சனி, 27 மே, 2017

உத்தர பிரதேசம் .. பார்ப்பன முதல்வரை சந்திக்க முன்பு தலித் மக்களை சோப்பு கொடுத்து குளிக்க பணித்த அதிகாரிகள்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வரைச் சந்திக்க இருந்த தலித் சமூக மக்களை
அதிகாரிகள் சோப்பு, ஷாம்பு கொடுத்து சுத்தமாகச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தைப் பல்வேறு துறைகளில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பேன் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்திக்க இருந்த முஷார் என்ற தலித் மக்களைச் சோப்பு, ஷாம்பு மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொடுத்து அதிகாரிகள் சுத்தமாகுமாறு கூறியுள்ளனர். பூனை, எலிகளைப் பிடிப்பதை பாரம்பர்யத் தொழிலாக கொண்ட முஷார் மக்கள் தீண்டத்தகாத சமூகமாகக் கருதப்படுகிறார்கள்.

சோப்பு, ஷாம்பு கொடுத்தது மட்டுமின்றி தலித்துகள் வசிக்கும் பகுதிக்கு யோகி ஆதித்யநாத் வருவதையடுத்து தெருவிளக்குகள் போடப்பட்டன, மண் தரைகளுக்குப் பதிலாக புதிய தார் சாலைகள் மாற்றப்பட்டன மற்றும் மக்களுக்குப் புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரேம் சாகர் வீட்டுக்கு யோகி ஆதித்யநாத் செல்லவிருக்கிறார் என்பதையடுத்து தியாகியின் வீட்டுக்குப் புதிய நாற்காலிகள், ஏசி மற்றும் புதிய தரை விரிப்புகள் ஆகியவை அதிகாரிகளால் அமைக்கப்பட்டன. முதல்வர் வந்து சென்ற பின் அனைத்துப் பொருள்களையும் அதிகாரிகளே எடுத்துச் சென்றுவிட்டனர்.
மேலும், உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மற்றும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தலித் மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது, “நாங்கள் குற்றச் சம்பவங்களே நடக்காது என்று உறுதியளிக்கவில்லை” என்று அமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: