ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகள் திருமணம்.. 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள்... திணறும் நாக்பூர்

நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமண விழாவில் பங்கேற்க இந்தியாவின் உள்ள புள்ளிகள் 50க்கும் மேற்பட்ட தனி விமானங்கள் மூலம் நாக்பூருக்கு செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணம் இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவிஐபிக்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு செல்கின்றனர். மத்திய அமைச்சரின் வீட்டு திருமணத்திற்கு குறைந்தது 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள் நாக்பூருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, மகாராஷ்டிரா நிர்வாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே மற்றும் இதர மத்திய அமைச்சர்கள் என 10 ஆயிரத்திற்கும் விவிஐபி விருந்தினர்கள் இன்று மாலை நாக்பூரில் நடக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்கு தனி விமானத்தின் மூலம் செல்ல உள்ளனர்.
 இதுதவிர, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், நடிகர்கள் ஹேம மாலினி, அமித்தாபச்சன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா என பல்வேறு முக்கிய புள்ளிகளும் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் கெட்கிக்கும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யாவிற்கும் நாக்பூரில் உள்ள வார்தா சாலையில் உள்ள மண்டபத்தில் இன்று மாலை திருமண விழா நடைபெற உள்ளது. 
நிதின் கட்கரி பாஜகவின் தலைவராக இருந்த போது, 2010 ஆண்டு டிசம்பர் மாதம் அவரது முத்த மகன் நிகிலுக்கு நாக்பூரில் திருமணம் நடைபெற்றது. அப்போதும், இதே போன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாக்பூருக்கு விவிஐபிக்கள் படைஎடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Read more at: ://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: