வியாழன், 23 மார்ச், 2017

தொப்பி' சின்னத்துக்கு எப்படி ஓட்டு கேட்க முடியும் ? பதறும் சசிகலா அணியினர்

பன்னீர்செல்வம்சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் 'தொப்பி' சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தச் சின்னத்தை மக்கள் மத்தியில் எப்படி பிரபலப்படுத்த முடியும் என்ற கவலையில் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
சசிகலா அணிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே நடந்த மோதல், அ.தி.மு.க.வின் 'இரட்டை இலை' சின்னத்தை முடக்க வைத்துவிட்டது. கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை இரண்டு அணிகளும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் சசிகலா அணியில் களமிறங்கும் டி.டி.வி.தினகரன், பன்னீர்செல்வம் அணியில் போட்டியிடும் மதுசூதனன் ஆகிய இருவரும் சுயேச்சை வேட்பாளராகவே இந்த இடைத்தேர்தலில் கருதப்படுவர்.

 
சசிகலா அணிக்கு 'தொப்பி' சின்னத்தையும் பன்னீர்செல்வம் அணிக்கு 'மின்கம்பம்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 'மின்கம்பம்' சின்னத்தின் படம் இரட்டை இலையின் உருவத்தைப் போல காணப்படுவதாக பன்னீர்செல்வம் அணியினர் கருதுகின்றனர். ஆனால் 'தொப்பி' சின்னத்தை வேறுவழியில்லாமல் சசிகலா அணியினர் பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டுள்ளதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் களநிலவரம் பரபரப்பாகி உள்ளது. இதை தங்களுக்குச் சாதகமாக தி.மு.க.வும், பா.ஜ.க.வும், தே.மு.தி.க.வும் கருதுகின்றன.
சசிகலா அணி தரப்பில் நம்மிடம் பேசிய மாவட்ட நிர்வாகி ஒருவர், "எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'தொப்பி' சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது சிரமம். ஆர்.கே.நகர்த் தொகுதியில் 'இரட்டை இலை' சின்னம் மக்களிடையே பிரபலமானதாகும். மேலும், இந்தத் தொகுதியில் 'இரட்டை இலை' சின்னத்துக்கு தனி வாக்குவங்கி உள்ளது. அந்த வாக்குகள் கண்டிப்பாக இந்தத் தேர்தலில் சிதறும். ஏற்கெனவே அ.தி.மு.க. உள்கட்சிப் பூசல் காரணமாக வாக்குகள் சிதறும் நிலையில் 'தொப்பி' சின்னம் எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்தச் சின்னத்தைப் பிரபலப்படுத்த, தொப்பி அணிந்துகொண்டு மக்களிடம் வாக்குகளைக் கேட்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
டி.டி.வி.தினகரன் என்ற பெயரைக் கேட்டதும் தொகுதி மக்கள் மத்தியில் ஓர் அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியை சமாளிக்க முடியாமல் தொகுதியில் உள்ள கட்சியினர் திணறுகின்றனர். வாக்குசேகரிக்கும் இடங்களில் எங்களுக்கு எதிரணியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உள்ளனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை மக்களிடம் விளக்கமாகச் சொல்லமுடியவில்லை. டி.டி.வி.தினகரனுக்கு தொகுதி மக்களிடையே போதிய அறிமுகமும் இல்லை. இதுபோன்ற சிரமங்களைக் கடந்து வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இருப்பினும் அம்மாவுக்காக (ஜெயலலிதா) மக்கள் எங்களுக்கு ஓட்டுப்போடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றனர்.vikatan.com/

கருத்துகள் இல்லை: