செவ்வாய், 10 ஜனவரி, 2017

நெல்லை சாதி ஆணவ கொலைக்கு எதிராக போராடிய எவிடன்ஸ் அமைப்பு... வின்சென்ட் ராஜ்

தமிழகத்தில் நடைபெற்ற ஆணவக் கொலைகளில் முதன் முறையாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்கிற தலித் இளைஞர், காவேரி என்கிற சாதி இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த காவேரியின் குடும்பத்தினர் விஸ்வநாதனின் அக்கா கல்பனாவை கடந்த 13.05.2016 அன்று கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து எவிடன்ஸ் அமைப்பு சட்ட ரீதியான தலையீட்டினை செய்து வந்தது. வழக்கினை உரிய பிரிவுகளில் பதிவு செய்ய வைத்தல், வாக்குமூலங்கள் பதிவு செய்தல், சாட்சிகளை கண்டுபிடித்து ஒப்படைத்தல், நீதிமன்றத்தில் வழக்கிற்கு உதவி செய்தல் என்று பல நிலைகளிலும் எவிடன்ஸ் அமைப்பின் தலையீடு இருந்து வந்தது. சில சக்திகள் இந்த வழக்கினை நடத்த எங்களுக்கு இடைஞ்சலாக இருந்தனர். அதையெல்லாம் நாங்கள் சட்டை செய்யவில்லை.

இந்நிலையில் 10.01.2017 இன்று திருநெல்வேலி கூடுதல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சங்கர நாராயணன், செல்லம்மாள் ஆகிய இருவருக்கும் மரண் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. கல்பனாவின் கணவர் சற்குணம் சற்று நேரத்திற்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்தார். நீங்கள் இல்லை என்றால் இந்த வழக்கினை ஒன்றும் இல்லாமல் செய்திருப்பார்கள். உங்களை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். வழக்கினை நடத்துவதற்கு நீங்கள் தான் நம்பிக்கை கொடுத்தீர்கள் என்று உருக்கத்துடன் கூறி அழுதார். இதுகுறித்த அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. சம்பவம் நடந்து 6 மாதத்தில் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.முகநூல் பதிவு Vincent Raj

கருத்துகள் இல்லை: