திங்கள், 5 டிசம்பர், 2016

அதிமுகவின் பொதுச் செயலாளராகிறார் சசிகலா!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை மிக மிக மோசமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரம் மற்றும் அதிமுக நிர்வாகத்தில் அடுத்த கட்ட மாறுதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
இன்று காலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், தலைமைக்கு கட்டுப்பட்டு, ஒற்றுமையாகச் செயல்படுவோம் என முடிவு எடுத்தனர். அதிமுகவைப் பொறுத்தவரை இத்தனை காலமும் தலைமை என்றால் ஜெயலலிதா மட்டும்தான். வேறு யாரும் கிடையாது. இப்போது அந்தத் தலைமை மிக மிக மோசமான நிலையில்.
அவருடைய இடத்தில் இப்போது பெயர் குறிப்பிடாமல் ஒரு பெண்மணியை முன்னிறுத்தியுள்ளார்கள். இந்த பெண்மணியை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றுக் கொண்டு, அவரது உத்தரவுக்கு கட்டுப்படுவதாக வாக்கும் அளித்துள்ளனர்.

அந்தப் பெண்மணிதான் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. ஆனால் கட்சியிலோ ஆட்சியிலோ அவர் வெளிப்படையாக எந்தப் பொறுப்பிலும் இல்லாததால் அவர் பெயரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை.
எனவே இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்தன. இதற்காக சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் - நடராஜன் உள்பட- அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுடனும் பேசி ஒருங்கிணைத்து வந்தனர்.
கட்சியின் 136 எம்எல்ஏக்களிடமும் எக்காரணம் கொண்டும் கட்சி மாற மாட்டோம், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுவோம் என பத்திரத்தில் எழுதி வாங்கியிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்எல்ஏக்களை சென்னையிலேயே தங்க வைத்து கவனித்துக் கொள்ள பெரிய டீம் ஒன்றே நியமிக்கப்பட்டுள்ளதாம்.
முதல்வர் குறித்த வதந்தி
இந்த சூழலில் முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று சில ஊடகங்களில் செய்தி பரவியது. பின்னர் அப்பல்லோ நிர்வாகம் இந்த செய்தியை மறுத்துள்ளது.
இந்த பரபரப்புச் சூழ்நிலை காரணமாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருப்பதை உறுதி செய்துள்ளது அதிமுக தலைமைக் கழகம். இந்தக் கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்வார்கள் எனத் தெரிகிறது  tamiloneinida.com

கருத்துகள் இல்லை: