வியாழன், 27 ஜூலை, 2017

குளங்களை தூர் வார யார் யாருக்கு எவ்வளவு கமிஷன்? பட்டியல் லீக் ... ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Amudhavalli Oneindia Tamil
சேலம்: எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, திமுக ஆறு குளங்களை தூர் வாரும் பணிகளை ஆரம்பித்த பிறகு, அரசு சார்பில் அதிமுக கட்சிக்காரர்களுக்கு மட்டும் பணிகளை ஒதுக்கி, பணிகளைத் தொடங்கி இருக்கிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், "ஊழல் செய்ய, கமிஷன் வாங்க, லஞ்சம் வாங்க அதையெல்லாம் செய்கிறார்கள். அதற்காக ரூ. 300 கோடி அறிவிக்கப்பட்டது.

நான் சட்டமன்றத்தில் பேசியபோது கூட, "300 கோடி ரூபாய் அறிவித்து உள்ளீர்களே, எங்கெங்கு பணிகள் நடந்திருக்கின்றன?
 எத்தனைப் பணிகளை முடித்தீர்கள்?

அவையெல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன?
110 விதியில் அறிவித்து விட்டுச் சென்று விடுகிறீர்கள். அதையெல்லாம் வெள்ளை அறிக்கையாக வையுங்கள். உறுதிமொழிக் குழு என்று ஒன்று இருக்கிறதே, அதிலாவது சொல்லுங்கள், என்று கேட்டேன். ஆனால், இதுவரை எதுவும் சொல்லவில்லை. நியாயமாக, ஆளும்கட்சிதான் இந்தப் பணிகளை செய்ய வேண்டும். அவர்கள் செய்யவில்லை.

எதிர்க்கட்சியாக உள்ள திமுக செய்வதை பாராட்டக் கூட வேண்டாம், ஆனால், உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும். இப்போது நாங்கள் செய்துள்ள பணிகளை எல்லாம், அவர்கள் செய்ததாக கணக்குக் காட்டி கமிஷன் எடுத்துக் கொள்வதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன. அதுபற்றிய ஆதாரங்களுடன் நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம்.இதற்கெல்லாம் விரைவில், 4 ஆண்டுகளோ 5 ஆண்டுகளோ காத்திருக்க வேண்டியதில்லை, இன்னும் நாலைந்து மாதங்களில், எந்தெந்த அமைச்சர்கள் கொள்ளையடித்தார்கள், யார் யார் கமிஷன் வாங்கியிருக்கிறார்கள், என அத்தனை விவரங்களையும் கண்டறிந்து வெளியில் கொண்டு வரப்போகிறோம்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், கொடநாடு விவகாரத்தை மறைப்பதற்காக வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அதற்கு ஸ்டாலின் இருக்கலாம். நீங்கள் நினைப்பது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்று பதில் கூறினார்.

கருத்துகள் இல்லை: