சனி, 22 அக்டோபர், 2016

ஜே.என்.யூ: காணாமல் போன மாணவரை தேட உத்தரவு: ராஜ்நாத் சிங்!

டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த நஜீப் அகமது என்பவரை கடந்த 15ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து காணாமல் போன நஜீப் அகமதுவை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் நேற்று முதல் பல்கலைக்கழக வளாகத்தில் விடிய விடிய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக துணைவேந்தரையும் ஊழியர்களையும் அக்கல்லூரி மாணவர்கள் சிறை பிடித்தனர். அவருடன் கல்லூரி நிர்வாகிகள் 12 பேரும் நேற்று இரவில் இருந்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.
அவர் காணாமல் போனதற்கு முந்தைய தினம், கல்லூரி வளாகத்தில் சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜகதீஷ் குமார் உட்பட 12 அதிகாரிகளை மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற விடவில்லை. மாணவர்களும், ஊடக நபர்களும் குறிப்பிடப்படும் அதிகாரிகளைச் சந்தித்து பேசியபடி இருக்கின்றனர். போலீஸாருக்கு இது குறித்து புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி, ‘குற்றவாளிகளுக்கு’ தண்டனை அளிக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து பேசிய ஜகதீஷ் குமார், அவர்களுக்கு எதிரான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மாணவர்களோடு சில கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், ‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும்’ என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறார். மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: