திங்கள், 13 நவம்பர், 2017

ஷாலின :எனக்கு லக்ஷ்மியை தெரியும்.... கருணைக்கு பாத்திரமானவள் !

Shalin Maria Lawrence : எனக்கு லக்ஷ்மியை தெரியும்.
[மனித உணர்வுகள்]
ரோட்டில் ஓடும் கார்கள் எல்லாம் ஓரே நிறமா?
தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் புடவை மட்டுமே விரும்பி அணிகின்றனரா ?
காபி எல்லாருக்கும் பிடித்த ஒன்றா ?
வீடுகளின் நிறங்கள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ?
நிற வேறுபாடுகள் ,சுவை வேறுபாடுகள் இவை மனித மனத்தின் ,மனித உணர்வின் வெளிப்பாடுகள் .மனிதனுக்கு மனிதன் உணர்வுகளும் அவை தொடர்பான சுவைகளும் மாறி கிடக்கின்றன என்பதின் வெளிப்பாடு தான் இவை எல்லாம் .
இவளை போல் அவள் இருப்பதில்லை ,அவனை போல் இவன் இருப்பதில்லை ...ஒவ்வொரு செல்லும் ,ஒவ்வொரு dna வும் உன்னில் இருந்து என்னை மாறுபடவைக்கிறது . இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன் .Every human is UNIQUE. அதுவே வாழ்வின் சாராம்சம்
.
ஒரே மாதிரி யோசிக்க ,ஒரே மாதிரி செயல்பட நாம் ஒன்றும் ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோக்கள் கிடையாது .
மனித மனங்களின் இச்சை ,உணர்வுகள் வேறுபட்டதினால்தான் மனிதன் மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினான்.
ஒருவனுக்கு நடப்பது பிடித்திருந்தது ,இன்னொருவனுக்கு அது பிடிக்கவில்லை ,அவன் பறக்க விரும்பினான் .விமானம் கண்டுபிடித்தான் .
இதுதான் மனித இச்சைகளின் வேறுபாடுகளின் சாராம்சம் . இதுதான் இயற்கை நியதி .
மேலே சொன்னதுபோல ஒருவர் என்ன உண்ண வேண்டும் உடுத்த வேண்டும் என்பதே பொதுவாக நடந்திராத இந்த மனித இனத்தில் ஒருவர் எப்படி இச்சை கொள்ள வேண்டும் ,ஒருவர் இன்னொருவருடன் எந்த எல்லைகளுக்குள் பழக வேண்டும் என்பதை நாம் எப்படி தீர்மானிக்க முடியம் ?
உனக்கு புனிதம் என்று படுவது எனக்கு கிடையாது. அதை நீ எப்படி என்னையும் அப்படி யோசிக்க சொல்லி ,உணர சொல்லி நிர்ப்பந்திக்க முடியும் ?
அப்படி பார்த்தால் RSS வகையினரும் பசு புனிதம் ,அவர்கள் பசுவை கொல்ல வேண்டாம் என்று சொல்லுவதற்கும் ,நீ புனிதமாக நினைக்கும் ஒரு வரைமுறையை நான் மீறும்பொழுது நீ என்னை அடக்குவதும் சமமான விஷயங்களே .
[மனித நாகரிகம்]
ஆதியிலே மனிதன் கட்டுக்கடங்காத சுதந்திரதோடு இருந்தான் . அவன் தன் இச்சைகளுக்காக மற்றவரை துன்புறுத்த ஆரம்பித்தான் .அங்கே வேறு உணர்வோடு இருந்த இன்னொருவன் அவனை கட்டுபடுத்த ,மற்றவர்களை தீங்கிலிருந்து காப்பாற்ற ,ஒன்று சேர்ந்து முன்னேற நாகரிகத்தை நிறுவினான் .
இன்னொரு மனிதன் தன் அதிகார இச்சைக்கு நாகரிகத்தை தன் விருப்பப்படி மாற்று அமைத்தான் .
இப்படியாக நாகரிகம் சமுதாய கட்டுப்பாடு என்கிற விஷயத்தை தாண்டி தனிமனித உணர்வுகளில் தலையிட ஆரம்பித்தது .
[லக்ஷ்மி - படம்]
லக்ஷ்மி மெஷின் ஓட்டுகிறாள் ,அச்சகத்தில் .
லக்ஷ்மியும் அதே மெஷினை போல நடத்தப்படுகிறாள் . தினமும் அதே பணி ,Routine வாழ்க்கை .
இங்கே பெண்கள் அப்படித்தான் நடத்தப்படுகிறார்கள் .அச்சகத்தில் அச்சடித்த பேப்பர் போல .அவர்கள் ஒன்று இன்னொன்றின் நகலாக இருக்கவேண்டும் என்று சமுதாயம் நினைக்கிறது . அந்த மெஷினை போலவும் பெண் நடத்தப்படுகிறாள் . சமுதாயத்தை பொறுத்தவரை அவள் கடமை பணி செய்து கிடைப்பதே . மெஷின்களிடம் யாரும் பேசுவதில்லை ,நலம் விசாரிப்பதில்லை ,விருப்பு வெறுப்புகளை கேட்பதில்லை .
ஆனால் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் ,ஆயிரம்தான் இரும்பு பெண் ,குடும்ப குத்து விளக்கு ,பத்திரமாத்து தங்கம் என்று பெண்ணை உலோகங்களுடனையே தீராது இந்த சமூகம் ஒப்பிட்டாலும் ,பெண் என்னவோ புரதம் ,ரத்தம் ,காற்று ,நீர் எல்லாம் சேர்ந்த நரம்புகள் ஹார்மோன்கள் பின்னி பிணைய கிடக்கும் உணர்வுகுவியல்தான் . பலசமயம் இந்த சமூகத்திற்கு அறிவியல் புரிய மாட்டேன்கிறது . என்ன செய்வது .
இந்த படம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது .
இது அவளுடைய பாலியல் இச்சையை பற்றிய படம் இல்லை .இது லக்ஷ்மியின் routine வாழ்க்கையில் அவள் விரும்பிய வித்தியாசம் என்கிற இச்சையை பற்றிய படம் .
தினமும் ஒரே மாதிரி கலவி கொள்கிறாள் ,தினமும் ஒரே மாதிரி உணவு சமைக்கிறாள் ,ஒரே மாதிரி கோணத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறாள் ,ஒரே தலையலங்காரம் ,ஒரே பக்கத்தில் நடக்கிறாள் ,நெற்றியில் இருக்கும் விபூதி கூட ஒரே இடத்தில் சரியாய் .
அப்படிப்பட்ட லஷ்மியின் வாழ்க்கையில் ஒரு நாள் கொண்டாட்டம்தான் இந்த படம். ஒரு ஸ்கூல் குழந்தையின் ஒருநாள் எஸ்கர்ஷின் போல ,picnic போல .Picnic போன இடத்தில் யாரும் தங்குவதில்லை .இந்த விஷயத்தில் லக்ஷ்மீ தெளிவு .இங்கு யாரையும் லக்ஷ்மியை உபயோகிக்கவில்லை .அவள் ஆபிஸ் விட்டு வரும் வழியில் ஒரு திடீர் மாற்றம் அவ்வளவே .
பாலியல் பிரச்சனைதான் முக்கியமென்றால் இயக்குனர் இறுதியில் கதிருடனான அந்த உறவது நன்றாக காட்டி இருக்கலாம் ,அவள் கணவனுடன் ஆன காட்சிகளை காட்டியது போல . அவர்களுக்கும் முழு கலவி நடந்தாதா என்று கூட சரியாக நமக்கு தெரியாது.
அவளுக்கு தேவை பட்டது ஒரு companiyonship . அது அவளுக்கு கிடைத்தது அது எந்த நிலை வரை போனது என்பது அவளின் தனிமனித உணர்வை பொறுத்தது .
ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தின் நீட்சிதான் இந்த படம் . பெண்களுடன் போகாமல் ,ஒரு ஆணுடன் போனால் என்ன சாத்தியங்கள் இருக்கிறதோ அவைகளின் வெளிப்பாடு இந்த படம் .
படத்தில் கணவனுக்கு வரும் போன் கால் காட்சி தேவையில்லாதது . ஒரு பெண் தன் இச்சைக்காக எதுவும் செய்யக்கூடாதா ? கணவனை பழிவாங்குவது மட்டும் தான் அவள் சந்தோஷங்களின் நோக்கமா ?
கிளர்ச்சிடைய பாரதியார் பாட்டா என்று அநேகம் பேர் கிண்டலிடித்துள்ளனர் ...அட பாவிகளா ...காமத்தை பற்றிய உங்கள் புரிதல் இவ்வளவுதானா ? பாரதியார் பாட்டு ,தியாகராஜர் கீர்த்தனை ,தேவாவின் கானா ,மைக்கெல் ஜாக்சனின் பாப் ,தோசை சுடும் சத்தம் என்று எதில் வேண்டுமானாலும் கிளர்ச்சியடையலாம் முட்டாள்களே....அவன் அவன் ...அவன் அவன் விருப்பம் .
படத்தில் என்னை அதிகம் கவர்ந்த விஷயம் "லக்ஷ்மி" என்கிற அந்த பெயர் . காரணம் இரண்டு
1 .லட்சுமி என்கிற அந்த பெயரை சுற்றியுள்ள அந்த புனித பிம்பம் . லக்ஷ்மி பாட்டி கடைத்தெருவுக்கு வெங்காயம் வாங்க போனார் , லக்ஷ்மி அம்மா மகனை ஏர்போர்ட்டில் வழிஅனுப்பினாள் ,லக்ஷ்மி க்கணவனுக்கு தோசை வார்த்து கொடுத்தாள் போன்ற அந்த பெயரை சுற்றிய சினிமா மற்றும் இலக்கிய sterotype களை பட்டென்று போட்டு உடைத்திருக்கிறது இந்த படம் .
2 . நடிகை லஷ்மி .சினிமாவில் gray area என்று சொல்லப்படும் எவரும் துணியாத காதாபாத்திரங்களில் அதிகம் நடித்தது நடிகை லஷ்மிதான் .இதுவரை இது போன்ற உலகம் ஏற்றுக்கொள்ளாத சிக்கலான 15 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது அவர்தான் .மேலும் அவரின் சொந்த மண வாழ்க்கையை கொண்டு பயங்கரமாக விவாதிக்கப்பட்டதும் அவர்தான் .இயக்குனர் இந்த படத்திற்கு லக்ஷ்மி என்கிற இந்த பெயரை தேர்வு செய்தது amazing !
(லக்ஷ்மி-விமர்சனங்கள் )
கமலாதாஸை ஏற்றுக்கொண்டவர்களால் லக்ஷ்மியை ஏற்று கொள்ள முடியவில்லை .ஐயோ பாவம் .
மறுபடியும் ரேவதி இப்படி செய்யவில்லை ,Mr .and Mrs .Iyer இப்படி செய்யவில்லை என்று விமர்சிக்கின்றனர் .
ரேவதி ,கொன்கோனா ,லக்ஷ்மி அனைவரும் ஒரே பெண்களா என்ன ? வேறு வேறு பெண்கள் ,வேறு வேறு விருப்பங்கள் . ஒருவரை போல் ஒருவர் காப்பி அடித்து வாழ இவர்கள் குளோனிங் இல்லையே . Mr .and Mrs .Iyer இல் கொன்கோனா மனதளவில் செம்மையாக சபலப்படுகிறார் . என்னை பொறுத்தவரை மனதின் சபலத்திற்கு முன்னே உடலின் சபலம் ஒன்றுமே இல்லை . பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது ,சில விஷயங்களை மனதில் நினைத்துவிட்டால் போதும் அது உடலளவில் நிகழ்ந்து விட்டதாக தான் அர்த்தம் . எந்த பெண்ணும் மனதளவில் கூட ஒரு நொடி சற்றே இடரவே இல்லை என்று தங்கள் மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா ?
இங்கே லக்ஷ்மி என்கிற பெண்ணின் மீது மோசமான விமர்சனங்களை வைக்கும் ஆண்களின் உளவியல் " என் பொண்டாட்டி நல்லவ " என்று தங்களின் மனதை ஆற்றி கொள்ளும் செயல் .
பெண்களின் உளவியல் " ஐயோ ...சீ... இதெல்லாம் எனக்கு பிடிக்காது ,நான் சமுதாயத்தின் பொது புத்தியுடன் ஒன்றி போகிறேன் ...அப்பொழுதுதான் என்னை அவர்களில் ஒருத்தியாக ஏற்று கொள்ளுவார்கள் என்கிற ஒரு பரிதாப நிலை .
[எனக்கு லக்ஷ்மியை தெரியும் }
எனக்கு ஒரு லக்ஷ்மியை அல்ல ...எனக்கு ஒரு சில லக்ஷ்மிகளை தெரியும். அவர்களோடு நான் பழகி இருக்கிறேன் ,பேசி இருக்கிறேன் . இவர்கள் யாரும் கெட்டவர்கள் கிடையாது ,கணவனுக்கு துரோகம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் உடையவர்கள் கிடையாது ,தங்கள் குடுபத்தின் கடமையிலிருந்து ஒரு நொடி தவறியவர்கள் கிடையாது . அனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் ,ஏதோ ஒரு நொடியில் ,உடல் ரீதியாகவோ ,மன ரீதியாகவோ தங்களின் உணர்வுக்கு இடம் கொடுத்தவர்கள் . ஆனால் பிரச்சனை என்னவென்றால் ,பல பெண்களுடன் சுற்றும் ஆண்களுக்கு இல்லாத ஒரு குற்றவுணர்ச்சி ஏதோ ஒரு நொடி இடறியதற்காக இந்த பெண்களிடத்தில் பல வருடங்களாக இருக்கிறது . தங்களின் கடமையை செய்துகொண்டே குற்றஉணர்ச்சியில் பல வருடங்களாக இவர்கள் ஒரு புழுவை போல் துடித்து கொண்டிருக்கிறார்கள் . அந்த லக்ஷ்மிகளுக்காக எடுக்கப்பட்டதுதான் இதை படம் . குற்ற உணர்ச்சியில் உழன்று கொண்டிருக்கும் லக்ஷ்மிகள் இதன் மூலம் தங்களுக்கு ஒரு சுயமன்னிப்பை வழங்கி இருப்பார்கள் . பல லட்சுமிகளில் சிலராவது அந்த படத்தை பார்த்த பிறகோ ,இல்லை அந்த படத்தை பற்றிய விவாதங்களி கேட்ட பிறகோ அந்த இரவு நிம்மதியாக உறங்க சென்றிருப்பார்கள் .
லக்ஷ்மியை பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் நிரம்பியது . எதனை லக்ஷ்மிகள் தங்கள் சுய விருப்பத்திற்காக தீர்ப்பிலிடப்பட்டு சிலுவையில் அறைய பட்டிருப்பார்கள் ,எதனை லக்ஷ்மிகள் சமுதாய பார்வைகளுக்கு அஞ்சி ஒரு கொடுமையான வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட தங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்யாமல் ஒரு மெஷின்போல் மாறியிருப்பார்கள் ?
இதெல்லாம் ஒரு கஷ்டமா ? பெண் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயம் பல இருக்கிறது என்று உளரும் பலரும் லக்ஷ்மிகளின் அந்த நிலையில் இருந்திராமலேயே அந்த நிலையை பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசுவது எவ்வளவு பெரிய பொது புத்தி இகழ்ச்சி .
தலைவலியும் ,வயிற்றுவலியும் வராத நீங்கள் அதை பற்றி எப்படி விமர்சிக்க முடியும் ?
என்னிடம் counselling கிற்கு வரும் பல பெண்களுக்கு இந்த பிரச்சனைகள் இருக்கிறது . அவர்கள் தினம் தினம் நரகத்தில் வாழ்கிறார்கள் அவர்களுக்கு இதெல்லாம் முக்கியம்தான் .
கருணையை விட ஒரு பெரிய விஷயம் இருக்கிறது அதற்கு பெயர் " Empathy " மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து கற்பனையான மற்றொருவரின் அனுபவத்தை அனுபவித்தல்.அப்படி செய்ய முடியாதவர்களால் ,மற்ற வர்களின் துன்பத்தை எந்த காலத்திலும் புரிந்து கொள்ள முடியாது ,விமர்சனம் மட்டுமே செய்யய முடியும் .
நான் எப்பொழுதும் சொல்லுவேன் ,கருணை மறுக்கப்பட்ட இடங்களில் கருணை செலுத்துவதை விட உன்னதம் கிடையாது . லக்ஷ்மி நிஜத்தில் இருப்பவளோ ,பொய் பிம்பமோ எப்படி இருந்தாலும் நிறைய கருணைக்கு பாத்திரமானவள் .
கருணை பயில்வோம் .
#லக்ஷ்மீ #Lakshmi
ஷாலின்

கருத்துகள் இல்லை: