சனி, 24 ஜூன், 2017

அணுசக்தி விநியோக குழுவில் இந்தியாவை அனுமதிக்க சீனா மறுப்பு!

இந்தியாவுக்கு அனுமதியில்லை: சீனா! அணுசக்தி  விநியோகக் குழுவில் இந்தியாவை உறுப்பினராக அனுமதிக்க முடியாது’ என்று சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அணுசக்தி பயன்பாடு குறித்து சர்வதேச அளவில் 48 நாடுகளை உறுப்பினராகக்கொண்டுள்ள அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராக இந்தியா தொடர்ந்து ஆர்வம்காட்டி வருகிறது. அதற்காக, தனக்கு ஆதரவு தெரிவிக்கும்படி அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளிடம் இந்தியா ஆதரவு கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், வானியல் மற்றும் அணுசக்தி துறை போன்றவைகளில் வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கிற காரணத்தால், இந்தியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் சீன அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
மேலும், இந்திய நாட்டின் தரைவழி, கடல்வழி மார்க்கத்தின் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளைச் சீனா செய்துவருவதுடன், தரம் குறைந்த, விலை மலிவான பொருள்களை இந்தியச் சந்தைக்குள் அனுப்பி பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 48 நாட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் ஓர் உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தால்கூட புதிய உறுப்பினரைச் சேர்க்க முடியாது. இதைப் பயன்படுத்தி இந்தியாவின் முயற்சியைச் சீனா தடுத்து வருகிறது. மேலும், அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை என்.எஸ்.ஜி-யில் இணைக்கக் கூடாது என கூறி இந்தியாவுக்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என சீனா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷாங், நேற்று ஜூன் 23ஆம் தேதி பெய்ஜிங்கில் கூறுகையில், “அணுசக்தி விநியோகக் குழு உறுப்பினர்கள் தொடர்பாக, சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாதவரை, சீன அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யாது” என்று கூறியுள்ளார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை: