புதன், 24 மே, 2017

கலைஞரின் வைர விழாவுக்கு திருமாவளவனுக்கு அழைப்பு இல்லை!

போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் திமுக, கருணாநிதியின் வைரவிழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று மே 24ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம். விவசாயிகள் விசயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனப்போக்கையே காட்டி வருகிறது. இத்தகைய போக்கை மத்திய அரசு கைவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் பணியாற்றிய வகையில் கருணாநிதிக்கு அவரது பிறந்த நாள் அன்று வைரவிழா கொண்டாடப்படுகிறது. அது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதோடு, பாராட்டுக்குரியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தேசிய அளவிலான தலைவர்கள் வருகிறார்கள். தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திமுக, இதுவரை எங்களுக்கு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை என்று மனவருத்தத்துடன் கூறினார். இந்த செய்தி உண்மையாக இருந்தால் திமுக மிகப்பெரும் தவறை செய்கிறது.

நாங்கள் போராடுவதற்காகவே இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற பிடிவாத எண்ணத்தோடு அதிமுக உள்ளது. தேர்தலைத் தள்ளிப்போடுவதே சட்டவிரோதம்தான். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பாக இல்லை என்பது ஆளுங்கட்சியினருக்கே தெரியும். டாஸ்மாக் கடைகளை, அரசு தரப்பில் கொண்டுவரப்படும் முயற்சிக்குத் தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பார்க்கிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை, பெண் என்றும் பாராமல் காவல்துறையை ஏவிவிட்டுத் தாக்குவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதிமுக அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. அவர்களுக்குத் தங்கள் ஆட்சியைப் பாதுகாப்பதற்கே போராடி வருகிறார்கள் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: