ஞாயிறு, 4 டிசம்பர், 2016

சசிகலா புஷ்பா பாராளுமன்ற நிலைக்குழுவில் புகார் . பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் கலக்கத்தில் .

சென்னை:தன் மீது பொய் வழக்கு போடக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், காவல் துறை தலைவர் மீதெல்லாம், பார்லிமெண்ட் உரிமைக் குழுவிடம், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் எம்.பி.,யான சசிகலா புஷ்பா அளித்துள்ள புகாருக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது, தலைமைச் செயலக வட்டாரங்களில் புயலைக் கிளப்பி உள்ளது.தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி.,யான, திருச்சி சிவாவுக்கும், அ.தி.மு.க., - எம்.பி.,யாக இருந்த சசிகலா புஷ்பாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, சசிகலா புஷ்பாவை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அதன்பின், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் கட்சித் தலைவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார் சசிகலா புஷ்பா. இதையடுத்து, அவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இதனால், தமிழக அரசு மீது, சசிகலா புஷ்பா கடும் கோபம் அடைந்துள்ளார்.
உள்துறை அமைச்சரிடம் புகார்:   தன் மீது வழக்குப் போட காரணமாக இருந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் கொடுத்தார்.
அப்போது, அவர் அளித்த யோசனையை அடுத்தே, பார்லிமெண்ட் உரிமைக் குழுவிடம் புகார் அளித்தார், சசிகலா புஷ்பா. அந்தப் புகாரின் மீது, தற்போது நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளது,

பார்லிமெண்ட் உரிமைக் குழு. தமிழகத் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல் துறை தலைவர் என, எல்லோருக்கும் பார்லிமெண்ட் உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது, தமிழக தலைமைச் செயலக வட்டாரங்கல்ளில், புயலைக் கிளப்பி உள்ளது.

இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது;

சசிகலா புஷ்பா அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், மத்திய அமைச்சர்கள் பலருடன் நெருக்கமாக உள்ளார். அதனால்தான், தன் மீது, தமிழக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது எனக் கூறி, பார்லிமெண்ட் நிலைக் குழுவில், புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், தமிழக அரசு அமைதியாக இருக்க முடியாது. எப்படி பதில் அனுப்பினாலும், சிக்கல் வரலாம். அதனால், உரிமைக் குழுவுக்கு பதில் அனுப்புவது குறித்து, தமிழக அரசு உயர் அதிகாரிகள், குழப்பத்தில் உள்ளனர்.

விசாரிக்க வாய்ப்பு:

உரிமைக் குழுவைப் பொறுத்த வரை, நோட்டீசுக்கு அளிக்கும் பதில் திருப்திகரமாக இல்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, நேரில் அழைத்து விசாரிக்கவும் வாய்ப்புள்ளது. அதே போல, இந்த விவகாரத்தில், நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் மீதும், சசிகலா புஷ்பா, கடும் கோபத்தில் உள்ளார். அதனால், உரிமைக் குழுவுக்கு, அவர்களை, நேரில் அழைத்து விசாரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அதிகாரிகள் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது.

இப்படி செய்ததன் மூலம், தமிழக அரசு, தன் மீது மேற்கொண்டு வழக்குகளை தொடுக்க முடியாத சூழலையும், சசிகலா புஷ்பா ஏற்படுத்தி உள்ளார். இந்த உரிமைக் குழுவில், முக்கிய உறுப்பினராக தி.மு.க.,வின் கனிமொழி உள்ளார்.

சசிகலா புஷ்பா மீது கூறப்பட்டுள்ள புகார்களில் உண்மைத் தன்மை இல்லை என, நிரூபணமானால், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வதோடு, பொய் வழக்கு போட காரணமான அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், தமிழக அரசுக்கும்; மத்திய அரசுக்கும் மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. தினமலர்,காம்

கருத்துகள் இல்லை: