் காலியாகிறது? ரீட்டா பகுகுணா பாஜகவுக்கு தாவல்.

உ.பி.,யில், அடுத்தாண்டு துவக்கத்தில், சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்.,ன் மூத்த தலைவர்கள், பா.ஜ., உள்ளிட்ட கட்சி களுக்கு ஓட்டம் பிடிக்க துவங்கி உள்ளனர். இதனால், காங்., மேலிட தலைவர்கள், கலக்கமடைந்து உள்ளனர். உ.பி.,யில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளும், இப்போதே தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த தேர்தலில், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதை, தற்போது சரியாக கணிக்க முடியாது. அதே நேரத்தில், யாருக்கு வாய்ப் பில்லை என்பதை, அரசியலில் அரிச்சுவடி படிப் பவர்களும், சுலபமாக கூறி விட முடியும். முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, ஆளும் சமாஜ்வாதி கட்சி, முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மத்தியில் ஆளும், பா.ஜ., ஆகியவற்றுக்கு இடையே தான், அங்கு தற்போது கடும் போட்டி உள்ளது.


ஒரு காலத்தில், உ.பி.,யில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், உ.பி., தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்பதுடன், எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது என்ற நிலையே, தற்போது உள்ளது.அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும், உ.பி., சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில், பிரதான கட்சிகள் ஏற்கனவே களமிறங்கி விட்டன.

காங்., துணைத் தலைவர் ராகுலும், 3,500 கி.மீ., துார விவசாயிகள் பேரணியை நடத்தினார்.
உ.பி.,யில் இழந்த ஆட்சியை, மீண்டும் அடையும் இலக்குடன் நடந்த இந்த பேரணி, மிகப்பெரிய வெற்றி என, காங்., கூறி வருகிறது.

உ.பி., மக்கள் தொகையில், 14 சதவீதம் உள்ள பிராமணர்களின் கணிசமான ஓட்டுகளை, அவர் ஈர்த்துள்ளார் என்றும் கூறப்பட்டது. அதேபோல், 8 சதவீதம் உள்ள தாக்குர், 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுகளை அறுவடை செய்யும் வகையில், ராகுலின் யாத்திரைநடந்ததாக,
கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதை, உ.பி.,யில், காங்கிரசுக்கு சரியாக பொருந்தி
வருகிறது. ஏற்கனவே, மோசமான நிலையில் இருக்கையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், மாற்றுக் கட்சிகளுக்கு மாறி வருகின்றனர். கட்சி யின், உ.பி., தலைவராக இருந்த, மூத்த பெண் தலைவர் ரீட்டா பகுகுணா, பா.ஜ.,வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உ.பி., முதல்வர் வேட்பாளராக, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை அறிவித்தது, கட்சி யின், பிராமண முகமாக கருதப்படும் ரீட்டாவுக்கு, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதே, இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.காங்., தலைவர் சோனியாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் ரீட்டா, கட்சியில் இருந்து விலகுவது, கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, நம்பப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய பிரிஜேஷ் பதக், ஏற்கனவே, பா.ஜ.,வில் இணைந்துள்ள நிலையில், ரீட்டாவும் இணைவது, பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய தெம்பை அளிக்கும்.தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், வெற்றி வாய்ப்பு இல்லாததால், காங்கிரசில்இருந்து, அடுத்தடுத்து பல்வேறு தலைவர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


யார் இந்த ரீட்டா?

உ.பி., மாநில, காங்., - எம்.எல்.ஏ.,வான ரீட்டா பகுகுணா, 2007 - 2012 வரை, அந்த மாநில காங்., தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அலகாபாத் பல்கலையில், பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அகில இந்திய காங்., மகளிர் அணி தலைவராக பதவி வகித்த அவர், கடந்த லோக்சபா தேர்தலில், லக்னோ தொகுதி யில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

உ.பி., முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் இந்திரா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவருமான, எச்.என். பகுகுணாவின் மகள் என்ற பெருமையும், இவருக்கு உண்டு. உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், இவரது சகோதரருமான விஜய் பகுகுணா, சமீபத்தில், காங்.,லிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் குமார் யோசனை!

உ.பி., சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, முதல் வர் அகிலேஷ் யாதவுக்கு, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், புதிய யோசனை தெரிவித்து உள்ளார்.இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது:உ.பி., சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற, அகிலேஷுக்கு, யார் தயவும் தேவையில்லை. மாநிலத்தில், மது விலக்கை அவர் அமல்படுத்தினாலே போதும், வெற்றி நிச்சயமாகி விடும்.

உ.பி.,யில், இளைஞர்களின் முகமாக உள்ள அகிலேஷ், மதுவிலக்கை அமல்படுத்தினால், தேர்தலில் அவரை ஆதரித்து பிரசாரம் செய்வேன். 'ரிஸ்க்' எடுக்காமல், வெற்றி பெற முடியாது. அரசியலில் வெற்றி பெற, ஏதாவது அதிரடியாக செய்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: