வியாழன், 20 அக்டோபர், 2016

மதுரை சிந்தாமணி ! வாழ்வின் நினைவுகளைச் சுமந்த திரையரங்கம்!

thetimestamil.com -  ஸ்ரீரசா
ஸ்ரீரசா
:   1937 ஆம் ஆண்டில் வெளியான படம் “சிந்தாமணி”. எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்தது. 1930ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிடி சினிமா திரையங்கில் சிந்தாமணி படம் ஓராண்டையும் கடந்து ஓடி வ : சூலில் சாதனை படைத்தது. இத் தொகையில் இருந்தே தற்போது இடிக்கப்படும் பழமையான சிந்தாமணி திரையரங்கு கட்டப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களான ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினர் சிந்தாமணி படத்தின் லாபப் பணத்தில் மதுரையில் ஒரு தியேட்டரைக் கட்டினார்கள். அதற்கு “சிந்தாமணி” என்ற அந்தப் படத்தின் பெயரையே சூட்டினார்கள்.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் மதுரை மக்களின் வாழ்வோடு கலந்திருந்தது சிந்தாமணி திரையரங்கம். கீழ வெளி வீதியில் சிந்தாமணி டாக்கீஸ் என்கிற பேருந்து நிறுத்தமே இன்றளவும் உண்டு. மதுரையின் திரைப்படக் கலாச்சாரம் தனித்த ஆய்வுக்குரியது. இம்பீரியல் டாக்கீஸ், தினமணி டாக்கீஸ், கல்பனா டாக்கீஸ், சிட்டி சினிமா, நியூ சினிமா, ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் தியேட்டர் என்று கிட்டத்தட்ட 52 சினிமாக் கொட்டகைகள் இருந்தன. இவை தவிர சுற்றியுள்ள ஊர்களில் டெண்ட் கொட்டகைகள் வேறு. எல்லாம் கால வேகத்தில் மறைந்து வருகின்றன.
1931 -ல் தமிழ்த்திரைப்படத்தின் வரலாறு துவங்குகிற காலத்துக்கும் முன்னர் வந்த ஊமைப்படங்களின் காலத்திலேயே மதுரையின் திரைப்பட வரலாறும் கலாச்சாரமும் துவங்கிவிட்டன. மதுரையில் திரைப்படம் தவிர வேறு பொழுது போக்குகள் குறைவு. மீனாட்சி அம்மன் கோவில், ராஜாஜி பார்க், காந்தி மியூசியம், அழகர் கோவில், மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், விறகனூர் அணை., வைகை அணை போன்றவை விட்டால், மதுரைக்காரர்களுக்கு கோவில் திருவிழாவில் போடப்படும் நாடகங்கள், கூத்துக் கச்சேரிகள், கரகாட்டம், சித்திரைத் திருவிழா, அதையொட்டி நடத்தப்படும் பொருட்காட்சி, சர்க்கஸ், கபடிப்போட்டி, சிலம்பாட்டம் என்று உள்ளவை தவிர்த்து குறைந்த செலவிலான பெரும் பொழுதுபோக்காக இருந்தவை மதுரையிலிருந்த திரைப்பட அரங்குகளே. சிவாஜி படம், எம்.ஜி.ஆர். படம் தொடங்கி பழைய சண்டைப் படங்கள், புராணப்படங்கள் தொடங்கி, விக்ரமின் சாமி படம் வரைக்கும் அங்கே பல படங்கள் பார்த்திருக்கிறேன்.
சிந்தாமணி திரையரங்கம் பக்கம்தான் மதுரையில் ஒரு காலத்தில் பிரியாணிக்காகப் புகழ்பெற்ற அம்சவல்லி ஹோட்டல் இருந்தது. அதையொட்டி, நேவி பேனா கடை இருந்தது. மரக்கட்டையில் கடையப்பட்ட மைஊற்றி எழுதும் பேனாக்கள் இந்தக் கடையின் விசேஷம். இவற்றின் அருகில் இருக்கும் மதுரை மக்களின் மனங்கவர்ந்த இந்த சிந்தாமணி டாக்கீசில் எத்தனையோ வெற்றிப்படங்கள் ஓடியிருக்கின்றன. 1947ல் வெளிவந்த பாவேந்தர் பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல் எழுதிய படமான ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி போன்ற பல படங்கள் இங்கே திரையிடப்பட்டுப் பல நாட்கள் ஓடின. அந்தப் படம் பின்னாட்களிலும் பலமுறை திரையிடப்பட்டது.
எனது மாணவப்பருவத்தில் அந்தப் படத்தை அங்கே தான் பார்த்தேன். செயிண்ட் மேரீஸ் பள்ளியில் படித்ததனால் இங்கே பார்த்த படங்கள் நிறைய. போற வழிதான். ஒரு முறை பள்ளிச் சுற்றுலா செல்லும் போது, இரவில் பள்ளிக்கு வந்துவிடச் சொன்னார்கள். அப்போதுதான் சிவாஜி மூன்று வேடத்தில் நடித்த திரிசூலம் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பேருந்து அதிகாலையில்தான் கிளம்பும் என்பதால் பலரும் சென்று இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு வந்தோம்.
1990 களில் மதுரையில் பழமை அடையாளங்களாக இம்பீரியல் டாக்கீஸ், தினமணி டாக்கீஸ், சிட்டி சினிமா, நியூ சினிமா, தேவி தியேட்டர், சாந்தி தியேட்டர், போத்திராஜா, ஜெயராஜ் ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் தியேட்டர் என்று பலவும் மறைந்து வேறொன்றாகிவிட்டன. தேவி திரையரங்கம் இடிக்கப்படும் முன்பு அதனைப் புத்திசாலித்தனமாகப் நடிகர் பார்த்திபன் தனது படத்தில் பயன்படுத்தினார். சினிமாக் கொட்டகைகள் மறையத்தொடங்கிய பின்னாளில் இந்த சினிமா தியேட்டர் ராஜ்மஹால் ஜவுளி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி குடோனாகப் பயன்படுத்தியது. தற்போது, அதை இடித்துத் தரைமட்டமாக்கி, கீழ் தளத்தில் இரு அடுக்கு உட்பட 6 அடுக்குகளாக மாற்றப்பட உள்ளது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே, என்கிற நன்னூலாரின் வரிகள் நினைவுக்கு வந்தாலும், வாழ்வின் நினைவுகளைச் சுமந்தவைகள் மறையும் போது, மனசுக்குள் ஒரு வினோதக் கனமே.
ஸ்ரீரசா, எழுத்தாளர்; ஓவியர். விரைவில் வரவிருக்கும் இவருடைய நூல் ‘அரசியல் சினிமா’ (காலம் வெளியீடு)

கருத்துகள் இல்லை: