திங்கள், 9 ஜனவரி, 2017

திமுக பிரபலங்கள் நடராஜனுடன் இரகசிய பேச்சுவார்த்தை

(இந்தியா டுடே போட்டோ ஷூட்டில் சசிகலா)
மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களை திமுக பக்கம் இழுக்கலாம் என சில நிர்வாகிகள் ஸ்டாலினிடம் பேசினார்கள். ஆனால் அவரோ, ‘அதெல்லாம் வேண்டாம். இந்த நேரத்தில் அப்படி செய்வது தவறு. அது தேவை இல்லாமல் மக்களிடம் நமக்குதான் கெட்டப் பெயரை உண்டாக்கிவிடும். இது சம்பந்தமாக இனி எதுவும் பேச வேண்டாம்’ என சொல்லிவிட்டார். அதன் பிறகு திமுகவில் யாரும் அது தொடர்பாக யாரிடமும் பேசவில்லை.

இந்த சூழ்நிலையில் சசிகலா பொதுச் செயலாளரக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிருப்தியில் இருந்த அதிமுகவினரை சமாதானப்படுத்தும் முக்கிய வேலையில் இறங்கி இருப்பது சசிகலாவின் கணவர் நடராஜன் தான். யார் சசிகலாவுக்கு எதிராக வாயைத் திறந்தாலும் அவர்களை தேடிப் போய் பார்த்துப் பேசி சமாதானப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறார். அதிமுகவில் அதிருப்தியில் இருந்தவர்களை சமதானப்படுத்தும் ஆபரேஷன் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் நடராஜன் சத்தமில்லாமல் இன்னொரு வேலையிலும் இறங்கி இருக்கிறார்.
ஆரம்பத்தில் அதிமுகவிலிருந்து பிறகு திமுகவுக்குப் போனவர்களை மீண்டும் அதிமுகவுக்கு இழுப்பது. இதற்கான காய்நகர்த்தல்களில் இறங்கி இருக்கிறார் நடராஜன், சில தினங்களுக்கு முன்பு ஈரோடு முத்துசாமியுடன் பேசியிருக்கிறார் நடராஜன்,. ‘நீங்க மறுபடியும் தாய்க் கழகத்துக்கே வரணும். நாம எல்லோரும் சேர்ந்து பணியாற்றலாம். உங்களுக்குத் தேவையானதை செய்து கொடுக்க நாங்க தயாரா இருக்கோம்..’ என்று வலை விரித்திருக்கிறார் நடராஜன். அதற்கு முத்துசாமியோ, ‘செங்கோட்டையன் தொடங்கி இப்போ அங்கே முக்கிய பொறுப்பில் இருக்கும் பலரும் எனக்கு ஜூனியர். இப்போ நான் அங்கே வந்தால் அது சரியாக இருக்காது..’ என்று சொல்லி இருக்கிறார். அதற்கும் நடராஜன் விடவில்லை. ‘அதிமுகவில் பதவிக்கா பஞ்சம். உங்களுக்கு எவ்வளவு முக்கியமான பொறுப்பு கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்கச் சொல்றேன். யோசிச்சு பதில் சொல்லுங்க. எனக்கு நீங்க வருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு...’ என்று சொல்லி இருக்கிறார். முத்துசாமி கடைசி வரை பதில் எதுவும் சொல்லவில்லையாம்!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

(ம.நடராஜன், முத்துசாமி)
அதை காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. “கடந்த வெள்ளியன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் காத்திருந்தாராம் சூட்கேஸ் ஜோதிடர் ஜமால். அவர் வந்த சற்று நேரத்துக்குப் பிறகு உள்ளே வந்திருக்கிறார் நடராஜன். இருவரும் நீண்ட நேரம் பேசி இருக்கிறார்கள். ஜமால் திரும்பத் திரும்ப சொல்லி வருவது, சசிகலா இப்போது முதல்வராக பதவி ஏற்க வேண்டாம் என்பதைத்தான். ,’சின்னம்மா இப்போது பதவி ஏற்றால் ஹிந்திக்காரங்களால சில சிக்கல் வரும். அதுவும் இல்லாமல் ஓ.பி.எஸ். ஜாதகம் ஸ்ட்ராங்கா இருக்கு. ஏற்கெனவே நான் அம்மா இருந்தபோதே ஓ.பி.எஸ். ஜாதகத்தைப் பார்த்து சொல்லி இருக்கேன். அவரை நீங்க பக்கத்துல வெச்சா அவருக்குத்தான் அதிர்ஷ்டம் அதிகம் இருக்கும்னு...
ஓ.பி.எஸ்.க்கு சீட் கொடுக்க வேண்டாம்னுதான் அம்மா ஆரம்பத்துல நினைச்சாங்க. சின்னம்மா எல்லோரும் பேசியதாலதான் ஓபி.எஸ்.க்கு தொகுதி மாற்றி சீட் கொடுத்தாங்க. அவரோட ஜாதகம் உச்சத்துல இருந்ததாலதான் அம்மாவால தாக்குப் பிடிக்க முடியலை. முதல்வர் நாற்காலியில் உட்காரணும்.. தமிழ்நாட்டை ஆளணும்னு ஓ.பி.எஸ். கட்டத்துல இருக்கு. அதுதான் நடக்குது. இதெல்லாம் நான் முன்கூட்டியே சொல்லிட்டுதான் இருந்தேன். இது சின்னம்மாவுக்கும் தெரியும். இப்பவும் அவரு ஜாதகம் உச்சத்துல இருக்கு...’ என்று ஜோதிடர் ஜமால் சொல்லி இருக்கிறார். அதற்கு நடராஜன், ‘அதுக்கு என்ன செய்ய முடியும் இப்படியே இழுத்துட்டு இருந்தா அடுத்தடுத்து எதாவது பிரச்னை வந்துட்டுதான் இருக்கும். அதனால உடனடியாக பதவி ஏற்கிறதுதான் நல்லது. நீங்க அதுக்கு நல்லதா ஒரு நாள் குறிச்சு கொடுங்க...’ என்று சொல்லி இருக்கிறார். ஜமாலும் அதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார். ஆக, பொங்கலுக்கு முன்பு பதவி ஏற்பு விழா இருக்கலாம் என திரும்பவும் உறுதியாக சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். சசிகலா முதல்வராக பதவியேற்ற பிறகு இந்த ஜோதிடர் ஜமால், அதிமுக வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கும், மரியாதைக்கும் உரிய நபராக மாறிவிடுவார்.இப்போதே அவரைப் பார்த்து அமைச்சர்கள் கும்பிட்டபடிதான் போகிறார்கள்” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: