சனி, 29 ஏப்ரல், 2017

அதிமுக தலித் எம் எல் ஏக்களின் உரிமைக்குரல் பின்னணியில் சபாநாயகர் தனபால்?

அதிமுகவுக்குள் அன்றாடம் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் மறுநாள் காலையில் சசிகலாவுக்கு அப்டேட் செய்வது விவேக். ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதைத் தவறாமல் கேட்டு அடிக்கடி அழ ஆரம்பித்து விடுகிறாராம் சசிகலா. அவருக்கு இப்போதைய ஆறுதல் அவரது சகோதரர் திவாகரன்தான். அவரிடம் சொல்லச் சொல்லி தினமும் பல விஷயங்களை விவேக் மூலமாகச் சொல்லி அனுப்புகிறாராம் சசிகலா. அதேபோல தினகரன் சொல்லும் தகவல்களையும் சசிகலாவுக்கு சொல்லும் போஸ்ட் மேனாக விவேக் செயல்படுகிறார். சசிகலா சிறைக்குள் இருந்தாலும் அவருக்கு மூன்று வேலை உணவுகளும் வெளியில் இருந்துதான் போகிறது. கார்டனில் ரெகுலராக சமையல் செய்து வந்தவர் தற்போது பெங்களூரு அருகே உள்ள ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
அந்த வீட்டில் இருந்துதான் சசிகலாவுக்கு சாப்பாடுத் தயாராகிறது. தினமும் மூன்று வேளையும் இங்கிருந்துதான் சசிகலாவுக்கும், இளவரசிக்கும் சாப்பாடு போகிறது. ஒருவேளைக்கு 10 பேர் சாப்பிடும் அளவுக்கான சாப்பாடு ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சசிகலா, இளவரசி சாப்பிட்டது போகத் தினமும், அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டைச் சாப்பிடும் இன்னொரு நபர் பாமீலா.

பரப்பன அக்ரஹாரா பெண்கள் சிறைக்கு சசிகலா வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு வந்த கைதியாம் இவர். 24 வயதான பாமீலாவுக்கு தமிழ் நன்றாகத் தெரியுமாம். சசிகலாவும், இளவரசியும் உள்ளே வந்ததில் இருந்து அவர்களுடன் அதிகம் பேசி வரும் கைதி இவர்தான். திருட்டு வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற கைதியாம் இந்த பாமீலா. இப்போது சசிகலாவுக்குத் தேவையான உதவிகள் அத்தனையும் இவர்தான் செய்து வருகிறாராம்.

சசிகலாவுக்கு வரும் உணவுகளை அவரோடு அமர்ந்து பாமீலாவும் சாப்பிடுகிறாராம். அவர்கள் மூவரும் சாப்பிட்டது போக மீதி இருப்பதை மற்ற கைதிகளுக்கு கொடுத்து விடுகிறார்களாம். ‘யாராவது சாப்பிடட்டும். சாப்பாட்டை வீணடிக்கக் கூடாது’ என்று சொல்லி இருக்கிறார் சசிகலா.
வெயிலின் தாக்கம் பரப்பன அக்ரஹாராவிலும் அதிகமாகவே இருக்கிறதாம். ஆனாலும், சசிகலாவும், இளவரசியும் தங்கி இருக்கும் அறைக்கு ஏர்கூலர் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். பரப்பன அக்ரஹாரா ஜெயில் முழுக்கவே கடந்த சில வருடங்களாக நவீன வசதிகளுடன் இருக்கிறதாம். அதற்கு காரணம் ரெட்டி பிரதர்ஸ் என்கிறார்கள். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்த சமயத்தில், ஒரு தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஒருவருக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சிறைக்கும் தேவையான நவீன வசதிகளை அப்போது செய்து கொடுத்திருக்கிறார்கள். அதை மறைமுகமாகச் செய்தவர் ஜனார்த்தன ரெட்டி என்கிறார்கள்.

அப்போது அவர் சிறையில் இருந்தபோது, செய்து கொடுத்த வசதிகளை இப்போது சசிகலா அனுபவிக்கிறார். அதைத்தாண்டி ஜெயிலர் ஒருவரது போன் நம்பரில் இருந்து மட்டும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு போன் வருகிறதாம். அதை சிலர் கண்காணித்து, அந்த ஜெயிலர் போன் நம்பரின் கால் ஹிஸ்டிரியை தேடும் பணியில் இறங்கி இருக்கிறார்கள். அப்படி அந்த போன் கால் ஹிஸ்டிரி வெளியானால், ஜெயிலர் நம்பரில் இருந்து எதற்காகச் சென்னைக்கு இவ்வளவு கால்கள் வந்தது?
சென்னையில் உள்ள அரசியல் பிரபலங்களுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்? அந்த நம்பரில் இருந்து பேசியது ஜெயிலர்தானா? என்ற பல சந்தேகங்களுக்குக் கர்நாடக சிறைத்துறை பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், ஜெயிலுக்குள் போனபோது இருந்ததை விட தற்போது சசிகலாவுக்கு உடல் எடை அதிகமாகி விட்டதாம். இதனால், ஜெயிலுக்குள் இப்போது வாக்கிங் போகவும் தொடங்கி விட்டாராம் சசிகலா!” என்று முடிந்த அந்த ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டு ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றைத் தட்டியது வாட்ஸ் அப். “ பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணைப்பு என்பது உறுதியானால், தலித் எம்.எல்.ஏக்கள் தனியாக போர்க் கொடி தூக்கத் தயாராகி விட்டார்கள். அவர்களை இயக்குவது சபாநாயகர் தனபால் என்கிறார்கள்.
தலித்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடம் தர வேண்டும்.. கட்சிக்குள்ளும் முக்கிய பொறுப்புகள் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க.. ‘இதுவரைக்கும் கவுண்டர்கள் யாரும் முதல்வராக இருந்தது இல்லை. இப்போதுதான் முதல் முறையாக எடப்பாடி முதல்வராகி இருக்கிறார். பன்னீர் கேட்கிறார். கட்சியை இணைக்கிறோம் என்பதற்காக முதல்வர் பதவியை நாம் விட்டுத்தரத் தேவை இல்லை. அப்படி எடப்பாடி வேண்டாம் என்றால், செங்கோட்டையன் முதல்வராக இருக்கட்டும். எந்தக் காரணத்துக்காகவும் வேற சாதிக்காரன் ஒருத்தனுக்கு மறுபடியும் நாம விட்டுத்தரக் கூடாது’ என்று கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.-க்கள் சிலர் ஒன்று கூடி பேசி இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பில் சில அமைச்சர்களும் இருந்திருக்கிறார்கள். அதிமுக இணைப்பில் அடுத்த சிக்கலை உருவாக்கி இருப்பது சாதி. இதில் இருந்து எப்படி மீண்டு வரப் போகிறதோ தெரியவில்லை!” ...மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: