ஞாயிறு, 20 நவம்பர், 2016

500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தலாம்?

ஆக்ரா: ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை மறு ஆய்வு செய்யவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளது பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. என்ன மாதிரியான மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தார். இதை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தும் அவர் அறிவிப்பு வெளியிட்டார். அன்று முதல் ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். இதை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், பிற வங்கிகளும் எடுத்து வருகின்றன. என்றாலும் போதிய அளவு 100 ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் இல்லாததால் பெரும் குழப்பமே நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை இப்போதைக்கு சரி செய்ய முடியாது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்தி விட்டார்.

இந்த நிலையில்தான் தற்போது இந்த மறு ஆய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோடி. அதன்படி என்ன மாதிரியான மாற்றம் வரலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. மத்திய அரசு தனது முடிவை முற்றிலுமாக ரத்து செய்யாது என்று கருதப்படுகிறது. அதேசமயம், மக்களின் டென்ஷனைக் குறைக்கும் வகையில் சில அறிவிப்புகளை அது வெளியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மட்டும் தளர்த்தி பழைய ரூபாய் நோட்டுக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிட வாய்ப்புண்டு.
அதேசமயம் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் சற்று கூடுதலாக்கப்படும்.
பழைய 500 ரூபாய் நோட்டுக்களை அனைத்து இடங்களிலும் வாங்க மத்திய அரசு உத்தரவிட வாய்ப்புண்டு. தற்போது அதை வங்கிகளில் மட்டுமே மாற்ற முடிகிறது. அதைத் தளர்த்தி 500 ரூபாய் நோட்டை முழுமையாக விலக்கிக் கொள்ளும் வரை பயன்படுத்த அரசு அனுமதிக்கலாம்.
அதேபோல, 100, 50 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் போதிய அளவில் அச்சிடப்படும் வரை பழைய நோட்டுக்களைப் புழக்கத்தில் இருக்க மத்திய அரசு அனுமதிக்கவும் வாய்ப்புண்டு.
எது எப்படி இருந்தாலும் மோடி என்ன சொல்லப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: