செவ்வாய், 25 ஜூலை, 2017

தமிழக பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறையேனும் வந்தே மாதரம் பாட வேண்டும்: உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாரம் ஒருமுறையேனும் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தே மாதரம் பாடல் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பாக கே.வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேவேளையில் வந்தே மாதரம் பாட விரும்பாதவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில், வந்தே மாதரம் பாடல் முதன்முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு, கே.வீரமணி என்பவர் வங்க மொழி என பதில் அளித்திருந்தார். ஆனால், அந்த பதில் தவறு என்றும் வந்தே மாதரம் பாடல் முதன்முதலாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது என்றும் கீ ஆன்ஸரில் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக வீரமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வந்தே மாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்பதைத் தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, "வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருதப் பாடல். அது முதன்முதலில் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டது'' என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், ''வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. பாடப் புத்தகத்தில் இருப்பதைத்தான் படித்து பதிலெழுத முடியும்.
வந்தே மாதரம் பாடல், தேச பக்தியையும், நாட்டுப் பற்றையும் இளைஞர் மத்தியில் பதிய வைக்கும் ஊற்று. விடுதலைக்கான உந்துசக்தி. இன்றைய தலைமுறைக்கு அதுபற்றிய போதிய தெளிவில்லை.
அதனால் தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாரம் ஒருமுறையேனும் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும். அதேவேளையில் வந்தே மாதரம் பாட விரும்பாதவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
அதேபோல அரசு, தனியார் நிறுவனங்களில் யாரையும் கட்டாயப்படுத்தாமல் மாதம் ஒருமுறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும். tamilthehindu

கருத்துகள் இல்லை: