வியாழன், 27 ஜூலை, 2017

நிதிஷ்குமாரின் 18 எம் எல் ஏக்கள் போர்க்கொடி .. பதவி ஏற்ற நிதிஷ் + பாஜக கூட்டணி அரசு சிக்கலில்!


முதல்வராக பதவியேற்றார் நிதீஷ்பீகார் மாநிலத்தில் நடைபெற்று வந்த கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக முதல்வர் பதவியை நேற்று ஜூலை 26ஆம் தேதி ராஜினாமா செய்த நிதீஷ் குமார், பாஜக ஆதரவுடன் இன்று ஜூலை 27ஆம் தேதி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் இருந்தார். இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் பதவி விலகும்படி நிதீஷ் குமார் காலஅவகாசம் கொடுத்தார். ஆனால், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வந்த நிலையில், முதல்வர் நிதீஷ் குமார் திடீரென நேற்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கவர்னரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வரவேற்பு தெரிவித்ததை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பாட்னா நகரில் நடைபெற்ற பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பாஜக சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பப் பட்டது.
அதைத் தொடர்ந்து, பாஜக-வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக, பீகார் கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி, 132 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு பட்டியலையும் நிதிஷ் குமார் அளித்தார். அதையடுத்து, இன்று ஜூலை 27ஆம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் கேசரி நாத் திரிபாதி, நிதீஷ் குமாருக்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிதீஷ் குமார் முதல்வராகப் பொறுப்பேற்பது இது ஆறாவது முறையாகும். அதைத்தொடர்ந்து துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க நிதீஷ் குமாருக்கு 2 நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியின்போது லாலு பிரசாத் கட்சியினரால் பிரச்னை எதுவும் வரக்கூடாது என்பதற்காக கவர்னர் மாளிகையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கவர்னரை சந்திக்க ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ்நேரம் கேட்டதையடுத்து, தேஜஸ்வி யாதவ் உள்பட 6 எம்.எல்.ஏ.-க்களை மட்டும் சந்திப்பதற்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். சட்டசபையில் பெரிய கட்சியான தங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் தேஜஸ்வி வலியுறுத்தினார். அனால், கவர்னர் அதற்குத் தகுந்த பதில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: