ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சுப.உதயகுமார் :போராட்டத்தில் தோல்வியே கிடையாது. அண்மை வெற்றி, தாமதமான வெற்றி என இரண்டு வெற்றிகள் மட்டுமே..

இடிந்தகரை போராளி சுப.உதயகுமார் அண்ணனின் பதிவு ..
அன்புப் பிள்ளைகளே:
வணக்கம். உங்கள் பார்வைக்கு ஆறு விடயங்கள்!
[1] அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடி மோடி அரசும், மோடி பாசிசத்தின் எடுபிடி பன்னீர்செல்வம் அரசும், உங்களின் அற்புதமான அறவழிப் போராட்டத்தை கடத்திச் சென்று, கூட்டுக்கள்ளன் நீதிமன்றத்தை ஒரு வாரம் பேசாதே என்று கேட்டுக் கொண்டு, ஏதோ அவசரச் சட்டம் போடுவதுபோல பாசாங்கு செய்து, அதை யாருக்கும் காண்பிக்காமல், அவர்களே சல்லிக்கட்டு விழாவை அவசர கதியில் நடத்தி இரண்டு அப்பாவித் தமிழர்களையும் கொன்றுவிட்டு, இப்போது காவல்துறையின் காட்டு தர்பாரை கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்தக் கையாலாகா மோடி, பன்னீர்செல்வம் அரசியலை வன்மையாகக் கண்டிபோம். சென்னையிலும், ஆங்காங்கே சில இடங்களிலும் திட்டமிட்டு நடத்தப்படும் அரச வன்முறையை கண்டிப்போம், கைவிடக் கோருவோம்.

[2] அற்புதமான உங்கள் போராட்டத்துக்கு தமிழினத்தின் நன்றிகளையும், பாராட்டுக்களையும். தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு வார காலம் ஏராளமான துன்பங்களைச் சுமந்து, சிரமங்களை அனுபவித்து நம் இனத்துக்காக உண்மையோடும் உறுதியோடும் போராடினீர்கள். அதைவிட மேலாக, துளியளவும் வன்முறை இன்றி, பெண்களுக்கு பாதுகாப்பும், முக்கியத்துவமும் அளித்து, சாதி-மதங்களை முற்றிலும் புறந்தள்ளி இராணுவங்களுக்கே இல்லாத ஒழுக்கத்துடன் போராடினீர்கள். நீங்கள் நடத்திக் கொண்டிருப்பது போராட்டமல்ல, புரட்சி!
[3] உங்களால் நாங்கள் இன்று ஒருபடி உயர்ந்து நிற்கிறோம். தமிழரை கிள்ளுக்கீரை என்று நினைத்தவன் எல்லாம் இன்று அண்ணாந்து ஆச்சரியத்தோடும், மரியாதையோடும் பார்க்கிறான். தில்லி எசமானர்களும், சென்னை அடிமைகளும் உங்களைக் கண்டுகொள்ளாதது போல நடித்தாலும், அவர்களின் உள்ளாடைகள் எல்லாம் ஒரு வாரமாக ஈரமாகவே இருக்கின்றன. இது ஒரு மாபெரும் வெற்றி!
[4] தமிழகத்தின் சாபக்கேடே சில புரொஃபஷனல் புரட்சியாளர்களும், விடுதலை வீரர்களும்தான். அவர்களாக எதையும் செய்யவும் மாட்டார்கள், அடுத்தவர் நடத்தும் போராட்டங்களைக் கெடுக்காமல் விடவும் மாட்டார்கள். இவர்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது, சொல் புத்தியும் கிடையாது. இவர்கள் உலகிலுள்ள அனைத்தும் அறிந்தவர்கள்! பின்னர் இருக்கவே இருக்கிறார்கள் அரச உளவாளிகள், கைக்கூலிகள், கமிஷன் ஏஜெண்டுகள் போன்றோர். இவர்களெல்லாம் உடன்பிறந்தே கொல்லும் வியாதிகள் போல. கூடவே இருந்து வெண்ணெய் திரளும்போது, தாழியை உடைப்பார்கள். அதுபோல, தொடை நடுங்கிகள் சிலர் ஆசையால் வந்து ஒட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆபத்து வருமென்றுத் தெரிந்ததும் அப்ரூவர் ஆகி தப்பி விடுவார்கள், வாய்க்கு வந்தபடி பொய் சொல்வார்கள். இவர்களை எல்லாம் இனம்கண்டு கொண்டிருப்பீர்கள் இப்போது.
[5] இப்போது எதைப் பற்றியும் கவலைப்படாது நன்றாக ஓய்வெடுங்கள். நிறைய நேரம் தூங்குங்கள், ஏராளமாக தண்ணீர் குடியுங்கள். ஊட்டச்சத்து மிக்க உணவை உண்ணுங்கள். உங்கள் கோப தாபங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புக்களை அப்பா, அம்மாவிடம், உடன்பிறப்புக்களிடம், நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.
.[6] எல்லாவற்றுக்கும் மேலாக, போராட்டம் தோல்வி என்றோ, முடிந்துவிட்டது என்றோ சொல்பவர்களை அருகே வரவிடாமல் துரத்தி விடுங்கள். போராட்டக் களத்தில் தோல்வியே கிடையாது. அண்மை வெற்றி, தாமதமான வெற்றி என இரண்டு வெற்றிகள் மட்டுமே அங்கேக் கிடைக்கின்றன. அதே போல, உங்கள் போராட்டம் இப்போதுதான் துவங்கியிருக்கிறது. இந்தத் தண்டமிழ் நாட்டை தூய்மைப்படுத்தும் பணி, உங்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் நம் நாட்டை வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றும் பணி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இது தொடர்ந்தாக வேண்டும். உங்களில் உண்மை, உறுதி, ஒழுக்கம் கொண்ட ஒவ்வொருவரும் தலைவர்களாக முகிழ்த்தாக வேண்டும். நன்றி!  முகநூல் பதிவு   தோழி மலர்

கருத்துகள் இல்லை: