வெள்ளி, 23 ஜூன், 2017

கீழடி : தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கீழடி :  தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மின்னம்பலம் : கீழடி அகழாய்வு தலைவர் அமர்நாத் பணியிடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக தொல்லியல் துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று ஜூன் 23ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால தமிழர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், அணிகலன்கள், பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் என்று சுமார் 5000க்கு மேல் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல், இங்கு நெசவு தொழில் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்றும் பெரிய அளவில் சாயப்பட்டறை இருந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கீழடி நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்பிடக் கூடிய அளவில் உள்ளது வரலாற்றாய்வாளர்கள் விவாதிக்கின்றனர். இதன் மூலம் சங்க இலக்கியங்களில் காணப்படும் பழங்காலத் தமிழர் நாகரிகம் இன்று தொல்லியல் சான்றுகளுடன் வெளிப்பட்டுள்ளது என்று தமிழ் ஆர்வலர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

இந்த கீழடி அகழாய்வை சராசரியான ஒரு தொல்லியல் துறை அதிகாரியாக மட்டுமில்லாமல் ஆர்வத்துடன் ஆய்வு மேற்கொண்ட கீழடி அகழாய்வுத் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், வரலாற்றாய்வாளர்கள் பாராட்டினர்.
இதைத்தொடர்ந்து, கீழடியில் 2 கட்ட ஆய்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், 3ஆம் கட்ட ஆய்வுக்கு இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டும் நிதி ஒதுக்கவும் அமர்நாத் ராமகிருஷ்ணா கோரியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூன்றாம் கட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்கி அனுமதி அளிப்பதில் தாமதப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், கீழடி அகழாய்வு தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அஸ்ஸாமுக்கு பணியிடமாற்றம் செய்தது. அவருக்கு பதிலாக, ஸ்ரீராமன் என்பவரை கீழடி ஆய்வுக்கு தலைவராக நியமித்தது.
இதனால், இந்துத்துவ வரலாற்றை முன்னெடுக்கும் மத்தியில் உள்ள பாஜக அரசு கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தமிழர் நாகரிகம் என்பதால் தமிழர் வரலாற்றை மறைக்க முயற்சி செய்கிறது என்று தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டினர். இதனிடையே, அமர்நாத் ராமகிருஷ்ணா மத்திய தீர்ப்பாயத்தில், தன்னை பணியிடமாற்றம் செய்துள்ளதை ரத்து செய்து கீழடியில் ஆய்வைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டார். மத்திய தீர்ப்பாயமும் அமர்நாத் ராமகிருஷ்ணாவை கீழடியில் ஆய்வைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனாலும், அமர்நாத் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கீழடி அகழாய்வு இடத்தைப் பார்வையிட வந்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கியதோடு 5 கட்டங்களாக ஆய்வு நடைபெறும் என்று அறிவித்தார். அதோடு, தற்போது கீழடி ஆய்வுக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். அமர்நாத் ராமகிருஷ்ணாவை பணியிடம் மாற்றம் செய்திருப்பது தொல்லியல் துறையில் வழக்கமான ஒன்றுதான் என்று கூறினார். ஆனாலும், கீழடி அகழாய்வை அமர்நாத் ராமகிருஷ்ணாவைக் கொண்டே நடத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், கீழடியில் தொல்லியல் துறையின் 3ஆம் கட்ட ஆய்வுகள் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஜூன்13ஆம் தேதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர், அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் கீழடி அகழாய்வில் பணியமர்த்த கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அடங்கிய அமர்வு, கீழடியில் தொல்லியல் அதிகாரியை இடமாற்றம் செய்தது ஏன் என்று கேள்வியெழுப்பியதோடு, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை சிவகங்கைப் பகுதியிலேயே வைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறி, வழக்கை ஜூன் 23ஆம் தேதிக்கு வைத்தனர்.
அதன்படி, இன்று ஜூன் 23ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் தமிழக கலாச்சாரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் குறைகூறக் கூடாது. அதே நேரத்தில், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆய்வுப் பணிகள் முடிந்தபின் அருங்காட்சியகத்தில் பொருட்கள் வைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது என்று கூறினர். மேலும், இந்த வழக்கில், கீழடி அகழாய்வு தலைவர் அமர்நாத் மாற்றப்பட்டது தொடர்பாக தொல்லியல்துறை செயலர், கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூலை மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: