வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

தலாக்கிற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் போர்க்கொடி !


முத்தலாக் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து, அடுத்த மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி, திருமண பந்தத்திலிருந்து ஆண்கள் எளிதாக விவாகரத்து பெறுகின்றனர். இதனால், முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இன்றைய நவீன உலகில், சமூக வலைதளங்களில்கூட மூன்று முறை தலாக் என்றுகூறி தங்களுடைய மனைவியை விட்டுச் செல்கின்றனர்.
எனவே, முத்தலாக் விவாகரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ரா பானு என்ற பெண், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், தங்களது தனிப்பட்ட சட்டதிட்டத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறிவந்தது.
இந்நிலையில், முத்தலாக் முறைக்கு மேலும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இது தொடர்பான வழக்குகள் நேற்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் ரமணா, சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டும். எனவே, அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைப்பது குறித்து மார்ச் மாதம் 30ஆம் தேதி முடிவு செய்யப்படும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 15 பக்கங்களுக்கு மிகாமல் தங்களது விளக்கத்தை அடுத்த விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் பெண்களுக்கு எதிரான இந்தப் பிரச்னையை விசாரிப்பது முக்கியமானது. எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட விசாரிக்கத் தயார் என்று நீதிபதிகள் ரமணா, சந்திரசூட் கூறியுள்ளனர்.
இதற்குமுன், கடந்த ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முத்தலாக் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தலாக் வழக்கத்தால் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எந்தவொரு தனிநபர் சட்டமும் அரசியல் சாசனத்தைவிட உயர்ந்ததல்ல என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: