செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

டி.டி.வி.தினகரன் முதல்வராகிறார் .. சசிகலா அணி எம் எல் ஏ தங்கதுரை கூறுகிறார் ...

விரைவில் டிடிவி தினகரன் தமிழக முதல்வராகப் பதவி ஏற்பார் என இப்போதே கூற ஆரம்பித்துவிட்டார் சசிகலா அணி எம்எல்ஏ தங்கதுரை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சியினரும் மதிக்கும் அளவுக்கு மக்கள் முதல்வராக செயல்பட ஆரம்பித்தார்.
அப்போதே அவரைக் காலி பண்ண முடிவு செய்த சசிகலா குரூப், ஏக களேபரங்களை அரங்கேற்றி மாநிலத்தையே இரு வார காலத்துக்கு தூங்க விடாமல் செய்தது.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சசிகலா முதல்வராகும் ஆபத்தைத் தடுத்தது. ஒருவழியாக பெரும் கலாட்டாக்கள், நாடகங்கள், மல்லுக்கட்டுக்குப் பிறகு சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியுள்ளார்.
அவர் அந்தப் பதவியை முறைப்படி ஏற்று, 5 திட்டங்களில் கையெழுத்துப் போட்டு முழுசாக ஒரு நாள்கூட முடியாத நிலையில், மீண்டும் அடுத்த முதல்வரைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டனர் சசி அணியினர்.

இந்த முறை சசிகலாவை முன்னிறுத்தவே முடியாது. காரணம் இன்னும் நான்காண்டுகள் அவர் சிறைவாசி. அதற்கடுத்த பத்தாண்டுகள் அவரால் தேர்தலில் போட்டியிடவே முடியாது.
எனவே அவரது அரசியல் வாழ்க்கை வெறும் திரைமறைவு பணிகளோடு முடிந்துவிடும் என்பதே உண்மை.
எனவே சசிகலாவின் அக்கா மகன், இப்போதைய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் (ஆக்டிங் பொதுச் செயலாளர்) டிடிவி தினகரனை முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டனர்.
முதல் குரலைக் கொடுத்திருப்பவர் நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை.
கூவத்தூர் கொண்டாட்டம், முதல்வர் பதவி ஏற்பெல்லாம் முடிந்தபிறகு போலீஸ் பாதுகாப்புடன் தொகுதிப் பக்கம் வந்த அவர் கூறுகையில், “எனக்கு எந்த பயமும் இல்லை. மக்கள் யாரும் என்னை எதிர்க்கவும் இல்லை. மக்களின் கருத்தைக் கேட்ட பிறகுதான் நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்தேன். ஜெயலலிதா இருந்த போதே, தினகரன் கட்சிப் பணி செய்தார். தேனி, பெரியகுளம் பகுதிகளில் டிடிவி தினகரனால் கட்சி வளர்ந்தது. தினகரன் முதல்வர் ஆகும் காலம், விரைவில் வரும்,” என்றார்.
ஓ பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்ற சில நாட்களில், “விரைவில் சசிகலா முதல்வராவார்”, என்று முதல் கல்வீசியவர் இதே நிலக்கோட்டை எம்எல்ஏதான் என்பது குறிப்பிடத்தக்கது.
டிடிவி தினகரன் காஃபிபோசா சட்டத்தால் தண்டிக்கட்ட குற்றவாளி. மேலும் பல வழக்குகள் அவர் மீதும் நிலுவையில் உள்ளன.
/tamil.oneindia.co

கருத்துகள் இல்லை: