வெள்ளி, 24 மார்ச், 2017

பள்ளி மேம்பாட்டு நிதியை தமிழகம் திரும்பக்கொடுத்தது.

minnambalam : தமிழக அரசு கடுமையான கடன் சுமையில் தத்தளிக்கும் இந்தச் சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த மார்ச் 16-ம் தேதியன்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் 2017-18 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘ராஷ்ட்ரிய சிக்க்ஷா அபியான்’திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய ரூ.1,266 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு தாமதிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். தமிழகத்துக்கு இந்தத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அதே சூழலில் தமிழக மேல்நிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.400 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு திரும்பி ஒப்படைத்துள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த ரூ.400 கோடியைத் தமிழக அரசு ஏன் திரும்ப ஒப்படைத்தது? இதற்கான காரணம் என்ன?

நாடு முழுவதிலும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய சிக்க்ஷா அபியான்’ திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின்மூலம் மேல்நிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் ஒவ்வோர் ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 2033 அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கத் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து, இந்தத் திட்டத்தின் ’திட்ட அனுமதி வாரியம்’கடந்த 2010-11-ம் ஆண்டில் 879 பள்ளிகளுக்கும், 2011-12-ம் ஆண்டில் 1,153 பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கியது. நிதி ஒதுக்கப்பட்ட இந்த பள்ளிகளில் கூடுதலாக, வகுப்பறைகள், நூலகம், கணினி மையம் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்தத் திட்ட அனுமதி வாரியம் உத்தரவிட்டிருந்தது.

நிதி ஒதுக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதியன்று மத்திய பள்ளி கல்வித் துறை செயலாளர் விருந்தா சருப் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், நிதி ஒதுக்கப்பட்ட 2,033 பள்ளிகளில், 474 கழிப்பறைகள், 213 குடிநீர் வசதிகள் மற்றும் 236 அறிவியல் கூடங்களை தவிர மற்ற எந்தவிதமான கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்குக்கு மத்திய கல்வித்துறை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. இதற்கு அப்போதைய தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்த சபிதா, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதியன்று மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஒன்றுகூடி 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக அதிகாரிகள், மத்திய அரசு ஒதுக்கிய நிதி மூலம் தங்களால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இயலாது என்று கூறி ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடியைத் தமிழக அரசு திரும்ப ஒப்படைத்தது.
இதுகுறித்து தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய அரசு ஒரு சதுர அடி கட்டுமானப் பணிகளுக்கு ரூ.500 ஒதுக்கியது. ஆனால், மாநில பொதுப்பணித் துறையோ இதே ஒரு சதுர அடி பணிகளுக்கு ரூ.1,200 கட்டணம் நிர்ணயிக்கிறது. இதன் காரணமாக ஒப்புதல் பெற்ற பின்னும் மூன்று ஆண்டுகளாகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற துறைகளின் பணிகளுக்குப் பயன்படுத்த இயலாது. எனவே தான் நாங்கள் நிதியைத் திரும்ப ஒப்படைத்துவிட்டோம்" என்றார்.
தமிழக அரசு பழைய கல்வி நிலையங்களைச் சீரமைப்பதைவிட புதிய கல்வி நிலையங்களைக் கட்டுவதிலேயே தங்களின் கவனத்தை செலுத்தி வருவதாகத் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய பள்ளிகளை கட்டுவதற்காகத் தமிழக அரசு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய கல்வி நிலையங்களைக் கட்டும் பணியில் மத்திய அரசின் பங்களிப்பு உள்ளது. புதிய கல்வி நிலையங்களைக் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கினாலும் அதற்கான பணிகள் மிகவும் தாமதமாகவே நடைபெற்று வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், புதிதாக அனுமதி வழங்கப்பட்ட 1,096 பள்ளிகளில் தமிழக அரசு இதுவரை 200 பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகளை மட்டுமே நிறைவு செய்துள்ளதாகவும், மேலும், 875 பள்ளிக் கட்டுமான பணிகள் தற்போது நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு தமிழக அரசின் தாமதத்துக்கு மத்திய கல்வித் துறை தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தது.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு தனது கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதில் தீவிரம் காட்டி தற்போதைய நிலையில் 80 சதவிகிதப் பணிகளை தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழக கல்வித் துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் கூறுகையில், “மத்திய அரசு அடுத்த நிதியாண்டில் தமிழகத்துக்குக் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய உறுதியளித்துள்ளது" என்றார்.
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: ரிச்சர்ட்சன்

கருத்துகள் இல்லை: