புதன், 15 நவம்பர், 2017

கீழடி ,,, தமிழ்நாட்டில் தமிழர் கண்முன்னே தமிழர் வரலாறு மண் அள்ளி மூடப்படுகிறது ...

அ. குமரேசன்
தீக்கதிர் : வரலாற்றுத் தடயங்களில் காலமும் மண் போட்டு மூடுகிறது, அதிகாரப் பீடமும் மண் போட்டு மூடுகிறது. காலம் மண்ணைப் போட்டு மூடுவதன் நோக்கம், அந்தத் தடயங்களைப் பாதுகாத்து வைத்திருந்து எதிர்காலத்தில் எவர் வந்து தேடினாலும் திறந்து காட்டுவது. அதிகாரப் பீடம் மண்ணைப் போடுவதன் நோக்கம், எவர் வந்து தேடினாலும் தடயங்கள் கிடைக்காமல் வரலாற்றையே புதைப்பது.
கீழடியைப் பற்றித்தான் சொல்ல வருகிறேன் என்பது வாசகர்கள் புரிந்துகொள்ளக்கூடியதே. கீழடி என்ற ஊரின் பெயருக்குப் பொருத்தமாக, தமிழர் நாகரிகத் தொன்மைக்கான சான்றுகளைக் கீழே அடியில் போட்டு அமுக்குவதற்கான வேலைகள் வேகமாக நடக்கின்றன. உண்மை வரலாற்றுக்கான சிறு சான்று கிடைத்தால்கூட, அதை மிக விரிவான, தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு உட்படுத்தி முழு உண்மைகளையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டிய மத்திய தொல்லியல் துறை மூலமாகவே அந்தப் புதையலைப் புதைக்கும் வேலைகள் நடத்தப்படுவதுதான் வேதனை.

ஏன் நிறுத்தினார்கள்?
சிலர் சொல்கிறார்கள், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் தரப்படுகிறது என்று. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதை அணுகக் கூடாது என்று அறிவுரை கூறுகிறார்கள். திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மத்திய தொல்லியல் துறை தனது கீழடி ஆய்வை நிறுத்திக்கொண்டது சரிதானா என்று கேட்க மறுக்கிறார்கள். தமிழக அரசின் தொல்லியல் துறை அந்த ஆய்வைத் தொடர “பெருந்தன்மையோடு” அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு வாதத்துக்காக ஊராட்சிகளின் கீழும் தொல்லியல் துறைகள் இருந்து, கீழடி ஊராட்சியின் தொல்லியல் துறை அகழாய்வைத் தொடர அனுமதிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அப்போதும் இந்தக் கேள்வி எழும். மாநிலத் துறையோ உள்ளூர்த் துறையோ ஆய்வைத் தொடரலாம் என்றால், தடயங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என மத்தியத் துறை ஒப்புக்கொள்வதாகத்தானே பொருள்? அப்படியானால் மத்தியத் துறையே ஏன் அதை இறுதி வரையில் தொடரக் கூடாது? உண்மையிலேயே கீழடியில் தோண்டியெடுத்து நிறுவுவதற்கான தொன்மைத் தடயங்கள் இல்லை, அதனால்தான் மத்தியத் துறை தனது ஆய்வை நிறுத்திக்கொண்டது என்றும் ஒரு வாதத்துக்காக வைத்துக்கொள்வோம். அப்படியானால், இல்லாத ஒரு தடயத்தைத் தேடும் சுமையை மாநிலத் துறையின் மீது சுமத்துவது என்ன நியாயம்?
இத்தகைய கேள்விகளை முன்வைக்கிற அளவுக்கு கீழடியின் முக்கியத்துவம்தான் என்ன?
என்னதான் இருக்கிறது கீழடியில்?
வரலாற்று ஆய்வாளர்களால் இதுவரையில் இந்திய மண்ணின் நாகரிகத் தொன்மைக்கு அத்தாட்சியாகக் காட்டப்பட்டு வந்திருப்பது சிந்து சமவெளி மட்டுமே. உலகத்தையே வியக்க வைத்த அந்த ஆய்வு முடிவுகள் மறுக்க முடியாதவை. பொதுக்காலத்துக்கு முன் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகம் பற்றிப் படித்தபோது, அப்படிப்பட்ட அனைத்து வசதிகளும் மிக்கதொரு நகர வாழ்க்கையைத்தான் அக்காலத்தில், அத்தகைய வளர்ச்சிகள் ஏதுமற்ற பிற பகுதிகளோடு ஒப்பிட்டு, சொர்க்க வாழ்க்கை பற்றிய கற்பனைகளை வளர்த்திருப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுண்டு. இயற்கைச் சீற்றத்தால், நதியின் பாதை மாறியதால் ஏற்பட்ட வறட்சியால், கொடூரமான படையெடுப்பு வன்முறைகளால் அந்த நாகரிகம் அழிந்தபோது, எஞ்சிய மக்கள் வேறு பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பார்கள். அவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள், துணைக்கண்டத்தின் தென் பகுதிக்கு வந்தபோது, தாங்கள் வாழ்வதற்கேற்ற பகுதியாக, இங்கே நகர வாழ்க்கை செழிப்பாக வளர்ந்திருந்த ஒரு இடத்தைக் கண்டுபிடித்து மன நிறைவோடு குடியேறியிருப்பார்கள் என்ற கருத்தாக்கம் கொள்வது பகுத்தறிவுக்கு உகந்ததாகவே இருக்கிறது.
அந்தக் கருத்தாக்கத்தை வலுப்படுத்துகிற ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது கீழடி மண். அகலமான சாலைகள், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட உயரமான சுவர்கள், அந்தச் சுவர்களில் யானைத் தந்தத்தால் இழைக்கப்பட்ட கலை வேலைப்பாடுகள், கால்வாய் ஏற்பாடுகளுடன் இணைந்த தெருக்கள், அடிப்படை வசதிகளுடன் கூடிய அறைக் கட்டுமானங்களுடன் வீடுகள், புழக்கத்தில் இருந்த சட்டி பானைகள், புளகாங்கிதத்துக்காக இருந்த கலைப் பொருள்கள், வாழ்க்கைக்கு உதவிய தொழில் கருவிகள் என்று இன்று கிடைத்துள்ள தடயங்கள் அனைத்தும் அந்த நகரத்தின் வயதையும் சிறப்பையும் பறைசாற்றுகின்றன. சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சுமார் 1,000 ஆண்டுகள் இளைய, இன்றிலிருந்து சுமார் 2,400 ஆண்டுகள் மூத்த நாகரிகத்தைக் கொண்டிருந்ததுதான் கீழடி. தற்போதைய மதுரை நகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டத்தின் விளிம்பில் இருக்கிறது கீழடி.
இன்றைய பெயர் கீழடி என்றிருப்பதால் அப்படியே தொடர்ந்து குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஆனால் இதுதான் அன்றைய மதுரையாக இருக்கக்கூடும் என சங்க இலக்கியச் சான்றுகள் ஊகிக்க வைக்கின்றன. சங்க இலக்கியக் காலம் இன்றிலிருந்து ஏறக்குறைய 2,300 ஆண்டுகள் முந்தையது. சிலப்பதிகாரத்தில், அது படைக்கப்பட்டதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வைக் காப்பியமாக்கிய இளங்கோ அடிகள், கண்ணகியையும் கோவலனையும் அழைத்துச் செல்லும் கவுந்தியடிகள், பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் வந்தபோது, கிழக்குத் திசையைக் காட்டி அங்கிருக்கும் மதுரைக்குப் போகலாம் என வழிகாட்டுகிறார். புவியியல் அடிப்படையில் அது இன்றைய மதுரையாக இருக்காது, அப்போதிருந்த மதுரையாகத்தான் இருக்கும் என்ற கருத்தை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். அது ஏன் கீழடியாக இருக்கக்கூடாது என்று கேட்கிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். கண்ணகி மதுரையை எரித்ததாகப் படிக்கிறபோது, அவளது ஆதரவாளர்கள் ஆத்திரப்பட்டு நகரத்துக்குத் தீ வைத்திருப்பார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அப்போது எரிந்துபோன மதுரையின் அடையாளங்கள் கீழடியில் புதைந்து கிடக்கின்றன என்ற ஊகத்துக்கு ஏன் வரக் கூடாது?
இடையில் நிறுத்துவது நியாயமா?
ஊகங்களை உண்டு அல்லது இல்லை என்று தீர்மானம் செய்வதற்குத்தான் அகழாய்வு. அதைத்தான் அரைகுறையாக முடித்துக்கொள்கிறது மத்திய தொல்லியல் துறை. சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்படுகிற ஒருவர் செங்கல்பட்டைக் கூடத் தாண்டாமல், மதுரை கண்ணில் படவில்லை, ஆகவே மதுரை என்ற நகரமே இல்லை என்று சொல்லித் திரும்புவாரானால் அவரை எங்கே அனுப்பி வைப்பது? தற்போது தோண்டப்பட்ட இடத்துக்குத் தெற்கேதான் கீழடித் தடயங்கள் பரவலாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறபோது, அந்தப் பகுதிகளில் அகழாய்வைத் தொடராமல், சுட்டிக்காட்டப்படாத வடபகுதியில் மட்டும் தோண்டிப் பார்த்துவிட்டு மேற்கொண்டு தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவிக்கிறார்கள்.
அகழாய்வுக்கான தொல்லியல்மேடு பகுதி 110 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. அதில் வெறும் 50 சென்ட் பரப்பில் மட்டுமே தோண்டப்பட்டிருக்கிறது. அதில் வெளிப்பட்ட இடங்களும் கிடைத்த பொருள்களுமே கூட பெரும் வியப்பையும் இலக்கை நெருங்குகிறோம் என்ற பரவசத்தையும் கொடுக்கின்றன. ஆனால், தோண்டியது போதும் என்று அந்த 50 சென்ட் பரப்போடு ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு, ஆய்வுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அப்புறப்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கும் செங்கல்பட்டோடு திரும்பியவருக்கும் என்ன வேறுபாடு?
கீழடி ஆய்வு இப்படிக் கீழே போடப்படுவது ஏன் கடும் கண்டனத்துக்கு உரியதாகிறது? தமிழர் தொன்மையை ஆராயப் புறப்பட்ட மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் வைகைக் கரையோரத்தில் 293 கிராமங்களை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அடையாளப்படுத்தினார்கள். ரோமானியக் காசுகள் உள்ளிட்ட பல பழம்பொருள்கள் கிடைத்ததால் அந்தக் கிராமங்கள் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டது. அவற்றுள் ஒன்றான கீழடியை ஒரு முக்கியமான மையமாகத் தேர்ந்தெடுத்தார்கள். மற்ற ஊர்களில் ஆய்வுக்குத் தகுந்த நிலப்பரப்புகளில் நிலையான கட்டடங்களும் சாலைகளும் கட்டப்பட்டுவிட்டதால் அங்கெல்லாம் அகழாய்வு செய்ய இயலாத நிலை.
கீழடியில் குறிப்பிட்ட பகுதி தென்னந்தோப்பாக இருந்துவருகிறது. அதனால்தான் மண்ணும் தென்னை வேர்களும் சேர்ந்து தொன்மைத் தடயங்களைப் பாதுகாத்து வந்திருக்கின்றன. ஆராய்ச்சியைத் தொடராமல் கைவிட்டால், இந்த இடம் தொடர்ந்து தென்னந்தோப்பாகவே இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வயல் வெளிகளெல்லாம் மனை வணிக வளாகங்களாக்கப்படும் இன்றைய சூழலில் இதுவும் மனை பிரிக்கப்பட்டு, கற்கள் நடப்பட்டு, தொலைக்காட்சி விளம்பரங்களில் மதுரைக்கு அருகில் அருமையான வீட்டடி மனைகள் என்று காட்டப்படுகிற நிலைமை வராது என யாராவது உறுதிப்படுத்த முடியுமா?
இதுவரை கிடைத்தவை என்ன?
இதுவரையில் அந்த 50 சென்ட் பரப்பில் நடத்தப்பட்ட அகழாய்வில் அழிந்துபோன ஒரு பெரும் நகரத்துக்கான தடயங்களாக பல கட்டடங்களின் தரைத்தளங்கள், நீண்ட மதில் சுவர்கள், சுவர்களுக்குள் முத்துகள், தந்தத்தில் செய்யப்பட்ட பொருள்கள், சதுரங்க விளையாட்டுக்கான காய்கள், எண்ணற்ற மணிகள், அக்கால வணிகர்கள் கையாண்ட எடைக்கற்கள், நெசவாளர்கள் பயன்படுத்திய தக்கைகள், மண்பாணைகள், பானை ஓடுகள், அவற்றில் தமிழ் பிராமி எழுத்துகள், பிராகிருதம் உள்ளிட்ட வேற்று மொழிப் பெயர்கள் என்று கிடைக்கப் பெற்றுள்ளன. அரண்மனைகளின் ரகசியக் கருவூலத்துக்குள் செல்லும் கதாபாத்திரங்கள் அங்கிருக்கும் பொன், வெள்ளி, வைர நகைகளைக் கண்டு வாய் பிளப்பதாகக் காட்டும் கதைகளையும் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். அவற்றைக் காட்டிலும் அளவிலா மதிப்பு வாய்ந்த செல்வங்கள் அல்லவா இந்தக் கண்டுபிடிப்புகள்?

ஒரு செங்கல்லில், அது ஈரமாக இருந்தபோது ஏறி ஓடிய ஏதோவொரு விலங்கின் காலடித்தடம் அப்படியே இருக்கிறது. அது அந்தக் காலத்தில், புலியைக் கூட அஞ்சவைத்த ஒரு பெரிய வகை நாயின் காலடித்தடமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. “பாய்ந்தோடிய அந்த விலங்கின் பாய்ச்சல் எத்தனை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துள்ளது என்பதை நினைக்கையில் மெய்சிலிர்க்கிறது” என்று தனக்கே உரிய இலக்கிய அழகியலோடு சொல்கிறார் கீழடி ஆய்வு தொடர வலியுறுத்தி வருகிற வரலாற்றுப் புதினப் படைப்பாளியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளருமான சு.வெங்கடேசன்.
2015இல் கிடைத்த இந்தப் பொருள்கள் நகரத்தின் குடியிருப்புப் பகுதி இருந்ததற்கு உறுதியான சான்றளிக்கின்றன. அந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் சென்ற ஆண்டு நடந்த அகழாய்வில், வியப்பை விரிய வைக்கும் வேறு தடயங்கள் கிடைத்தன. வரிசையான கால்வாய்கள், அவற்றின் முகப்பில் பெரிய தொட்டிகள், அந்தத் தொட்டிகளில் தண்ணீரை உள்ளே செலுத்தவும் வெளியேற்றவுமான அமைப்புகள், கால்வாய்த் தடங்களையொட்டி ஆறு உலைகள், வட்டக் கிணறுகள் ஆகியவை வெளிப்பட்டுள்ளன. மூடிய வடிகால்கள், திறந்த நிலை வடிகால்கள், சுடுமண் குழாய் வடிகால்கள் என மூன்று வகையான வடிகால்கள் இருந்தது தெரியவருகிறது.
இந்தக் கட்டுமானங்கள் எதற்குத் தேவைப்பட்டிருக்கும்? அந்தப் பகுதியில் திட்டமிட்டுச் செயல்பட்ட அக்காலத்துத் தொழிற்சாலைகள் அல்லது பட்டறைகள் இருந்ததற்குச் சாட்சியமாகின்றன. தொழிற்சாலைகள் இருந்தன என்றால், நிச்சயமாக அதையொட்டிய குடியிருப்புகளும், மையமான மேலாண்மை ஏற்பாடுகளும் - அதாவது அன்றைய அரசாங்கமும் - இருந்திருக்கும என்பதை ஊகிக்கப் பெரிய பட்டப்படிப்புகள் தேவையில்லை.
“தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலேயே இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய வேறு இடங்கள் இல்லை” என்கிறார் சு.வெ.
உள்ளதை ஆராய இத்தனை தடைக்கற்களா?
2017இல் ஆராய்ச்சி தொடரும், புதிய தடயங்கள் மீட்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக இந்த ஆண்டுக்கான அகழாய்வுப் பணி தொடங்கப்படாமலே இருந்தது, அதாவது, அதற்கான ஆணை மத்தியிலிருந்து வராமலே இருந்தது. பல போராட்டங்கள், மத்திய அமைச்சர்கள் முன்னிலையிலேயே முற்றுகைகள் என்று நடந்தன. போராட்டம் நடத்தியவர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். அதை விடவும் சிறுமைத்தனமாக, இதுவரையிலான அகழாய்வுப் பணிக்குப் பொறுப்பேற்றிருந்த தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டார். கேட்டால் அது வழக்கமான நிர்வாக முறை இட மாறுதல்தான் என்றார்கள். ஓர் ஆய்வு முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறபோது அதில் எப்படி ஒரு வழக்கமான நிர்வாக முறை குறுக்கிட முடியும்?
அவரை அப்புறப்படுத்திவிட்டு அனுப்பப்பட்ட தொல்லியல் அதிகாரி ஸ்ரீராமன். இவ்வாண்டு ஆய்வுக்கான அனுமதி ஒருவழியாக அளிக்கப்பட்டது. அதன் பிறகும் ஆய்வுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் சிலர் பிரச்னை கிளப்பிய பிறகுதான் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இத்தகைய பின்னணியில் அகழாய்வுப் பணி மிகக் காலதாமதமாகவே தொடங்கப்பட்டது. முன்பு இதில் அக்கறையுள்ளோரும் தகலறிய விரும்பியோரும் தடையின்றி வருவதற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் இப்போது யாரும் வர முடியாமல் கெடுபிடிச் சுவர் எழுப்பப்பட்டது. என்ன நடக்கிறது என்பதைச் செய்தியாளர்கள் உள்பட எவரும் பார்க்க முடியவில்லை. ஒளிப்பதிவுக் கருவிகள் அகழாய்வுக் குழிகளை நெருங்க முடியவில்லை.
(இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளை...)
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com)

கருத்துகள் இல்லை: