செவ்வாய், 20 ஜூன், 2017

BBC :சட்டப்பேரவையிலிருந்து அதிமுக கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு.. மாட்டிறைச்சி விவகாரம் ..

தமிழக சட்டப்பேரவையில் இன்று செவ்வாய்கிழமை எழுப்பப்பட்ட மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக அதிமுகவின் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். ம்) வெளிநடப்பு செய்த அதிமுக கூட்டணி உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவிக்கையில், மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சட்டப்பேரவையிலிருந்து தாங்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர். முன்னதாக, மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வந்திருந்த தனி நபர் மசோதாவிற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தார்கள். கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதைத் தடை செய்யும் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மு.க.ஸ்டாலின், இன்று தனி நபர் மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார்.

கேரளா மற்றும் புதுச்சேரியில் நிறைவேற்றப்பட்டது போன்று, தமிழகத்திலும் சட்டப்பேரவையில், மத்திய அரசின் விதிகளுக்கு எதிரான சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரினார். திமுகவினர் வெளிநடப்பு அப்போது மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு முடிவு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

மேலும் மாடுகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதிகளுக்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பு வலுத்து வருவதையடுத்து, அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளதை அப்போது எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். அத்தோடு, இதே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தீர்ப்புகளின் அடிப்படையிலும், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதித்தும் தான் தமிழக அரசு இப்பிரச்னையில் முடிவுகளை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலை ஏற்க முடியாது என கூறி அமளியில் ஈடுபட்ட திமுகவினர், வெளிநடப்பு செய்தார்கள். 'மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அண்டையில் உள்ள கேரளா மற்றும் புதுவையில் உள்ள சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டது போன்றே, மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார்.

 இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூடிய முதல் நாளன்றே தன் கோரிக்கையை சபாநாயகரிடம் தெரிவித்ததாகவும், மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்ற கூட தற்போதைய தமிழக அரசு தயங்குவதையே இந்த விவகாரம் உணர்த்துவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அதே சமயம் முன்பு மத்திய அரசு நெருக்கடி நிலையை கொண்டு வந்த போது கூட, அப்போது ஆட்சியில் இருந்த திமுக அதை துணிச்சலோடு எதிர்கொண்டது என்பதை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், ஆனால் தற்போதுள்ள தமிழக அரசு மத்தியில் உள்ள பாஜக ஆட்சி அதிகாரத்தின் காலடியில் விழுந்து கிடக்கின்றது என கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.

கருத்துகள் இல்லை: