சனி, 23 செப்டம்பர், 2017

காசினி விண்கலம் -- சனி கிரகத்தில் சாம்பலாகிச் சாதித்த விண்கலம்!

மின்னம்பலம் :சைபர் சிம்மன்
அறிவியல்: சனி கிரகத்தில் சாம்பலாகிச் சாதித்த விண்கலம்!விண்வெளியில் செலுத்தப்பட்ட விண்கலங்களில் சில திடீரெனத் தகவல் தொடர்பு அறிந்து காணாமல் போயிருக்கின்றன. இன்னும் சில விண்கலங்கள் எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியிருக்கின்றன. பல விண்கலங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விண்வெளிக் குப்பையாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், சனி கிரகத்தை வலம்வந்துகொண்டிருந்த காசினி விண்கலம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன்னைத்தானே அழித்துக்கொண்டு கம்பீரமாக விடைபெற்றிருக்கிறது. மனிதகுலத்தின் விசுவாசமான ஊழியனைப்போல, கடைசி வரை தனக்கு இடப்பட்ட கட்டளைகளை எல்லாம் கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு, காசினி விண்கலம் சனி கிரகத்தில் ஐக்கியமாகி இருக்கிறது.
காசினி விண்கலம் விடைபெற்றது விஞ்ஞானிகளை சோகமாக்கிய அதே நேரத்தில் கொண்டாடவும் வைத்திருக்கிறது. காசினி இனி இருக்காது என்பதும் அதனிடமிருந்து ஆய்வுக் குறிப்புகளும் தரவுகளும் வந்துசேராது என்பது சோகம். அந்த விண்கலப் பயணத்தைப் பொறுத்தவரை எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருப்பது ஒரு சாதனை. காசினி விண்கலம் நிகழ்த்திய எத்தனையோ சாதனைகளில் இறுதி சாதனையாக இது அமைகிறது.

100 கோடி மைல் தொலைவிலிருந்து இடப்பட்ட கட்டளையை ஏற்று காசினி விண்கலம் தனது 20 ஆண்டுகாலப் பயணத்தைச் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்து நிறைவு செய்திருக்கிறது. சனி கிரகத்தை 13 ஆண்டுகளாக வலம்வந்து கொண்டிருந்தபோது எப்படி பூமியில் இருந்து அனுப்பப்பட்ட கட்டளைகளை எல்லாம் செயல்படுத்தி வந்ததோ அதேபோல, ’உன் சேவை போதும் விடைபெறு’ எனும் கடைசிக் கட்டளையையும் தவறாமல் நிறைவேற்றியிருக்கிறது.
காசினி விண்கலத்தைப் பூமியில் இருந்து கட்டுப்படுத்திவந்த அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், இதன் பயணம் முடிவுக்கு வர இருப்பதைக் கடந்த வாரத்தில் அறிவித்திருந்தனர். இதையடுத்து ராக்கெட் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன்போல், காசினி விண்கலம் சனி கிரகத்தின் வெளி மண்டலத்துக்குள் விழுந்து நொறுங்குவதற்கான இறுதிப் பயணத்தை உலகம் பரபரப்புடன் பின்தொடர்ந்தது. விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி காசினி, சனி கிரகத்தில் கரைந்த நிகழ்வு நேரடியாகவும் ஒளிபரப்பானது.
விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு மகத்தான பயணத்தின் முடிவாக இது அமைந்ததுள்ளது. ஆனால், முடிவு என்று சொல்ல முடியாது. காசினி சூரிய மண்டலம் தொடர்பான மனிதகுலத்தின் புரிதலில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கி வைத்து விடை பெற்றிருக்கிறது. அந்த விண்கலம் இதுவரை அனுப்பி வைத்த 4,53,000 புகைப்படங்களையும், 635 கிகாபைட் தகவல்களையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆய்வு செய்து கொண்டிருக்கலாம். ஏற்கெனவே காசினி அனுப்பிய தகவல்களை வைத்துக்கொண்டு 4,000க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சனி கிரகத்தை வலம்வரும் 62 துணைக்கோள்கள் பற்றிய புரிதல் (இவற்றில் ஆறு காசினி கண்டுபிடித்தவை), அதைச் சுற்றியுள்ள மர்ம வளையங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள், பிரதான நிலவான டைட்டனின் மேல் பகுதியில் உள்ள மீத்தேன் நதிகள் மற்றும் ஏரிகள் குறித்த தகவல்கள் எனக் காசினி அனுப்பிய தகவல்கள் விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. சனி கிரகம் தொடர்பான நம் புரிதல் அதிகரிப்பதற்கு இவை உதவும்.
ஏன் அழிக்க வேண்டும்?

எல்லாம் சரி, இத்தனை சிறப்பு வாய்ந்த விண்கலத்தை ஏன் அழிக்க வேண்டும் என கேட்கலாம். விண்வெளியில் காசினியின் காலம் முடிந்துவிட்டது என்பது இதற்கான பதில். தான் இயங்குவதற்குத் தேவையான எரிபொருளைத் தயாரித்துக்கொள்ளும் ஆற்றல் தீர்ந்து போகும் நிலை வந்துவிட்டதால் தொடர்ந்து செயல்பட முடியாத கட்டத்தைக் காசினி நெருங்கிவிட்டது. இதனால், அது கட்டுப்பாட்டை இழந்து சுற்றிக்கொண்டிருப்பதைவிட அல்லது அதைவிட முக்கியமாக சனியின் துணைக்கோள் மீது மோதி, பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுத்துவதற்குப் பதில், விண்கலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் ஏழு ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவு இது. காசினியை இதையும் நிறைவேற்றிவிட்டு மறைந்திருக்கிறது.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் காசினி அற்புதமாக செயல்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
காசினியின் பிறப்பும் பலனும்
1997ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி காசினி விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் நாசா அமைப்பு, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு மற்றும் இத்தாலி விண்வெளி அமைப்புடன் இணைந்து காசினியை அனுப்பி வைத்தது. காசினி, தன்னுடன் இந்தப் பயணத்தில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஹைஜன்ஸ் எனும் விண்கலத்தையும் சுமந்து சென்றது. ஏழு ஆண்டுகள் பயணம் செய்த பிறகு 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் காசினி விண்கலம் சனி கிரகம் அருகே சென்றது. மனிதனால் அனுப்பி வைக்கப்பட்ட முதல் வஸ்து எனும் பெருமையோடு, சூரிய மண்டத்தின் ஆறாவது கிரகமான சனி கிரகத்தை காசினி வலம்வரத் தொடங்கியது. அடுத்த சில மாதங்கள் கழித்து, ஹைஜென்ஸ் விண்கலத்தை பாராசூட் மூலம் சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டன் மீது இறக்கிவிட்டது.
சனி கிரகத்தில் நிலைமை எப்படி இருக்கும் என தெரியாது என்பதால், டைட்டன் அருகே சில நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பது உட்பட பல்வேறு சாத்தியங்களுக்கு ஏற்ப இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஹைஜென்ஸ் விண்கலம் லாகவமாகத் தரையிறங்கி, டைட்டன் நிலவின் மேற்பரப்பை பல கோணங்களில் படம் எடுத்து அனுப்பியது. இந்தப் படங்கள் மற்றும் காசினி விண்கலம், டைட்டனைக் கடந்தபோது சேகரித்து அனுப்பிய விவரங்கள் மூலம், பல புதிய விஷயங்கள் தெரியவந்துள்ளன. டைட்டன் நிலவு மீத்தேன் நதிகளாலும், ஏரிகளாலும் ஆகியிருப்பதையும் இந்தத் தகவல்கள் உணர்த்தியுள்ளன. பூமியைப் போலவே உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அங்கு இருக்கலாம் எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
டைட்டன் நிலவின்மீது ஒரு விண்கலத்தை இறக்கி, அங்கிருந்து அது புகைப்படம் எடுத்து அனுப்பியதை நினைத்தாலே மயிர்க்கூச்செறிகிறது என இத்திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய நாசா விஞ்ஞானி இயர்ல் மைஸ் தெரிவித்திருக்கிறார்.
காசினியின் சாதனைகள்
சூரியனைச் சுற்றி வர 29 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் சனி கிரகத்தை காசினி விண்கலம், 294 முறை சுற்றி வந்திருக்கிறது. பெரும்பாலும் டைட்டன் நிலவின் ஈர்ப்பு விசையை சாதகமாகப் பயன்படுத்தித் தனது பாதையைத் தீர்மானித்திருக்கிறது. 13 ஆண்டு காலப் பயணத்தில் 25 மில்லியன் ஆணைகளை நிறைவேற்றியிருக்கிறது. சனியின் நிலவுகளைக் கடந்தபடி 162 முறை சென்றிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் வண்டி வண்டியாகத் தகவல்களைச் சேகரித்து அனுப்பியிருக்கிறது.
கடைசியாகக் கூட, விநாடிக்கு 1,83,000 மைல் வேகத்தில் தகவல்களை அனுப்பிவைத்தது.
சனியின் துணைக் கோள்களில் ஒன்றான என்சிலாடசில், பனிக்கட்டி மேற்பரப்புக்குக் கீழே தண்ணீர் பெருங்கடல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள், காசினியின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள தண்ணீர் மற்றும் கார்பன் பொருள்கள் உயிரினம் வாழ்வதற்கான சூழலைக் கொண்டிருக்கலாம் என நினைக்க வைத்திருக்கின்றன. இதன் காரணமாகவே விஞ்ஞானிகள், காசினி விண்கலம் அங்கு மோதி சூழலை மாசுபடுத்துவதை விரும்பவில்லை.
20 ஆண்டுகளுக்குப் பிறகும் காசினியின் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் நன்றாகவே இருந்துள்ளன. மேலும் மின்சக்தி உற்பத்திக்கான புளோடினியம் ஆலையும் செயல்பாட்டிலேயே இருந்தது. ஆனால், அதன் எரிபொருள் தீர்ந்து போகும் சூழலில், சனி கிரகத்தின் வளி மண்டலத்தில் அதைச் செலுத்தத் தீர்மானிக்கப்பட்டது.
சனி கிரகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அதைச் சுற்றியுள்ள வளையங்கள் பற்றியும் காசினி பலவிதத் தகவல்களை அளித்துள்ளது. இந்த வளையங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாகக் கருதப்பட்டதற்கு மாறாக லட்சக்கணக்கில் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வளையங்கள் வெறும் புழுதி மண்டங்களாக இல்லாமல், தங்களுக்கு எனத் தனி உலகம் கொண்டிருப்பதையும் காசினி தந்த தகவல்கள் புரியவைத்துள்ளன.
வளையங்களில் உள்ள வஸ்து பனிப்பந்துகளாக திரள்வதையும், சின்னஞ்சிறிய நிலவுகளால் அகற்றப்படுவதையும்கூடச் சுட்டிக்காட்டி வியக்கவைத்துள்ளது. ஒரு சில இடங்களில் இந்த வளையப்பகுதி சில கி.மீ. அளவே இருப்பதும், நிலவுகள் அருகில் வரும்போது ராட்சத அலைகளை அவை வெளிப்படுத்துவதும் தெரியவந்துள்ளது.
2010ஆம் ஆண்டில் சனி கிரகத்தில் பிரமாண்ட இடி மின்னல் மற்றும் சுறாவளிகளைக் காசினி கண்டறிந்தது. பல மாத ஆய்வின் முடிவில் இந்தச் சூறாவளி மொத்தக் கிரகத்தையும் விழுங்கக்கூடிய அளவுக்கு இருந்துள்ளது. பூமியில் இதுபோல நிகழ வாய்ப்பில்லை. சனி கிரகச் சூழலில் சூறாவளி 3,00,000 கி.மீ பரவியதோடு, ஓராண்டு நீடித்திருந்தது.
இப்படி வியப்புக்குரிய எண்ணற்ற கண்டுபிடிப்புகளை காசினி நிகழ்த்தியுள்ளது. இவற்றை எல்லாம் ஆய்வுசெய்து முடிக்கவே பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு வகையில் பார்த்தால் காசினி விண்கலம் மகத்தான கண்டுபிடிப்பிற்கான தொடக்கத்தை உருவாக்கிச் சென்றுள்ளது. அந்த வகையில் பார்த்தால் காசினி விடைபெறவில்லை, விண்வெளியில் விதையாகி இருக்கிறது.
இணைப்புகள்:
1. https://www.nytimes.com/2017/09/14/science/cassini-grand-finale-saturn.html
2. https://www.cbsnews.com/news/cassini-grand-finale-on-saturn-nasa-marathon-of-scientific-discovery/
3. https://www.cnbc.com/2017/09/15/cassini-spacecraft-flies-into-saturn-in-fiery-end-to-20-year-voyage.html
4. http://www.sci-tech-today.com/story.xhtml?story_id=1010028CR7IO
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சைபர் சிம்மன் அறிவியல், தொழில்நுட்பம் குறித்துத் தமிழில் தொடர்ந்து எழுதிவருபவர். இவரை தொடர்புகொள்ள: enarasimhan@gmail.com; அவருடைய வலைதளம்: www.cybersimman.com)

கருத்துகள் இல்லை: