வியாழன், 27 ஏப்ரல், 2017

ஷாலின் மரிய லாரன்ஸ் : மனசாட்சியுள்ள ,நேர்மையான 'மீன்காரியாக ' இருந்துவிட்டுப் போகிறேன் .

Image may contain: 1 person
(நன்றி குமுதம், issue date :April 13th 2017)

நான் ஆங்கிலோ இந்தியன் கான்வென்டில் படிக்கும் காலத்தில் பெண்கள் மற்ற பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்க வேண்டுமென்றால் "Fisher woman " (மீன்காரி ) என்று அழைப்பார்கள். சில வருடங்கள் முன்பு வரை கூட ஒரு விதமான கொண்டை அணியும்போது எனது சில கார்பொரேட் நண்பர்கள் "மீன்காரி கொண்ட " என்று அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கம் அப்பொழுது கூட நான் அதைப் பற்றி பெரிதாய் சிந்தித்து இல்லை .
ஆனால் சமூகநீதிக்காக பாடுபட ஆரம்பித்ததிலிருந்து விளிம்பு நிலை மனிதர்களின் ,ஒடுக்கப்பட்டவர்களின் தோற்றத்தை வைத்து இழிவுபடுத்துவது மிகப்பெரிய அட்டூழியங்களில் ஒன்று என்று அறிந்துகொண்டேன் .அதிலிருந்து தோற்ற ரீதியிலான சாதிய /வர்க்க அடக்குமுறைகளை இன்று வரை எதிர்த்துப் போராடி வருகிறேன் .

எனக்கு மீன் அதிகம் பிடிக்கும் என்பதால் மெரினாவில் கலங்கரை விளக்கம் அருகிலிருந்து துவங்கும் மீன் மார்க்கெட்டில் (நொச்சிக்குப்பம்) மாதத்தில் இரண்டுமுறை நானே சென்று மீன் வாங்குவது வழக்கம் ,இதன் காரணமாக அங்கே மீன் விற்கும் பெண்களிடம் நல்ல நட்பு உள்ளது எனக்கு . அடித்துச் சொல்கிறேன் ,அவர்களைப்போல் வாஞ்சையுடன் யாராலும் பழக முடியாது .உறவினர்கள் தெருமுனையில் வருவது தெரிந்தால் பிளாட்டின் கதவை பூட்டிக்கொள்ளும் இந்த சமூகத்தில் இன்னும் கூட முன் பின் அறியாதவர்கள்மேல் எதையும் எதிர்பாராமல் பாசமழை பொழிய இவர்களால் மட்டுமே சாத்தியம் . காரில் வந்தவர்களாக இருந்தாலும் சரி ,சைக்கிளில் வந்தவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு அனைவரும் சமமே .
எத்தனையோ முறை அவர்கள் செய்து கொடுத்த கடம்பான் தொக்கு ,தோசை ,மீன் குழம்பு எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட்டு இருக்கிறேன் .
அவர்கள் கட்டி இருக்கும் புடவையின் மேலிருந்து வரும் வாடை நாச மூளைக்காரர்களுக்கு வேண்டுமானால் நாற்றமாக இருக்கலாம் ,ஆனால் எனக்கோ அது பேரன்பின் வாசம் .
எனக்கும் அவர்களுக்கு மிகவும் பிடித்த எம்ஜியார் என்கின்ற நடிகரின் அழகை அவர்கள் மீன் வெட்டும் அநேக நேரங்களில் சிலாகித்துப் பேசி இருக்கிறோம் .படகோட்டியில் எம்ஜியார் அணிந்திருந்த அடர்பச்சை ,சிகப்பு சட்டைகள்,கையில் போட்டிருந்த காப்பு என்று அவரை தலை முதல் கால்வரை வர்ணித்து மகிழ்ந்திருக்கிறோம் .'கடல் மேல் பிறக்கவைத்தான் பாடல்' டிவியில் ஒலிக்கும்போதெல்லாம் எப்படி அவர்களுக்கு ஒவ்வொருமுறையும் கண்ணீரை வரவழைக்கிறது என்று அவர்கள் விவரித்தபொழுது நானும் அழுதிருக்கிறேன் .
அப்படி ஒரு பந்தம் என் மீனவ சொந்தங்களுடன் எனக்கு .
அங்கே ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் சுடப்படும்போதெல்லாம் குண்டு இவர்கள் நெஞ்சிலும் பாய்ந்தது என்று அவர்களுடன் பழகியவர்கள் நன்கு அறிவார்கள் .
அவர்கள் உலகத்தில் யார் பிறந்தாலும் அவர்கள் வீட்டிலேயே குழந்தை பிறந்ததாய் மகிழ்ச்சி கொள்வார்கள் ,யார் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் ஊரே சோகத்தில் இணைகிறது .
அவர்களுள் பொருளாதார ரீதியாக ஒரு சிலர் முன்னேறியும் கூட இன்னும் அவர்களுக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்பது அவர்களின் நிரந்தர வேதனையாக இருக்கிறது . அவர்களுள் யாரவது MBA படித்தாலும்கூட சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் 'மீன்காரர்கள்' என்று ஒதுக்கியே வைக்கவேபடுகிறார்கள் .
மீன்பிடிப்புத் தொழிலின் மூலம் இந்தியாவின் வாழ்வாதாரம் ,வேலைவாய்ப்பு ,உணவுப் பாதுகாப்பு என்கின்ற விஷயங்களை சீராக வைத்திருப்பவர்கள் இவர்கள்தான் என்றால் மிகையாகாது . இந்தியாவின் GDP யில் ஒரு சதவிகிதத்திற்கு மேலும் ,இந்திய விவசாய GDP யில் 16 சதவிகிதத்திற்கு மேலும் இவர்களின் பங்கு இருக்கிறது....இருந்தாலும் ...மற்ற துறைகளுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் மாண்பும் ,மரியாதையும் இவர்களிடம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகக் கூட கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம் .
பொதுவாக மீனவர்கள் அதிகம் நகை அணிவார்கள் ஆனால் அத்தனை நகையும் கூட அவர்களை இதுவரை ஒரு நல்ல நட்சத்திர ஹோட்டலிலோ அல்லது ஒரு சரவண பவனிலோ உட்காரவைத்ததில்லை .அமெரிக்காவில் சவுத் கரோலினா மாகாணத்தில் மீன்பிடித் தொழிலில் இருக்கும் ஒரு மனிதர் தன ஊரில் உள்ள ஒரு நல்ல பாரில் அமேசான் கம்பெனியின் CEO ஓடு சரி சமமாக உட்கார்ந்து பீர் அருந்த முடியும் ..இங்கே மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள 'illusions ' போன்ற பார்களில் இப்படி ஒரு காட்சியை நாம் காண முடியுமா ?
இந்த நாட்டில் பணத்திற்குத்தான் மதிப்பு இருக்கிறது என்று யாரவது கூறிக் கொண்டிருந்தால் தயவு செய்து உங்கள் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளுங்கள் ,பத்தும் செய்யும் பணம் கூட இங்கே மனித மாண்பை மீட்பதில் தோல்வி அடைந்திருக்கிறது ,அவர்கள் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலிகள் அவர்களை நோக்கி வரும் முகச் சுளிப்புகளைத்தடுக்கும் வல்லமை இல்லாதவைகளாகவே இருக்கின்றன .
மீன்விற்பவர்களின் குரல் மீன் சந்தைகளுக்குளேயே அடங்கி விடுகிறது ,சமதர்மத்திற்கான அவர்களின் கூக்குரலை நம் காதுகள் எனோ ஏற்க மறுக்கின்றன .
'Dignity of labor ' என்கின்ற விஷயம் இந்திய /தமிழ்ச் சமூகத்தின் அகராதியில் இன்னும் இடம் பெறவில்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கின்றது .சமூகத்தில் கடைநிலை வேலைகளில் தங்களை வருத்திக்கொள்ளும் இதுபோன்ற மனிதர்களுக்கு மரியாதை எல்லாம் கடலில் தேடினாலும் கிடைக்காதவை .அதற்குமேல் ஒருபடி போய் நாம் ஒருவரை அவமானப் படுத்துவதற்கு இவர்களின் பெயரையும் ,தோற்றத்தையும் உபயோகிப்பது மீனவர்களை நாம் சராசரி மனிதர்களாய் கூட மதிப்பதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் .
இந்த நிலை இப்படி இருக்க கடந்த வார தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்கள் இன்னும் வரதட்சணை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கொஞ்சம் சீற்றத்துடன் என் வேதனையை வெளிப்படுத்தியபோது அதை கேலிப்பொருளாக்கும் நோக்கத்துடன் 'Meme Creators ' என்றழைக்கப்படும் வலைதள நவீன சித்திரக் கலைஞர்கள் ,வசைச் சித்திரக் கலைஞர்களாக மாறி என்னை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு என் படத்தை மீன் விற்பவர்போல் சித்தரித்து இருப்பது .
இதில் எனக்குத் துளிக் கூட அவமானமா , இழிவோ இல்லை .ஏனென்றால் நான் பலவருடங்களாக நேசித்து அன்பு பாராட்டி வரும் மனிதர்களின் தொழிலை நான் செய்வது போல் காட்டி இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது . இந்தப் படத்தை அடுத்த முறை நான் மீன் வாங்க கடற்கரைக்குச் செல்லும்போது ,செல்வி அக்காவிற்கும் ,லூசியா அக்காவிற்கும் காட்டிப் பெருமைகொள்வேன் . மாறாக இந்தப் படத்தை வடிவமைத்திருக்கும் மனிதர்களைக் கண்டால் மனம் கடும் வேதனை கொள்கிறது.மீன்காரி என்பது இகழ்ச்சியா ? மீன் பிடிப்பவர் /விற்பவர் என்றால் அவமானத்திற்குரிய தோற்றமா ? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமயத்தில் இவர்களுக்குப் பெரும் ஆதரவைக் கொடுத்து ,உணவு உடை பாதுகாப்பை அளித்து அந்த இளைஞர்களுக்காக அடி உதை பட்டு வீடுகளை இழந்தவர்களை அந்த இளைஞர்கள் இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாக கருதிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது .
நன்றி மறந்த ,சமூதாய நீதி அறியாத 'மீம் காரர்களாக' இருப்பதை விட நாம் ருசியாக ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றெண்ணி நமக்காக இந்தத் தொழிலை செய்துவரும் மனசாட்சியுள்ள ,நேர்மையான 'மீன்காரியாக ' இருந்துவிட்டுப் போகிறேன் .
ஷாலின் மரிய லாரன்ஸ்

கருத்துகள் இல்லை: