திங்கள், 16 ஜனவரி, 2017

143 வருடங்களுக்குப் பிறகு தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் குடிநீர் பஞ்சம்! #RedAlert

அணைமிழகம் தற்போது, கடந்த 143 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது. அணைகள் வறண்டதால் விவசாயம் பொய்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் நிகழ்வாகி வருகிறது. இந்தநிலையில், 15 அணைகளில் தற்போது உள்ள  நீர்மட்டத்தை வைத்துப் பார்த்தால் அடுத்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் இதுவரை இல்லாத  மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.;தென் மாநிலங்களில் பெய்த மழை
கடந்த வருடத்தில் தண்ணீருக்காக மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய போரே நடைபெற்றது. தமிழகம், கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையே காவிரி தண்ணீர் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் பெரிய பெரிய இழப்புகளை இரு மாநிலங்களும் சந்தித்தன. தென் இந்திய மாநிலங்களில் தண்ணீருக்காக தொடர்ந்து பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது தமிழகம். இரண்டு புயலைத் தவிர,  பெரிதாக எந்த மழையும் பெய்யவில்லை. தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் 62 சதவிகித மழையை மட்டுமே கடந்த ஆண்டு தமிழகம் பெற்றது. இது கடந்த 143 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான மழை அளவாகும்.

இதற்கு முன்னர் கடந்த 1,876-ம் ஆண்டு 63 சதவிகிதம் மழை பெய்ததுதான் இதுவரை குறைவான  மழை அளவாக இருந்தது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இயல்பான அளவை விட 50 சதவிகிதத்திற்கும் குறைவான மழைதான் பெய்து உள்ளது. கடலூர், புதுச்சேரி, நாமக்கல்லில் 19 சதவிகித அளவுதான் மழை பெய்துள்ளது. தமிழகத்தில்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேரள மாநிலம் இந்த ஆண்டு வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத மிகக்குறைந்த மழை அளவைப்  பெற்றுள்ளது. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் 34 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழையில்  61 சதவிகிதமும் குறைந்த அளவு மழையைப் பெற்றுள்ளது. கேரளாவில் வழக்கமாக, இந்த காலங்களில் அணைகளில் 90 சதவிகிதம் நீர் இருப்பு இருக்கும். ஆனால் தற்போது 47 சதவிகிதம்தான் உள்ளது. கர்நாடகத்தின் நிலைமையும் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. தொடந்து மூன்றாவது வருடமாக வறட்சியைச் சந்தித்து வருகிறது கர்நாடகம்.
அங்கு உள்ள 175 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை 20 சதவிகிதமும் வடகிழக்குப் பருவமழை 62 சதவிகிதமும் குறைவாகப் பெய்துள்ளது. தென் மாநிலங்களில் மழை அளவுகுறைவால் தமிழகத்தின் அரிசி தேவையில் மூன்றில் ஒருபகுதியைத் தந்து வந்த காவிரிப் பாசனப் பகுதியில் சுமார் 12 லட்சம் விவசாய நிலங்கள் பயிர் செய்யப்படாமல் தரிசாகக் கிடக்கின்றன. 120-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றனர். கேரளாவில் ரப்பர், தென்னை, காப்பி போன்ற நீண்டகாலப் பயிர்கள் கூட கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதேநிலைதான் கர்நாடகத்திலும்.
வறண்ட தமிழக அணைகள்
மேற்கு மாவட்டங்களில் பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகத்தில் உள்ள 15 முக்கிய  அணைகள் வேகமான வறண்டு வருகின்றன. மேட்டூர், பவானி சாகர், அமராவதி, பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர், பெரியார், வைகை, சிறுவாணி உள்ளிட்ட  அணைகளில் 13 சதவிகித  அளவு தண்ணீர்தான் உள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ,நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது மேட்டூர் அணை. சுமார் 127 குடிநீர்த் திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு1,050 மில்லியன் கனஅடி தண்ணீர் இந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள 11 சதவிகித நீர் அளவைக்கொண்டு இன்னும் இரண்டு மாதத்திற்கு மட்டுமே   குடிநீர் வழங்க முடியும். விரைவில் கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், குடிநீர்த் தேவைஅதிகரிக்கும் என்பதால், இரண்டு மாதம் என்பதுகூட குறைய வாய்ப்புள்ளது. அதேபோல கோயம்புத்தூருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலும் இன்னும் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீர்தான் உள்ளது.
தென் மாவட்ட அணைகள் 
பாபநாசம், மணிமுத்தாறு, வைகை ஆகிய மூன்று அணைகளிலும் போதிய அளவுக்கு நீர் இல்லை. வைகையில் 4 சதவிகித தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. இது 10 நாள் குடிநீர்த் தேவைக்குதான் போதுமானதாக இருக்கும். தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் கடுமையான நீர்த் தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டிவரும். முல்லை பெரியாரில்  உள்ள நீரைவைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும். தமிழகத்தின் ஜீவநதி என்று வர்ணிக்கப்படும் தாமிரபரணி நீரைக் கொண்டு உள்ள பாபநாசம் அணையில் இருந்து இன்னும் 40 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை சந்திக்க உள்ளனர்.
வட மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் சாத்தனூர் அணையில் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் உள்ளது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் சுமார் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீரே இருப்பு உள்ளது.
குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி...
தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் தற்போது உள்ள தண்ணீரின் மொத்த அளவின்படி பார்த்தால், சரியாக இன்னும் ஒருமாதத்தில் மழை பெய்து, தமிழகத்தைக் காப்பாற்றாவிட்டால், மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை தமிழகம் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள 46 ஆயிரத்து 438 உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகிக்கபட்டு வரும் தண்ணீரின் அளவில் 83 சதவிகிதம் குறைக்கபட்டு விட்டது. இது, வரும் நாட்களில் மேலும்  குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று பிப்ரவரி மாதம்வரை 528 பேரூராட்சிகளில் நிலத்தடி நீரால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று அரசு கூறி வருகிறது. இதில் 350 பேரூராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைத்து உள்ளதாகவும், 33 சதவிகித பகுதிகளில் நிலத்தடி நீர்  மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் மத்திய அரசின் நிலத்தடி நீர்வாரியம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் வரவிருக்கும் கோடைகாலம் முன்பு போல இருக்காது. தமிழகம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை சந்திக்கப் போகிறது. இதனால் நாம் மட்டும் அல்ல பிற உயிரினங்களும் மோசமாக பாதிப்படைய போகிறோம். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ வழக்கம்போல அண்டை மாநிலங்கள் மீது பழியைப் போட்டுவிட்டு இரண்டு மாநில மக்களையும் எதிரிகளாக மாற்றி பிரச்னையை திசைதிருப்புவார்கள். தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை இயற்கை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உணர்த்த உள்ளது. உணர்ந்தால் அடுத்த ஆண்டு கோடை காலத்திலாவது தப்பிக்கலாம்.  பிரம்மா .... விகடன்

கருத்துகள் இல்லை: