புதன், 30 நவம்பர், 2016

தியேட்டரில் எழுந்து நிற்பதெல்லாம் தேசபக்தியாகிவிடாது’: எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் கருத்து

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இழிவுபடுத்தப்படுவதாக, போபாலை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ஷ்யாம் நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து திரையரங்குகளிலும் படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதத்தை கண்டிப்பாக இசைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசிய கொடி திரையிடப்பட வேண்டும் எனவும்
அப்போது, திரையரங்கில் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் அனைத்து திரையரங்குகளிலும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வணிக ரீதியான பலன்களை பெறும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தை இசைக்க கூடாது என்றும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரும்பத்தகாத பொருட்களில் தேசிய கீதத்தை அச்சடிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை எப்படி பாடுவது என்பது கூட தற்போதுள்ள மக்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ள நீதிபதிகள், மக்களுக்கு அது கட்டாயமாக கற்றுத்தரப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்ற மத்திய அரசு இது தொடர்பான அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதாக உறுதியளித்துள்ளது.
இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ராணுவ வீரர் சதீஸ் செல்லதுரை தனது முகநூலில், ‘தியேட்டரில் எழுந்து நிற்பதெல்லாம் தேசபக்தியாகிவிடாது’ என எழுதியுள்ளார். தேசபக்தி என்றாலே ராணுவ வீரர்களை கைகாட்டும்நிலையில் அவருடைய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.. அவருடைய முழுபதிவும் இங்கே:
‘பேசாம நீங்க எல்லாரும் எல்லைக்கே வந்திடுங்க… இங்க பக்தியை நிரூபிக்கும் எந்த நிப்பாட்டலும் கிடையாது.
தேசியகீதம் பாட எழுந்து நிக்க வாய்ப்புகள் அமைவது குதிரைக்கொம்பு. காலைல டியூட்டில இருக்குறவன் கொடி ஏத்தி சல்யூட் அடிச்சிடுவான். சாயங்காலமா டியூட்டில இருக்குறவன் டயத்துக்கு அத பக்குவமா சல்யூட் அடிச்சி இறக்கிடுவான்.இந்த கேம்ப்ல இருந்து பார்க்கும் ஒரு நாள் டியூட்டி வர்றதுக்கு பல மாசம் ஆகும். மத்த நாளெல்லாம் பார்டர்ல ஒண்டுக்குச்சிலில் பாரத் மாதா கீ ஜே தான்.
மழை பெய்தா கொஞ்சம் அவசரம் அவசரமா இறக்கனும்.. ஏன்னா அந்தப்பக்கமா காயப்போட்ட துணிகளை எடுத்து வைக்கலன்னா பார்டர்ல டியூட்டி இருந்து வர்றவன் போஸ்ட்ல என்ன……….ட்டா இருந்தன்னு நாறக்கேள்வி கேட்பான்.
சில அப்சர்வேசன் பாய்ண்ட்ஸ் உண்டு. நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடைல 50மீட்டர்தாம் இருக்கும். இரண்டு பாய்ண்ட்லயும் அவங்கவங்க கொடி ஏத்திருப்போம். சாயங்காலமா நேரத்துக்கு கொடி இறக்கனும்னா விசிலடிச்சி நியாபப்படுத்துவாங்க பாகிஸ்தான் ரேஞ்சர்ங்க. ஒரு டாங்ஸ சத்தமா சொல்லாம சைகைல சொல்லிட்டு கொடிய இறக்கிட்டு டியூட்டி முடிச்சி போஸ்ட்ல வந்து பேஸ்புக்க திறந்தா தேச பக்தி குய்யோ முய்யோன்னு பாம்பு வாய்ல மாட்ன எலியாட்டம் முனங்கிட்டு இருக்குது.
தேசபக்தி என்பது கொடிகளுக்குள் கீதங்களுக்குள் அடக்கி வைக்கப்படுவதல்ல.அது சக மனிதனுக்கான உரிமையை பெற்றுத்தரும் உதவியாக இருக்கலாம். போராட்டமாக இருக்கலாம். சத்தியமாக தியேட்டர்களில் எழுந்து நிற்பதில் இருக்க வாய்ப்பே இல்லை.
–  சதிஷ் செல்லத்துரை,
எல்லைப் பாதுகாப்புப்படை  thetimestamil.com

கருத்துகள் இல்லை: