திங்கள், 24 ஜூலை, 2017

நீதிபதி ஜோயிதா மண்டல் .. முதல் திருநங்கை நீதிபதி

நாட்டிலேயே முதல் முறையாகத் திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதியான முதல் திருநங்கை!மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருநங்கை ஜோயிதா மண்டல் இஸ்லாம்பூர் மாவட்ட லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்)நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். லோக்  நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. சட்டபணிகள் ஆணைக் குழு பிரிவு 19-தின் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞராக இருப்பார்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஜோயிதா மண்டல் (29). கடந்த 2009ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து சிலிகுரிக்கு ரயிலில் பயணம் செய்த இவர் இடம் தெரியாமல் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரில் இறங்கி விட்டார். பின்னர் அங்கேயே அவர் நிரந்தரமாகத் தங்கினார். அங்குத் திருநங்கைகளை ஒன்று திரட்டி சங்கம் ஒன்றை உருவாக்கினார். ‘தினாஜ்பூர் புதிய விளக்கு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டார். திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகள் கிடைக்க வழிசெய்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பழைய வீட்டை அமைப்பதும், நோயாளியின் நலன்புரி குழுக்களை உருவாக்கும் திட்டங்களில் ஜோயிதா இணைந்தார். அவரது செயல் திறன் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்ததால் நீதிபதி பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 8 ஆம் தேதி நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து நீதிபதி ஜோயிதா மண்டல், ’நம்பகத்தன்மையுடன் உள்ள சமூக தொழிலாளர்களை லோக் அதாலத் நீதிபதிகளாக நியமிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. நான் ஒரு திருநங்கை அல்ல. நான் ஒரு சமூக தொழிலாளி என்பதாலேயே நியமிக்கப்பட்டேன். நான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அமர்வுக்கும் ரூ .1,500 மாத ஊதியம் வழங்கப்படும். ஆனால் பணத்தை விடச் சங்கம், பொறுப்பு மற்றும் கௌரவம் தான் முக்கியமானது. இந்தப் பதவிக்கு வந்திருப்பதன் மூலம் திருநங்கைகள் சமூகத்துக்கு பல்வேறு நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறேன். திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு இன்னும் பல பணிகளை அரசு செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். திருநங்கைகள் படிப்பதற்கு அதிகம் வாய்ப்பு இல்லை என்பதால், அரசுத் துறைகளில் உடல் ரீதியாகச் செய்யப்படும் குரூப்-டி பணிகளை வழங்க வேண்டும். அதேபோல் தனியார் துறைகளிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தான் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ரயிலில் பிச்சை எடுக்கிறார்கள். 150 ரூபாய், 200 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக் கிடைத்தால் கூட அவர்கள் பாலியல் தொழிலைக் கைவிட்டு கவுரவமாக வாழ்ந்து காட்டுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: