ஞாயிறு, 12 நவம்பர், 2017

விவேக் வீட்டில் சோதனை உச்சகட்டத்தை நெருங்கிவிட்டது !

மின்னம்பலம் : நான்கு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறையின் வேட்டை கிட்டத்தட்ட முடிந்து சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள விவேக்கின் வீட்டில் இன்று( நவம்பர் 12) மாலை க்ளைமேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சசிகலா தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என்று 190 இடங்களில் சோதனை இடப்பட்டாலும் அவற்றில் முக்கியமான மையங்கள் சென்னையும், மன்னையும்தான். மன்னையில் திவாகரன் என்றால்... சென்னையில் விவேக்தான் இந்த ரெய்டின் ஹிட்லிஸ்டில் முதல் நபராக இருக்கிறார்.
சுமார் 80 மணி நேர சோதனையில் விவேக் வீட்டின் ஒவ்வொரு கதவிடுக்குகள், பீரோக்கள், தரை விரிப்புகள், தலையணைகள் என்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து கத்தை கத்தையாக ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள்.
முதல் மூன்று நாட்கள் வருமான வரித்துறையின் சார்பில் ரெய்டு மேற்கொள்ளும் வழக்கமான அதிகாரிகள்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் நான்காவது நாளான இன்றுதான் வருமான வரித்துறையின் துணை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என்று ஆறு அதிகாரிகள் இன்று பிற்பகல் விவேக் வீட்டுக்குப் படையெடுக்க விவகாரம் விஸ்வரூபம் ஆனது.
நான்கு நாட்களாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் சொத்து மதிப்பு சுமார் 1,500 கோடி ரூபாய் இருக்கும் என்று உத்தேசமாக கணக்கிட்டிருக்கும் அதிகாரிகள் இதுபற்றி சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் டெல்லிக்கு தெரிவிக்க... அதன் பிறகே உயர் அதிகாரிகள் ஆறு பேர் விவேக் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இந்த ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் முதலீட்டுக்கு நிதி ஆதாரம் எங்கே என்பதுதான் இப்போது அதிகாரிகள் விவேக்கிடம் நடத்தி வரும் விசாரணையின் ஒற்றை மையப்புள்ளி. இந்த ஆவணங்கள் தன்னுடையவைதான் என்று விவேக்கிடம் கையொப்பம் பெறும் பணி இன்று மாலை தொடங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
இதனால் ரெய்டு க்ளைமேக்ஸை நெருங்குவதால் விவேக் வீட்டு வாசலில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் காத்திருக்கிறார்கள். அனேகமாக இன்று இரவு வருமான வரித்துறை வெளியிடும் பத்திரிகைக் குறிப்போ அல்லது பேட்டியோதான் விவேக் வீட்டு ரெய்டு ரகசியத்தை முழுதாக உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’என்னைப் பற்றி என்னிடம் கேளுங்கள். என் உறவினர்கள் வீட்டில் என்ன இருக்கிறது என்பதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது’ என்று நேற்று பத்திரிகையாளர்களிடம் தினகரன் சொல்லியிருந்தது குறிப்பிடத் தக்கது.
சமீபத்தில் பரோலில் வெளியே வந்த சசிகலா... தினகரனுக்கு நிகரான முக்கியத்துவத்தை விவேக்குக்கும் கொடுத்துச் சென்ற நிலையில், இப்போது டெல்லி விவேக்குக்கு அதைவிட கூடுதல் ’முக்கியத்துவம்’ கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை: